மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது.
அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாதங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாமென்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார். அமெரிக்காவின் வசந்த அழைப்பும், தென்னாபிரிக்கா பயணமும், மார்ச் மனித உரிமைப் பேரவையில் சிங்களத்திற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறும் என்கிற  எதிர்பார்ப்பும் இணைந்து ,சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதுதான் சம்பந்தனின் கணிப்பு. இவ்வகையான பிழைத்துப்போன கணிப்பீடுகளின் பின்னடைவு வரலாறுகளை நாம் பல தடவைகள் எதிர்கொண்டுள்ளோம்.
வீர வசனங்கள் பேசும்போது, தேர்தல் மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அது வட மாகாண சபைத் தேர்தலாகவும் இருக்கலாம்.
இருப்பினும் எப்போது தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதனை சகல வல்லமை பொருந்திய மகிந்தரே தீர்மானிப்பார் என்பதுதான் உண்மை.
மாகாணசபைத் தேர்தல் குறித்து ,உலக மகா கருத்துருவாக்கிகளான ‘சர்வதேச நெருக்கடிக்குழு’ [ICG] எத்தனை பரிந்துரைகளை வழங்கினாலும், சிங்களம் அசையப்போவதில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் அடிபணிய மாட்டோமென்கிற செய்தியை , தேசப்பற்றுள்ள அமைப்புக்களின் கூட்டமைப்பு ஊடாக, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகிந்த ஆட்சியாளர் வெளிப்படுத்தி வருவதைக்  காண்கிறோம்.
இம்மாதம் 26 ஆம் திகதியன்று , அமெரிக்க இராஜாங்க திணைக்கள பிரதி உதவிச் செயலாளர்களான விக்ரம் சிங் , ஜேம்ஸ் மூர் மற்றும் ஜேன் சிமர்மான் போன்றோர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக செய்தி வெளிவந்தவுடன், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கடும் கண்டனத்தை வெளியிட ஆரம்பித்துள்ளார்.  பேரினவாதம் மேற்கொள்ளும் இன ஒடுக்குமுறையை மூடிமறைக்கும் கருவியாக,  ஏகாதிபத்திய எதிர்ப்பு தொழில்படும் என்று அவர் முடிவெடுத்து விட்டார் போல் தெரிகிறது.
அதேவேளை இம்மூவரின் வருகை , ஜெனீவா இராஜதந்திரச் சமருக்கு அமெரிக்கா விடுக்கும் அறைகூவல் என்பதாக அமையும் என்கிறார் இந்தக் கலாநிதி.
அதாவது பயணிப்பவர்களின் நிகழ்ச்சிநிரலில்,   அரசியல் தீர்வொன்று  உடனடியாக எட்டப்பட வேண்டும்  என்கிற விடயம் உள்ளடக்கப்படலாம் என்று இச் சிங்கள கடும்போக்குவாதிகள் பதட்டமடைகிறார்கள் . அவ்வாறெல்லாம், அமெரிக்காவின் திட்டத்தில், ‘தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடு’ என்பதான பிறப்புரிமைக்  கோட்பாடுகள்  இருக்கப்போவதில்லை. அதனை சர்வதேச நெருக்கடிக் குழுவும் தெளிவாக முன்வைத்து விட்டது.
‘நீங்கள் எந்தவகையான அழுத்தங்களையும் எமக்குக் கொடுக்கலாம். ஆனால் தீர்வு குறித்த விடயத்தில் மட்டும் தலையிடாமல் இருந்தால்  போதும்’ என்பதுதான் ஒட்டுமொத்த பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் பெருவிருப்பாக இருக்கிறது. அதனையும் மீறி எம்மீது போர்க்குற்றங்கள் , மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு என்கிற பேராயுதங்களை பிரயோகித்தால், நாம் சீனாவிடம் சரணடைவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்பதனை குணதாச அமரசேகர மட்டுமல்ல கோத்தபாய இராஜபக்சேவும்  சொல்ல ஆரம்பித்து விட்டார்.
