வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மோசமான தாக்குதல்களின் விளைவாக கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டார். சொந்த மண்ணில் அவரின் உயிரற்ற சடலத்தைப் புதைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய  நிலை ஏற்பட்டது. தற்போது அத்தாக்குதலில் அகப்பட்ட இன்னுமொரு அரசியல் கைதியான மரியதாஸ் நவிஸ் டில்ருக்சன் என்பவரும் சாவடைந்துள்ளார்.

கடுந்தாக்குதலுக்கு உள்ளான டில்ருக்சன் “கோமா’ நிலையில் இருந்தபோது அவரின் கைகளில் விலங்கிடப்பட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. விசாரணையின்றி நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கைகளையும் உலக ஜனநாயகவாதிகள் முன்னெடுக்கவில்லை.

இந்நிலையில் நீடித்த சமாதானம் பற்றிய பாதுகாப்புச் செயலமர்வுகள் கொழும்பில் நடைபெறுகின்றன. அதில் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர்களும் முதலீட்டு ஆதிக்கப் போட்டியில் பங்கு கொள்பவர்களும் கலந்து கொள்கின்றனர்.

அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசாங்கம் வகுத்துள்ள தேசிய செயற்றிட்டத்தினை அமெரிக்கா வரவேற்று அறிக்கை விடுகிறது. ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இத்திட்டத்தினை நிராகரிக்கின்றார்.

வடக்கில் ஆயிரக்கணக்கான நிலங்களை இராணுவம் ஆக்கிரமிப்பதையிட்டு தேசிய இன நல்லிணக்கத்தை உருவாக்க முனையும் வல்லரசுகள் பேசுவதில்லை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்கிற அறிவுரையை அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர் கோஷி மத்தாய் ஊடாக வழங்குவதையே அவை மேற்கொள்கின்றன.

ஜூலை 2009 இல் அனைத்துலக நாணய நிதியத்தால் உடன்பாடு காணப்பட்ட 2.6 பில்லியன் டொலர் பிணை மீட்பு நிதியின் இறுதித் தொகை கடந்த மாதம் வழங்கப்பட்டது. மேலதிக கடனைப் பெறுவதற்கு நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

நாட்டின் பண வீக்கமானது ஜூலை மாதம் 9.8 சதவீதத்தை எட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவிக்கும் புள்ளி விபரங்களும், கடன்தேடி அலையும் நிலைக்கு இலங்கை அரசை தள்ளியுள்ளதென கணிப்பிடலாம். இறுக்கமான நாணயக் கொள்கை மூலம் பண வீக்கத்தை கட்டுப்படுத்தலாமென ஆளுநர் அஜீத் நிவாட் காப்ரால் விளக்கமளித்தாலும் நீடிக்கும் வரட்சி நிலைமை அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

இவை தவிர, ஜூலை இறுதியில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 7.2 பில்லியன் டொலர்களென்று மத்திய வங்கி அறிவித்துள்ள விவகாரம் முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். அரச கடன்களில் 842 மில்லியன் டொலர்களை முதலீடு செய்த வெளிநாட்டு முதலீடுடாளர்களும், இறுதிக் கடன் கொடுப்பனவான 414 மில்லியன்களை வழங்கிய அனைத்துலக நாணய நிதியமும், 5.875 வீத வட்டியில் 10 வருட முறிக்க கூடாக ஒரு பில்லியன் டொலர்களைப் பெற்ற மத்திய வங்கியும், நாணயக் கையிருப்பை அதிகரிக்க உதவின.

இறுதிப் போர் காலத்தில் ஒரு பில்லியன் டொலர்களை மட்டுமே கொண்டிருந்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, 2012 ஜூலையில் 7.2 பில்லியனாக உயர்ந்திருப்பதில் கடன்களின் அளவே பெரும் பங்கினை வகிப்பதைக் காணலாம். இந்த 7.2 பில்லியன் டொலர் கையிருப்பு அடுத்த நான்கு மாதங்களிற்கான இறக்குமதிச் செலவிற்கே போதுமானது என்பது கவனிக்கத்தக்கது.

ஆகவே கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில், ஜூலை மாத ஏற்றுமதி வளர்ச்சி ஒரு சதவீதமாக சுருங்கியுள்ள சீனாவின் மந்த நிலையால் அனைத்துலக நாணய நிதியத்திலேயே (IMF) அதிகம் தங்கியிருக்க வேண்டிய நிர்பந்தத்துக்குள் இலங்கை தள்ளப்படுவதை காணலாம்.

