தமிழரின் முகத்தில் சிங்களம் காறி உமிழ்வதும் பின்னர் துடைப்பதும் காலாகாலமாக நடந்துவரும் நிகழ்வு. தமிழ்த்தேசியப் போராட்டம் இன்று இந்த அளவிற்கு உச்சம் பெறுவதற்கு காரணம் ஈழத்தமிழர்களின் உரிமைகளை சிங்களம் தர மறுப்பது மட்டுமன்று. அதற்கும் மேலாக தமிழர்களின் உரிமைகளை தருவதாக கூறி அதற்கான பேச்சுவார்த்தை மேடைகளையும் அமைத்து சிங்களம் ஆடிய ஏமாற்று நாடகத்தின் வெளிப்பாடே போராட்டத்தின் உயர்ச்சிக்கு காரணம்.

இன்றைய இந்த பல்கலைக்கழக அடக்குமுறை சிங்களத்தினால் மேற்கொள்ளப்படும் மேலாதிக்கத்தன்மையே காரணம். தமிழ்மக்களை அடக்கியும், ஒடுக்கியும், அழித்தும் வருகின்ற சிங்களத்தோடு தமிழர் இணைந்து வாழ முடியும் என்று கற்பிதம் செய்வது மகத்தான முட்டாள்தனம். சிங்களம் உரிமை தருமென நினைத்து சம்பந்தன் கற்பனை உலகில் இன்றுவரை வாழ்வது இதற்கொரு எடுத்துக்காட்டு. கடந்தகால சிங்களத்தின் ஏமாற்று வரலாறுகளை ஒருதரம் சம்பந்தன் அவர்கள் தமிழ்மக்களுக்காக மீள் நினைவுக்குட்படுத்தல் அவசியமாகிறது.

தமிழ்த்தேசிய வரலாற்றில் சம்பந்தனின் கால எல்லைக்குள் தமிழ்த்தேசியம் சார்ந்த முன்னேற்றகரமான நிகழ்வுகள் திரண்டு வருகையில், சம்பந்தனால் சறுக்கப்பட்டு தேசியம் அற்றுப்போன நிகழ்வுகள் ஏராளமுண்டு.(பிறிதொரு தருணத்தில் இது சம்பந்தப்பட்ட விடயங்கள் ஆதாரபூர்வமாக தரப்படும்) யாழ் பல்கலைக்கழக அனர்த்தம் சார்பாக, சர்வதேசம் அடங்கலாக சிங்களத்தின் மற்றுமொரு அடக்குமுறை வெளிக்கொண்டுவரப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சம்பந்தனை மகிந்தா அழைப்பது மீண்டும் ஒரு ‘சறுக்கலை’ சம்பந்தனூடாக ஏற்படுத்தவே என்பது தெளிவாகிறது.

1978 ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களால் திருமலையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சம்பந்தனின் அரசியல் பிரவேசத்தை முன்வைத்து கூறியதாவது, ‘திருமலைக்கு சிங்கம் ஒன்று தலைமையாக வருகிறது. அதனை ஆதரிப்பதால் திருமலை மாவட்டம் தமிழ்மக்களுக்கே உரித்தானது என்று உறுதிபட நிரூபணமாகப் போகின்றது’ அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் சம்பந்தன் என்ற சிங்கம் ஈற்றில் ‘சிங்கக்கொடி’ ஏந்தி தனது ‘சிங்க’ள விசுவாசத்தை உலகறியச் செய்த வித்தையை ஒரு தரம் நினைத்துப்பார்ப்போம்.

நாட்டின் முதுகெலும்பும், ஆணிவேரும் பல்கலைக்கழக மாணவர்கள் தான் என ஜனாதிபதி மகிந்தா அவர்களால் அறிக்கைவிட்டு ஒரு மாதம்கூட ஆகவில்லை அவரின் அராஜக அரசாங்க படையினரூடாக யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனர்த்தம் நேர்ந்திருக்கின்றது. சுருக்கமாக வரலாற்று நிகழ்வுகளை நோக்கின் மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பம் தமிழ்த்தேசியம் சார்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்மேல் பிரயோகித்த வன்முறைக்கூடாக மீண்டும் ஒருமுறை கனிகிறது. இதை சிங்களம் எதிர்பார்த்தே இருந்திருக்காது. சர்வதேசம் உட்பட அனைத்து புத்தி ஜீவிகளும் ஒன்றுபட்டு சிங்களத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

சிங்களம் வழமைபோல தனது தந்திரோபாயத்தை கைக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. இதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ அல்லது தலைவர் சம்பந்தனோ துணைபோகலாகாது. கூடவே சம்பந்தன் அவர்கள் மகிந்தா அவர்களுடன் தன்னிட்சையாக பேச்சுவார்த்தை நடாத்தின் இதற்கான தக்க நடவடிக்கையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்தாக வேண்டும். வெறுமனே அவருக்கெதிராக அறிக்கைவிட்டு மீண்டும் தங்களின் எதிர்கால பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைப்பதற்காக மவுனமாக இருப்பது ஒரு வரலாற்றுத் துரோகமாகும். சர்வாதிகாரத் தன்மையுடன் கூடிய ஒரு தலைவருக்கெதிராக அதி உச்ச நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு தற்பொழுதுள்ள த.தே. கூ பாராளுமன்ற உறுப்பினர்களையே சாரும். இதிலிருந்து தப்ப முடியாது.

தசக்கிரீவன்

ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு

info@thanall.com