வறுமையால் இறந்தவர்களும் உண்டு

வறுமைக்காக இறந்தவர்களும் உண்டு

தமிழீழத்தின் தலைநகர் திருக்கோணமலையின் பொருளாதார வளமிக்க பகுதியான மூதூர் பிரதேசத்தில் ஷாபி நகரை சொந்த இடமாகக் கொண்டவர்கள் ரிசானாவின் பெற்றோர்கள்.

ஒருபுறம் கடல்வளம் மறுபுறம் மகாவலி கங்கை வளம். இரு பெரும் வளங்களை உள்ளடக்கி இருந்தாலும் அங்கு வாழ் தமிழ் பேசும் மக்களால் வறுமைக் கோட்டை தாண்டி வாழவே முடியவில்லை. இதன் காரணம் என்ன?

கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாது. இராணுவ கட்டுப்பாடும் கெடுபிடியும்.

கங்கை வளத்தைக் கொண்டு விவசாயம் செய்ய முடியாது. இராணுவ கட்டுப்பாடும் கெடுபிடியும்.

இன வன்முறை உச்சமடையும் காலத்தின் முன் ரிஷானாவின் தந்தை ஜனாப் நபீக் அருகிலுள்ள தமிழ்க்கிராமத்தில்(மல்லிகைத்தீவு) தாய் பிள்ளை சகோதரம்போல் வாழ்ந்து விவசாயம், கால்நடை பராமரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வறுமையின்றி வாழ்ந்திருந்தார்கள். திருமணத்தின் பின் பெருமளவு தமிழ்க்கிராமங்களும் முஸ்லீம் கிராமங்களுக்குமிடையிலான விவசாய தானியங்களை ஏற்றியிறக்கும் “வண்டில் தொழில்” செய்து வாழ்ந்திருந்தார். மெதுமெதுவாக தமிழரின் உரிமைப் போராட்டம் உயர்ந்து, பின்னர் சகோதர இனங்களுக்கிடையிலான போராட்டமாக(தமிழ்-முஸ்லீம்) இலங்கை அரசு தடம் மாற்றும் வரை ஜனாப் நபீக்கின் குடும்பம் வறுமையின்றி வாழ்ந்திருந்தது. தமிழ்-முஸ்லீம் முறுகல் இரு பகுதியினரின் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உழைக்க பலமும், வளமும் இருந்தும், உழைக்க வழியின்மையால் வறுமை அவர்களை வாட்டியிருந்தது.

இந்த வேளையில் வளைகுடா நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு அதிலும் முஸ்லீம் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்பட்டது. வறுமையை ஆதாரமாகக் கொண்டு குறைந்த ஊதியத்தில் பெண்கள் வளைகுடாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். கட்டுப்பணமின்றி, பயணச் செலவுகளுமின்றி பெண்களை ஏற்றுமதி செய்ய பல ஏஜெண்டுகள் முன்வந்தனர்(தமிழ்ப் பெண்களும் இஸ்லாமியப் பெயருடன் சென்றதற்கான ஆதாரங்களுமுண்டு).

கொழும்பு தெரிந்தவர்களும், சிங்களம் தெரிந்தவர்களும், சண்டித்தனம் தெரிந்த வாயாடிகளும், பெரும்பாலான ஏமாற்றுக்காரர்களும் ஏஜெண்டுகளாக தொழிற்பட ஆரம்பித்தனர். இலகுவான நோகாத கொள்ளை இலாபம் கூடிய தொழிலாக மாற்றம் பெற்றது. களவுகளும் பித்தலாட்டங்களும் மூலதனங்களான இந்த தொழிலுக்கு மேலாதிக்கம் கொண்ட சண்டித்தனம் மிக்க சிங்களவர்கள் பக்கபலமாக இருந்தார்கள்(பெரும் அரசியல் வாதிகளும் இந்த வலைக்குள் வீழ்ந்து பணம் சம்பாதித்து அரசியல் நடாத்திக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது).