ஏற்றுமதியில், இந்தியாவிலும் மேற்குலகிலும் தங்கியுள்ள இலங்கை, இந்த நிலைப்பாட்டை எடுப்பதில் ஆச்சரியமேதுமில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் திகதியன்று 108 இந்திய நிறுவனங்கள், வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் கொழும்பில் கண்காட்சி ஒன்றினை நடத்திய விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவின் நீண்டகால எதிர்பார்ப்பான “சீபா’ ஒப்பந்தம், இப்பயணத்தின் போது கைச்சாத்திடப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால்  இலங்கை அரசு கண்டும் காணாதது போலிருந்தது. 2000 இல் ஏற்படுத்தப்பட்ட, சுதந்திர வர்த்தக உடன்பாட்டிலுள்ள நடைமுறைச் சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்தே இலங்கை பேசியது.

வேலை வாய்ப்பிற்கான விசா வழங்குவதிலுள்ள இறுக்கத்தை தளர்த்துவது, பொறியியல்துறை மற்றும் மருந்து உற்பத்தித் துறைக்கான விசேட பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது, இறக்குமதி குறித்தான தீர்வை விவகாரத்தில் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடிப்பது போன்ற விடயங்களே இரு தரப்பு பேச்சுவார்த்தையை ஆக்கிரமித்திருந்தது.

இறுதியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விரைவில் இந்தியாவிற்கு பயணம் செய்வார் என்பதோடு இந்த வர்த்தக ஒன்றுகூடல் நிறைவடைந்தது. ஆனாலும் இரு நாட்டுக்குமிடையிலான வர்த்தக சமநிலை (Trade Balance) இந்தியாவின் பக்கம் அதிகம் சாய்ந்திருப்பதே இலங்கையிலுள்ள தேசிய மற்றும் தரகு முதலாளிகளுக்கு எரிச்சலூட்டும் விடயமாக இருப்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

பொருளாதாரப் பலம் என்று வரும்போது இந்தியாவை நெருங்க முடியாத வகையில் தான் இலங்கையின் 59 பில்லியன் டொலர் பொருளாதாரம் இருக்கிறது. ஆகவே ஆற்றிலிருந்து மலையின் உச்சிக்கு நீரைக் கொண்டு செல்ல முடியுமா என்பதுதான் இலங்கை முதலாளிகளின் கவலை.

அதாவது இந்தியச் சந்தையில் தமது உற்பத்திக்கான இடம் இருக்குமா என்கிற விவகாரமே “சீபா’ ஒப்பந்தத்தை இலங்கையின் தேசிய முதலாளிகள் எதிர்ப்பதன் ஒரு முக்கிய காரணியாகச் சொல்லப்படுகிறது. பூகோள அரசியல் காய் நகர்த்தலில், கடன்களை ஒரே இடத்திலிருந்து பெறாமல் முரண்பட்ட வல்லரசுகளிடையே இருந்து பகிர்ந்து பெற வேண்டும் என்கிற சூத்திரத்தை சிங்களம் புரிந்து கொள்ளும் அதேவேளை , உள்ளூர் முதலாளிகளைப் பகைத்துக் கொண்டு ஆட்சியை நீடிக்க இயலாது என்கிற விடயத்தையும் அது உணர்ந்து கொள்கிறது.

ஆனாலும் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த பின்னர் மூன்று யுத்தங்கள் புரிந்த இந்தியாவும் பாகிஸ்தானும், வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) குறித்து முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இணக்கத்தை ஏற்படுத்தும் போது, தானும் எந்த நாட்டையும் பகை நாடாக காட்டிக் கொள்ளக் கூடாதென ஆட்சியாளர் அவதானமாக இருப்பதையும் நோக்கலாம்.

இந்தியாவின் எதிரி நாடுகளோடு கூட்டுச் சேர வேண்டுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூக்குரலிட்டாலும் அதற்கு இசைவான செயற்பாட்டில் தற்போது சிங்களம் நகரப் போனவதில்லை. திறைசேரியின் நிலைமை அவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது. உல்லாசப் பயணத்துறைப் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதன் ஊடாக இச்சிக்கலை நிவர்த்தி செய்யலாமென இலங்கை பொருளாதார கொள்கை வகுப்பாளர்கள் எண்ணுவது போல் தெரிகிறது.