சுட்டெரிக்கும் கோடை வெயில் சற்று அசௌகரியத்தை தந்திருந்தாலும், எல்லோருமாக கூடி பலதையும் பத்தையும் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது என்ற விடயத்தில் ‘தசக்கிரீவனோடு’ ‘பண்ணாகத்தானும்’ நீண்டு நிமிர்ந்து இருக்கின்ற ஆலய முன்றலில் அரட்டைக்காக ஆலயத் தலைவர் உட்பட மேலும் பலருடன் அமர்ந்துகொள்கிறார்கள்.

நாட்டு நடப்பின் முக்கிய கதாம்சமாக கிழக்குத் தேர்தல் இடம்பிடித்துக் கொள்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். தெரிந்தெடுத்து ஆக்கபூர்வமான சில கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டுமென்பது தசக்கிரீவனுக்கொரு எண்ணம்.

* கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை. கிழித்த கோட்டைத் தாண்ட முடியாமல் பிரம்போடு நிற்கும் பெரியண்ணன் கூறும் வார்த்தைகளை சிரமேற்கொண்டு கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் பணியாற்றினார் என்பதற்கு பல உதாரணங்களில் இதுவுமொன்று.

அப்போதெல்லாம் விடுதலைப் புலிகளால் சொல்லப்பட்ட காரணம், வடகிழக்கு இணையாத பட்சத்தில் மாகாணசபைத் தேர்தல் ஒன்றுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முகம் கொடுக்க மாட்டாது. வடகிழக்கு இணைப்பின் பின்னர் தான் அதைப் பற்றிய முடிவு. இந்த நியாயமான கட்டளையை தமிழீழ மக்களும் ஏற்றுக்கொண்டார்கள் கூட்டமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை.

இதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சிக்கு தமிழ்மக்களின் வாக்குகள் குவிந்ததால் ஒரு குருட்டு அதிர்ஷ்டமும் அடித்தது. இதை விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்பு பின்புலமாக நின்றது. இப்பொழுது புதிரான விடயம் என்னவென்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்குத் தேர்தலில் பங்குகொள்ள எடுத்த முடிவு.

புலிகள் நோக்கியிருந்த வடகிழக்கு இணைப்பு, இம்முறைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குத் தேர்தல் களமிறங்கலோடு  புஸ்வாணமாக போய்விட்டது. மீண்டும் தேர்தல் என்ற சிங்களத்தின் சாக்கடைக்குள் ஈழ விரும்பிகளின் உணர்வுகளை குழி தோண்டிப் புதைத்தாயிற்று. இதற்கு மாற்றுப் பரிகாரம் என்ன?

* கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டுவிட்டதென வைத்துக்கொள்வோம். இதனை வைத்து எப்படி தமிழ்மக்களின் கெளரவமான சுயநிர்ணய உரிமையை ஏற்படுத்தலாம் என சிந்திப்போம்.

1. கிழக்கு மாகாணசபை முதலமைச்சரை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும். (உதாரணமாக R. G. சேனநாயக்கா இரு தொகுதிகளில் நின்றவர்). தமிழ்த்தேசிய ஒற்றுமையத் தவிர பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்பதை மக்களுக்கு தெளிவூட்டவேண்டும்.

2. மேலுள்ளது செய்யப்படாவிடின் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி விலக கூட்டமைப்பு முன்மொழிய வேண்டும். அதேபோன்று எதிர்காலத்தில் வடக்கில் வரும் கூட்டமைப்பின் முதலமைச்சரும் பதவி விலகி வெற்றிடமாக்க வேண்டும்.

3. தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவேண்டிய விடயங்கள் இவைதான். இதன் அடிப்படையில் சாத்தியப்பட்டால் வடகிழக்கின்  இணைப்பை சர்வதேசம்  அடங்கலாக மக்களின் ஆணையாகக் காட்டமுடியும்.

தமிழ்த்தசியக் கூட்டமைப்பால் யதார்த்தமான நடைமுறைக்கு ஒவ்வக்கூடிய துணிகரமான திட்டங்களை எவர்க்கும் அடிமைத்தனமின்றி முன்வைக்க முடியும் என்ற செய்தியையும் பகிரங்கப்படுத்த ஒரு வாய்ப்பாக கருதமுடியும்.

தசக்கிரீவன்