வறுமைச்சக்கரத்தில் அகப்பட்ட நபீக்கின் குடும்பம் மீளமுடியாது தவிக்கையிலே, தன் மகள் ரிஷானாவை வளைகுடாவிற்கு அனுப்புவதற்கு ஏஜென்ட் ரூபத்தில் காலன் வந்திறங்கினான். வேறு வழியும் இருக்கவில்லை. குடும்பத்தின் பட்டினிச்சாவை எதிர்கொள்ள 14 வயது மூத்த பிள்ளை ரிஷானா குருஷேத்திர யுத்தத்திற்கு துணிந்தாள் வயது முதிர்வின்மை தடையாகவிருந்தது. ஏஜெண்டான அஜீர்தீன் குறுக்கு வழியை காண்பித்தான். 1988 இல் பிறந்த ரிஷானா 1982 இல் புதிய பிறப்பெடுத்தாள். 2005 ம் ஆண்டு வறுமையை வெல்ல ரிஷானா வளைகுடா பறந்தாள்.

புரையடித்து இறந்த பிள்ளையை கழுத்தை நெரித்து கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டாள் ரிஷானா. தமிழைத்தவிர வேறு பாஷை அறிந்திருக்க மாட்டாள். மொழிப்பிரச்சனை ரிஷானாவை மேலும் குற்றவாளியாக்கியது.

குழந்தையை ரிஷானா தான் கொன்றதாக கர்நாடக மொழிபெயர்ப்பாளர் கூறினார். அதே வேளை தமிழ்நாட்டு மொழிபெயர்ப்பாளர் தான் கொல்லவில்லை என மொழிபெயர்த்தார். இந்த முரணுக்கிடையில் ரிஷானா குற்றத்தை ஏற்றுக்கொண்டார் என்பதுதான் வெற்றி பெற்றது. இதன் மர்மம் இன்றும் புலப்படவில்லை. இது துலங்கியிருந்தால் தண்டனையில் மாற்றம் ஏற்பட்டிருக்குமா?

கடந்தவாரம் ரிஷானாவின் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் இட்ட கூக்குரல்களால் எந்த இலாபமும் இல்லை. இப்போது எழும் பிரச்சனைகளும் தீர்வுகாணப்பட வேண்டியதும், தண்டனை கொடுக்கப்படவேண்டிவைகளும் எவற்றிற்கு? இலங்கை அரசு எப்படி சுத்தப்படுத்திக் கொள்ளப்போகின்றது? சவூதியிலிருந்து இலங்கைத் தூதுவரை திருப்பி அழைப்பது தீர்வாக அமையாது.

* இன வன்முறைகளுக்கு தீர்வுகாணாமல் தமிழ்ப்பேசும் மக்களின் பொருளாதாரத்தை திட்டமிட்டு நலிவடையச் செய்து வறுமையை ஏற்படுத்திய அரசியல்வாதிகள் தலைகள் தீர்வாகுமா?

* ஊழல் மலிந்த அரச நிர்வாகத்தால் ரிஷானாவின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை மாற்றி வயதைக் குறைப்பதற்கு ஒத்துளைத்தவர்களின் தலைகள் தீர்வாகுமா?

* திருட்டு வழிகளைக் காட்டும் எஜெண்டுகளினதும் குழுக்களினதும் தலைகள் தீர்வாகுமா?

ஒரு குற்றத்திற்கு தண்டனை வழங்குவது மீண்டும் அக்குற்றத்தை எவரும் செய்யாதிருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

பாவம் ஒன்றுமே அறியாத சிறுபிள்ளை ரிஷானாவிற்கு மரண தண்டனை கொடுத்து விட்டால் தப்பான வழியில் செல்பவர்களுக்கு எந்தவித பாடத்தையும் புகட்டாது. தப்பித்துவிடலாம் என்ற இறுமாப்பே ஏற்படும்.

ஆகவே உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டுமெனில் ரிஷானாவிற்கு தப்பான வழியைக் காட்டியவர்களுக்கு ரிஷானாவிற்கு கொடுத்த தண்டனையை கொடுப்பதேயாகும். அப்போதுதான் பல ரிஷானாக்கள் காப்பாற்றப்படுவார்கள். நாட்டில் வறுமை ஒழிந்து சுபீட்சம் மலரும்.

தசக்கிரீவன்

info@thanall.com