தமிழர் கலாசாரத்தை அழிக்க முனைபவர்களுக்கு சவாலாகும் ‘காட்டுக்குள்ளே மணவிழா’

சுவிஸ்-பாசெல் மாநில இந்து ஆலயத்தின் ஆதரவுடன் இந்து பாரம்பரிய முறைப்படி சுவிஸ் நாட்டு Iskander-Tamara இளம் ஜோடிக்கு இயற்கை சூழ் காட்டின் மத்தியில் திருமண நிகழ்வொன்று(23.06.2012) நடந்தேறியுள்ளது.

பிரதம குருக்களான ஸ்ரீல ஸ்ரீ கிருஷ்ண சர்மா அவர்களின் ஏற்பாட்டின் பேரில் இத்திருமண நிகழ்வு நடைபெற்றது. இத்திருமணம் பற்றி மணமக்கள் பிரஸ்தாபிக்கையில்,

‘பெற்றோரின் அரவணைப்பிலிருந்து பிறிதொரு வாழ்க்கைத் தளத்திற்குச் செல்லும் நிகழ்வே திருமண பந்தம் ஆகும். கணவன் மனைவி என்ற பந்தத்தை தாங்கிச் செல்லும் ஓடம் தான் திருமணம். அந்த புனித நிகழ்வானது காலம் பூராகவும் மணமக்கள் மனதில் அழியா நினைவுகளாகவும், அணையா தீபங்களாகவும் நிலைத்தல் வேண்டும்.

தம்பதியினருக்கிடையே  ஏற்படும் சிறு சிறு சச்சரவுகள் பூதாகரமாக மாறி விவாகரத்து வரை செல்லாமல் தடுப்பது இந்த திருமண நிகழ்வின் நினைவுகளாகும். அதற்கான ஏற்பாடுகளில் முதன்மையாக இந்த தமிழ் கலாசார இந்து பாரம்பரிய திருமண முறையை நாங்கள் இருவரும் தெளிவாக ஏற்றுக்கொண்டு நிகழ்த்தியுள்ளோம்’

பிற மதங்களைச் சார்ந்து கலாசாரத்தை தொலைப்பவர்களுக்கும், சொந்த கலாசாரத்தை வெளிக்கொண்டு வர வெட்கப்படுபவர்களுக்கும் சுவிஸ் ஜோடியினர் ஓர் எடுத்துக்காட்டு.