தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உரை, பல அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேதினக் கூட்டத்தில் சிங்கக் கொடி பிடித்ததை சரியென்று நியாயப்படுத்தி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டுமொரு சர்ச்சை அவரது நாடாளுமன்ற உரையால் கிளம்பியுள்ளது.

தான் சொல்வது சரியென்பதில், எப்போதும் உறுதியாகவிருக்கும் அரசியல்வாதி அவர். புலிகளைத் திட்டித்தான், சிங்களத்தினதும், வல்லரசாளர்களினதும் ஆதரவினைப் பெறவேண்டுமென நினைத்தால் அதையும் செய்வார் அப்பெருமகன். ஆனால் அவர்களின் சொந்த நலன்கள், எமக்கான பிறப்புரிமையை  அங்கீகரிக்காது என்பதுதான் நிஜம்.

ஆகவே, இனிமேல் கிழிபடப்போகும் ஒப்பந்தங்கள் பற்றியதான ஜாக்கிரதை உணர்வு எம்மிடம் நிறையவே இருக்க வேண்டும். அனைத்துலக நெருக்கடிக் குழுவின் [ICG ]அண்மைய அறிக்கையை அவர் தெளிவாகப் புரிந்துள்ளார். நாம் விடுதலைப் புலிகளை நிராகரிப்பதால் , நீங்களும் நிராகரிக்க வேண்டுமென மேற்குலக ஆலோசனைக்குழு அழுத்தமாகச் சொல்வதால் , தாளம் தப்பாமல் இலங்கைப் பாரளுமன்றத்தில் அவரும் அதனை வாசித்துள்ளார்.

சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டில் விடுதலைப்புலிகள் உறுதியாக இருந்ததால் மேற்குலகும், இந்தியாவும், சீனாவும் அவர்களை வெறுத்தார்கள். ஆனால் சம்பந்தனின் வெறுப்பிற்கான காரணம் என்ன? 1977 ஆம் ஆண்டில் தேர்தல் அரசியலிற்குள் நுழைகிறார் சம்பந்தன். திருமலையில் கூட்டணிசார்பாக எவரை போட்டாலும், அவர் வெல்வார் என்பது எழுதபடாத விதி . அதற்கேற்ப எதுவித எதிர்ப்புமின்றி சம்பந்தன் அவர்களின் நாடாளுமன்ற அரசியல் வாழ்வு தடையின்றி நகர்ந்தது.

ஆனாலும் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் விடுதலை புலி ஆதரவு சுயேட்சைக்குழு திருக்கோணமலையில் வெற்றிபெற்றதால் கூட்டணி ஓரங்கட்டப்பட்டது. இங்கிருந்தான் ஆரம்பமாகிறது புலிகள் மீதான சம்பந்தனின் கோபம் என்கிற முடிவிற்கு வருவதில், தவறில்லை போல் தெரிகிறது. போராட்டத்தினூடாக, தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகள் செலுத்திய ஆளுமையை புரிந்து கொண்ட சம்பந்தனும் அவரது கூட்டணியும், சமாதான ஒப்பந்தத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் இணைந்து கொள்கிறார்கள். ஆனந்தசங்கரியோடு ஏற்பட்ட கூட்டணிக்கு உரிமை கோரும் பிரச்சனை, இவரை மறுபடியும் தமிழரசுக் கட்சியை நோக்கி நகர்த்தியது.

மே 2009 ஆம் ஆண்டு பேரழிவின் பின்னர் நடைபெறும் மாற்றங்களை அவதானித்தால், கூட்டமைப்பினுள் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் காரியத்தில் சம்பந்தன் அவர்கள் முனைப்போடு செயலாற்றுவதைக் காணலாம். கூட்டமைப்பை பதிவு செய்வதில் உள்ள தயக்கம் முதல், தமிழரசுக் கட்சிக் கிளைகளை வட-கிழக்கெங்கும் நிறுவுவது வரை சம்பந்தனின் நிகழ்ச்சிநிரல் தெளிவாகத்தான் நகர்கிறது.

அதேவேளை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும், அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும், நடைபெறுவது இனப்படுகொலை என்பதனை உரத்துச் சொல்லவேண்டும் என்கிற பல விடயங்களில் உறுதியாகவிருக்கும் ,தமிழரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் மாவை.சேனாதிராஜாவிற்குப் பதிலாக, சுமந்திரனை உயர்த்திவிட வேண்டும் என்பதில் சம்பந்தன் இறுக்கமாகவிருப்பதில் பூடகமான செய்தியும் உண்டு.