இந்த சீனச் சரணடைவுதான் எமக்கான முதல் வாசலைத் திறக்குமென தமிழ் மக்கள் எதிர்பார்கின்றார்கள். அதனைத் தடுப்பதற்காகவே மேற்குலகும் இந்தியாவும் பல காய்நகர்த்தல்களை தீவிரமாக மேற்கொள்கின்றன.
அண்மையில் கொழும்பு கில்டன் விடுதியில் நடைபெற்ற இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வொன்றில் உரையாற்றிய பாதுக்காப்புச் செயலாளர் கோத்தபாய ,இலங்கைப் படையினருக்கு புலமைப் பரிசில்களை வழங்காவிட்டால் சீனாவிடம் செல்வோம் என்று அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை புரிந்த கட்டளைத்தளபதிக்கு பயிற்சி வழங்கினால் , மனித உரிமைச் சங்கங்கள் போர்க்கொடி தூக்கி தம் மீது அழுத்தங்களைக் கொடுக்கும் என்பதால், அதனை நிராகரித்ததாக அமெரிக்கத் தரப்பு சொல்வதை கோத்தபாய ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு யாரையும் அனுப்புங்கள் நாம் பயிற்சி கொடுக்கின்றோம் என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு. ஆகவே சிங்களத்தின் உறவினை முற்று முழுதாக முறித்துக்கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
கோத்தபாயாவின் இச்செய்தி இந்தியாவிற்கும் பொருந்தும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை , அமெரிக்கா  போன்று போர்க்குற்ற அழுத்தங்களை சிங்களத்தின் மீது பிரயோகிப்பதில்லை. வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரீஸை அழைத்து, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தே இந்தியா பேசும்.
இருப்பினும் இந்தியாவின் வழி நடத்தலில் பயணிக்கின்றோம் என்று பிடி கொடுக்காமல் பேசும் கூட்டமைப்பினர் மத்தியில் , அந்தப் பயணப் பாதை முட்களால் நிரம்பிய வலி நிறைந்த பாதை என்று கூறத் தொடங்கி விட்டார் சுரேஷ் பிரேமச்சந்திரன் . இலங்கை குறித்தான இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் , தற்போது தென்னாபிரிக்கா எடுக்கும் முயற்சியிலும் நம்பிக்கை இல்லை என்கிறார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் ‘தினக்குரல்’ பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் சுரேசின் இந்த ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது. ஆனாலும் தென்னாபிரிக்காவின் நகர்வில் நம்பிக்கையற்றவர்கள்  , உலகத் தமிழர் பேரவையின் பொதுப் பிரகடன மேடையில் ஏன் கலந்து கொள்கிறார்கள் என்று புரியவில்லை. அமெரிக்கப் பின்னணியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்காமல் தவிர்த்தால், சம்பந்தன் கூறும் ‘மாற்றங்கள் ஏற்படும்’ என்கிற வீர வசனம் அர்த்தமற்றதாகிவிடும் என்பதால் கலந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.
வல்லரசுகள் பயன்படுத்தும் மென்போக்கு, கடும்போக்கு இராஜதந்திரங்கள் , யாருடைய நலன்களுக்காகப் பிரயோகிக்கப்படுகின்றது  என்பதனைப் புரிந்து கொள்ளாவிட்டால், எல்லாமே எமது நன்மைக்காகத்தான் நடக்கிறது என்று மக்களை ஏமாற்ற இலகுவாகவிருக்கும் .
உதாரணமாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கைது குறித்து ,ஒட்டு மொத்த உலகத் தமிழ் சமூகமும் வெகுண்டெழுந்தபோது மௌன விரதமிருந்த வல்லரசாளர்கள், சிங்கள அதிகார மையம் பிரதம நீதியரசி சிராணி பண்டாரநாயக்க மீது குற்றப்பிரேரணையை முன்வைத்தவுடன், இலங்கையின் ஜனநாயக மணி உடைந்து விட்டதென ஆர்ப்பரித்தார்கள். 18 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது  அசிரத்தையாக இருந்தவர்கள், அச்சட்டம் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு சிராணியைப் பதவியிலிருந்து  நீக்கியவுடன் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும், அரசியலமைப்பையே மாற்ற வேண்டும் என்கிறார்கள்.
