walker_003மிக குறுகிய காலத்திற்குள் லண்டனில் இருந்து ஜெனீவாவை நோக்கி கவனயீர்ப்பு நடை பயணம் ஒன்றை புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரான திரு சதாசிவம் சத்தி அவர்கள் மேற்கொண்டுள்ளார். நடை பயணத்தை மேற்கொண்டுவரும் உணர்வாளர் திரு சத்தி அவர்களை மிகுந்த சிரமத்தின் மத்தியில் தணல் இணைய ஆசிரியர் செவ்வி கண்டார். நடைப்பயணத்தின் நோக்கம் பற்றி வினவிய போது அவர் தெரிவிக்கையில்,

‘ஈழத்தின் முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதத்துடன் ஓய்ந்த உள்நாட்டுப் போர் வடிவம் மாறாது சத்தமற்ற துப்பாக்கி வேட்டாக தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக சிங்களம் இன அழிப்பை முதன்மையாக கொண்டு புரிந்துவரும் அநியாயங்கள் கணக்கிலடங்கா.

சர்வதேச சமூகம் இவற்றையெல்லாம் கண்டும் மெளனமாக இருப்பது சிங்களத்தை மேலும் செய்ய தூண்டுவதாகும். வாய் திறந்து சுதந்திரமாக பேசமுடியாத நிலையில் ஈழத்தில் தமிழர்கள் மெளனிகளாக இருக்கின்றனர். பதில் தரவேண்டியவர்களும், நீதிவழங்கவேண்டியவர்களும் சர்வதேச ஐக்கிய நாடுகளே. புலம்பெயர்ந்து வாழும் நாம் ஐக்கியநாடுகளின் சூழலிலேயே வாழுகின்றோம்.

எமக்கான கருத்துக்களைச் சொல்வதற்கு எமக்கு சுதந்திரமுண்டு. சர்வதேசங்களில் வாழும் நாம் இந்த சுதந்திரத்தை பாவித்து நீதிவழங்க கோரி ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றாற்போல் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் உதாரணங்களில் ஒருவனாக இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு சர்வதேசத்தின் கவனத்தை எம்பால் திருப்ப முயற்சிக்கிறேன்.

அத்துடன் தனது இந்த நடை பயணத்திற்கு அனைத்து தமிழ்மக்களும், தமிழ் அமைப்புக்களும் பேதங்களையும், கருத்து வேற்றுமைகளையும் மறந்து ஊக்கமும், உற்சாகமும் அளிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டதோடு மேலும் 4 ம் திகதி பங்குனி மாதம் ஜெனீவாவிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெறும் கட்டடத்தொகுதிக்கு முன்பாகவுள்ள முன்றலில் அலையென திரண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்.

மிக மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாது இலண்டனிலிருந்து பல நூறு மைல்களை கால்நடையாக கடந்து வந்திருக்கும் சத்தி அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்படும் விபத்துக்களாலும், வாகன நெரிசல்களாலும் தான் வழமையாக நடக்கவேண்டிய தூரத்தை விட வழிகளை தவற விட்டும், மாற்று வழிகளாலும் பல மைல்கள் கூடுதலாக நடந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்’.

தணல்