நாடாளுமன்றில் சம்பந்தன் ஆற்றிய பேருரையில், புலிகளைச் சிங்களமும் , சர்வதேச வல்லரசாளர்களும் நிராகரிப்பதால், தமிழ் மக்களாகிய நீங்களும் நிராகரியுங்கள் என்கிற வேண்டுகோளை அவர் விடுக்கின்றரா ? அல்லது உங்கள் நிகழ்ச்சி நிரலோடு இணைந்து செல்ல தான் தயார் என்பதை மேற்குலகிற்குச் சொல்ல வருகிறாரா? என்கிற சந்தேகம் இருந்தாலும், சிங்களத்தோடு அவர்கள் விரும்பும் இணக்கப்பாட்டு அரசியலிற்குள் தன்னை பிணைத்துக்கொள்ள சம்பந்தன் தயாராகிவிட்டார் என்பதையே இவ்வுரை உணர்த்துகிறது.

‘நான் புலிகளின் தாக்குதல் பட்டியலில் முதல் மனிதனாக இருந்தேன், அவர்களிடம் ஜனநாயகம் இல்லை’, என்று கோள் சொல்லும் சம்பந்தன் அவர்கள், 2009 ஆம் ஆண்டுவரை இது குறித்துப் பேசவில்லை. 2010 இலும் சொல்லவில்லை. 2011 இலும் மூச்சுவிடவில்லை. ஆனால் அனைத்துலக நெருக்கடிக் குழுவின் அறிக்கை வந்த பின்னரே இப்படிப் பேசுகிறார்.

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் கொல்லப்பட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் பற்றி சம்பந்தன் பேசவேயில்லை. முள்ளிவாய்க்காலில் அழித்தொழிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் குறித்தோ அல்லது இறுதிப்போரில் வணபிதா பிரான்சிஸ் மற்றும் வணபிதா ரெஜினோல்ட் அவர்கள் முன்னிலையில் சரணடைந்த, ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியோ சம்பந்தன் வாய் திறக்கவில்லை.

இறுதிவரை கூடிக்குலாவி உண்டு மகிழ்ந்தோரே தன்னைக் கொலை செய்யத் தருணம் பார்த்தார்களென்று யாரிடம் சொல்கிறார் சம்பந்தன்? இவைதவிர, விடுதலைப்புலிகளிடம் ஜனநாயகம் இல்லையென்று யாரிடம் சொல்கிறார்? எமது மக்களின் நில உரிமையை, உயிர் வாழும் உரிமையை, மலையக மக்களின் வாக்குரிமையை முற்றாக மறுக்கும், இனச்சுத்திகரிப்பை அரசியல் சாசனமாகக் கொண்டிருக்கும் சிங்களத்திடமே இதைச் சொல்கிறார் இந்த இராஜ தந்திர சம்பந்தன்.

இப்படிப்பேசினால் மட்டுமே, மேற்குலகின் இந்தியாவின் ஆசீர்வாதம் பெற்று தமிழ் பேசும் மக்களிற்கான சுயாட்சியை பெறலாமென்று நினைத்து, அதுவே இராஜதந்திரமென்று முடிவெடுத்தால், இறுதியில் ஏமாறப்போவது அவர் மட்டுமல்ல தமிழ் மக்களும்தான். அவர் உரையில் 75 சதவீதம் சிங்களத்தின் கொடுமைகளை விளக்குகின்றது. மிகுதி விடுதலைபுலிகளை சாடுகின்றது. இவ்விரண்டு முரண் நிலைச் சக்திகள் மீது எந்தக் கருத்துருவாக்கிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்று பார்த்தால், கண்முன்னால் தெரிவது சர்வதேச நெருக்கடிக் குழுவினர்தான்.

விடுதலைபுலிகளை விமர்சித்தால் சிங்களத்திற்கும், மேற்குலகத்திற்கும் மகிழ்ச்சி.  சிங்களத்தை விமர்சித்தால் , தமிழ் மக்களுக்கும், அதேவேளை சீனா பக்கம் சாயும் தற்போதைய ஆட்சியாளர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டினை முன்வைக்கும் மேற்குலகிற்கும் மகிழ்வைத்தரும். ஆகவே இவ்விரண்டு போக்குகளையும் ஒன்றிணைத்து , புத்திசாலித்தனமாகப் பேசிவிட்டதாக அவர் நினைக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இப்பேச்சின் பின் தமிழ் மக்கள் தெளிவடைந்துவிட்டார்கள். தேசியம் பேசுவது ஓட்டுப் பொறுக்குவதற்கு என்கிற பேருண்மையை புரிந்து விட்டார்கள். இவர்களின் காலில் விழும் இராஜதந்திரத்தின் தாற்பரியத்தை தெரிந்து கொண்டார்கள்.