ஆட்சியை மாற்றினால் எல்லாமே மாறிவிடும் என்போர், அரசியலமைப்பில் முழுமையாக மாறுதல்களை ஏற்படுத்தாமல் , தேசிய இனச் சிக்கலுக்கு தீர்வினைக் கண்டடைய முடியாது என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சரத் போன்செக்கா, அல்லது ரணில் விக்கிரசிங்கா அல்லது புதிதாகக் களமிறக்கப்படவுள்ள சந்திரிக்கா குமாரணதுங்க பதவிக்கு வந்தாலும், பௌத்தமே நாட்டின் மதம், சிங்களமே நாட்டின் ஆட்சி  மொழி என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட  குடியரசு யாப்பினை புறந்தள்ள, மகா நாயக்க தேரர்களும் அஸ்கிரிய பீடாதிபதிகளும்   தேசப்பற்றுள்ள தேசிய இயக்கப் பிதாமகர்களும் அனுமதிப்பார்களா?. இனவாத அரசியல் பேசாமல் இவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா?.
ஆட்சிக்கு வந்தால் சனாதிபதி முறைமையை மாற்றியமைப்போம் என்று மக்களுக்குப் பொய்யுரைத்து பதவிக்கு வந்தவர்கள், அந்நாற்காலியைக்  கட்டிப்பிடித்து , அதிகாரங்களை மேலும் குவித்துக் கொண்டதுதான் வரலாறு.
பிடியாணை இல்லாமல் கைது செய்யப்பட்ட ஒருவரை , 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும்  என்கிற சட்டத்தை, 48 மணி நேரமாக அதிகரித்துள்ளது இலங்கை நாடாளுமன்றம். ஆனால் பயங்கர வாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு வெலிக்கந்தை முகாமில் புனர்வாழ்வு அளிக்கலாம். நீதி மன்றம் இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முறையிட்டால், அதற்கு எதிராக ஒரு வழக்குப் போடுகிறோம் என்று வீர வசனம் பேசுவார்கள். இவர்கள் போடும் வழக்குகள் சிங்களத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமே  தவிர , தீர்வினைப் பெற்றுக் கொடுக்காது.
ஆக மொத்தம், மக்களின் இறைமை தற்போது மகிந்தரின் கைகளிலும் , நாடாளுமன்ற வளாகத்துள் மட்டுமே அடங்கிக் கிடக்கிறது. ஆனால் இங்கு தமிழ் பேசும் மக்களின் இறைமை பற்றி பேச வேண்டிய  அவசியமே இல்லை. ஏனெனில் அது சிங்கள ஆட்சியாளர்களின் கைப்பிடிக்குள் 1948 இலிருந்து அமுங்கிக் கிடக்கிறது. அதனை மீட்கப் போராடியவர்களையே,  ஜனநாயக மறுப்புவாதிகள் என்று சிங்கள நாடாளுமன்றில்  சம்பந்தன் கூறியிருந்தார்.
‘ஒரு உண்மை தெரிஞ்சாக வேண்டும் ‘ என்று எவராவது விரும்பினால், இந்தியாவின் அல்லது அமெரிக்காவின் இலங்கை குறித்தான மூலோபாயத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த, கூட்டமைப்பால் இல்லையேல் உலகத் தமிழர் பேரவையால்   முடியுமா என்கிற கேள்வியை கேளுங்கள். ‘சுயநிர்ணய உரிமை ‘ என்கிற தமிழினத்தின் பிறப்புரிமையை ஏற்றுக் கொள்ள மறுக்கும்,சர்வதேச நெருக்கடிக் குழு மற்றும் இப்பிரச்சினையில் தலையிடும் வல்லரசு நாடுகளிடம் , எமது  பிறப்புரிமையை விட்டுக்கொடுக்க முடியாதென சம்பந்தனால் கூற முடியுமா?.
திருமலையில் பேசிய இந்த வீர வசனத்தை, சர்வதேச அரங்கிலும் சம்பந்தன் சொல்வாரா? . பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கின்றேன்.
இதயச்சந்திரன்