ஒரு சமூகத்தை முற்றாக அழிக்க வேண்டும் எனின் அதன் பண்பாடுகள், மொழி போன்றவைக்கு அடுத்ததாக கல்வியும், பொருளாதார வளமும் ஆகும். இந்த அழிப்பின் ஆக்கபூர்வமான தனது செயற்பாட்டை இலங்கை அரசு தமிழருக்கு எதிராக பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே ஏற்படுத்தி இருந்ததென்பது ஒரு வரலாற்றுத்தகவல். இது இன்றுவரை தொடர்கின்றது என்பது நிகழ்காலத் தரவு.

தமிழரின் கல்வியை அழிக்கவேண்டும் என்பது இலங்கை அரசினால் எதேட்சையாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. மிக நீண்டகாலமாக ஆய்வு செய்து எடுக்கப்பட்ட தீர்வு. உதாரணத்திற்கு யாழ் நூலகம் 1981 இல் எரிக்கப்பட்டதை கூறலாம். தமிழ் சமூகத்தின் கல்வி அழிப்பு பற்றி ஒரு புள்ளிவிபரக் கணக்கு எடுப்போமாயின் பொருளாதார அழிவை விட கல்வி அழிவு கூடியிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். சிங்களத்தின் நோக்கம் கல்வியழிப்பிலேயே பிரதானமாக தங்கியிருந்தது என கூறலாம். சிங்களத்தின் நினைப்பிற்கு மாறாக புலம்பெயர்ந்து வாழுகின்ற சமூகத்தின் பின் வாரிசுகள் புலம்பெயர் நாடுகளில் கல்வியில் உச்சம் பெற்றுக்கொண்டிருப்பதைக் காணலாம். எதிர்காலத்தில் இது மிகப்பெரிய தலையிடியை சிங்களத்திற்கு வழங்கப் போகின்றது என்பது நிதர்சனம்.

2006 தை 2 ம் திகதி இரவு திருக்கோணமலையே „ஓ“வென்று கதறி அழுத கரிநாள். பல்கலைக்கழக மாணவர்களை துடிக்க துடிக்க கடற்கரைக்கு முன்பாக கோணேஸ்வர ஆலயம் புகு வழியில் இரத்த வெள்ளத்தில் மிதந்திருந்த கொடூரக் காட்சி ஆண்டுகள் 7 கடந்தும் மனக்கண்ணில் விரிந்து நிற்கின்றது. மரணித்த 5 பல்கலைக்கழக மாணவர்களான மனோகரன் ரஜிகர், லோகிதராஜா ரொஹான், யோகராஜா கேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், தங்கத்துரை சிவானந்தா ஆகியோரின் இழப்பின் துயரினை அனுஸ்டிக்கும் அவர்களது பெற்றோர் உறவினர்களுடன் “தணல்”க்குழுமமும் இணைந்து கொள்கிறது.

தமிழர்களுக்கான கல்வியை வழங்கக்கூடாதென்பதற்காக தமிழ்க்கல்விச் சமூகத்தை அழிக்கும் அதர்மமான கொடூரச்செயல் உலகில் எங்குமே காண முடியாது. இந்த நிலை நீடிக்கக் கூடாதென்பதற்காக புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தினர் அடங்கலாக அனைத்து தமிழ்மக்களுக்கும் வழங்கும் செய்தி யாதெனில் உங்கள் ஒவ்வொருவரது பிள்ளைகளையும் கல்வியின் உச்சத்திற்குக் கொண்டு செல்வது உங்களுக்கான கடமைகளுக்கும் அப்பால் தமிழ்இனத்திற்கான சமூகக் கடமையாகவும் உள்ளது என்பதை இந்த மரணித்த பல்கலைக்கழக மாணவர்களின் ஆத்மாக்களுக்கான அர்ப்பணிப்பாக இதனை ஏற்றுக்கொள்வோம்.

“தணல்”க்குழுமம்