தமிழ் இணையத்தளங்களில் வெளியான ‘தமிழ் தேசியத்திற்கு பொறிவைக்கும் இலங்கை புலனாய்வுத்துறை’ என்ற அரசியல் கட்டுரை பெரும் அதிர்வைத் தந்துள்ளது.

தேசியத்தலைவர் பிரபாகரனினால் சுதுமலையில் ஆற்றிய உரையில் ‘எப்போது தனித் தமிழீழக் கொள்கையை கைவிடுகின்றேனோ அன்றே என்னை சுட்டுக்கொல்ல வேண்டும்’ என்ற வாசகம் இன்றும் எம்மனங்களில் இருந்து மறையாமல் உள்ளது.

ஈழப்போராட்டத்தின் ஆரம்ப வரலாற்றில் ‘தமிழ் புதிய புலிகள்’ என்ற அமைப்பு 1976 ம் ஆண்டு தலை தூக்கி இருந்தது. ‘தம்பி’ என்ற செல்லப் பெயரோடு தலைவர் பிரபாகரன் அதனுள் இருந்த காலம் அது. அவ்வமைப்பின் ஆரம்பமாக நான்கு பிரதான கட்டளைகள் உருவாக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டதை மீட்டிப்பார்த்தல் பொருத்தமாகும்.

அதில் முக்கியமாக

* இலங்கை அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டம்

* தமிழீழம் கிடைத்தபின் இயக்கம் கலைக்க வேண்டும்

* புலிகள் அமைப்பில் இருந்து விலகி வேறு அமைப்புகள் உருவாகினாலோ எந்தவிதத்திலும் அரசுக்கு துணை போனாலோ மரண தண்டனை வழங்கப்படும்.

* காதல், பாசம் இயக்க நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.

அமரர் சிவகுமாரின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சயனைட் வில்லை உட்கொள்ளுதலானது அமைப்பின் உறுதித்தன்மையையும், நம்பகத்தன்மையையும் சர்வதேச மட்டம் வரை உயர்த்தியிருந்தது. அதன்பிறகான வளர்ச்சிக் காலம் மிக உச்சத்தை அடைந்து தமிழீழ விடுதலைப்புலிகளாக தோற்றம் பெற்று கட்டுப்பாட்டுடன் இருந்து வந்ததென்பது அனைவரும் அறிந்த விடயம். இந்த நிலையில் ஊடகங்கள் ஊடாக வெளியான மேற்படி செய்தியை ஒப்பு நோக்குகையில் உயிருடன் இராணுவத்திடம் பிடிபட்ட விடுதலைப்புலிப் போராளிகளின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறியிருப்பதை அவதானிக்கையில் அருவருப்பாக உள்ளதை உணரக்கூடியதாக உள்ளது.

வன்னி யுத்தத்தின் பின்னராக இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தற்போது இராணுவத்தின் கையாட்களாக இயங்கி புலம்பெயர்வாழ் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களையும், ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்தல் என்பது மகா துரோகமான செயலாகும். அதாவது இவர்களால் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணங்களின் படி நடக்கத்தவறியமை வரலாற்றுத்துரோகமும் ஆகும்.

என்னதான் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் கொள்கையோடும் கட்டுக்கோப்போடும் வழிநடத்தப்பட்ட விடுதலைப்புலிப் போராளிகள் தடம்புரளலாகாது. ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஏற்கனவே எழுதப்பட்ட கட்டளையின் பிரகாரம் அரசோடு நின்று காட்டிக்கொடுப்பவர்களுக்கு துரோகிப் பட்டமும் மரண தண்டனையும் ஆயின் உயிருடன் பிடிபட்ட போராளிகள், அமைப்பின் கட்டளைகள் எதைக்கூறுகின்றதோ அதன்படி நடந்திருக்க வேண்டும். ஆசா பாசங்களுக்கு தம்மை உட்படுத்திக் கொண்டு இலங்கை புலனாய்வுப் பிரிவின் அட்டவணையின்படி இயங்குவதானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமுமாகும்.

சுயநலத்திற்காக மாறியவர்கள் என்ற வரிசையில் காட்டிக்கொடுத்தவர்கள், அரசுக்கு சோரம் போனவர்கள், ஒட்டுக்குழுக்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் துரோகத்தனமென இனம்கண்டு விடுதலைப்புலிகளால் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களின் காரணங்கள் இப்போது நியாயப்படுத்தப்படலாம்.

எனவே, ‘தலைவன் இட்டவழியே எம்வழி’ என்று உலகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய போராளிகள் எந்த இன்னல்கள் வந்தாலும் இலட்சிய வழி மாறாது தமது போரியல் குணங்களை வேட்கையுடன் வெளிப்படுத்தும் போதுதான் தலைவன் என்றும் எம்மோடு வாழ்ந்து வழி காட்டுகின்றான் என்ற கொள்கை உறுதி பெறும். இதுவே தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் நீங்கள் ஆற்றும் இலட்சியப்பணியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

வாழ்க தமிழ்! வாழ்க தாயகம்! 

மல்லிகையூரான்

கருத்துகளுக்கு: info@thanall.com

எமது போராட்டத்தின் நோக்கத்தை  சிந்தியுங்கள்!!

மே 2009 ஈழத்தமிழர்களுக்கு தந்த அழிவுப்பரிசை சிந்தியுங்கள்!!

எம்மவர்கள் தடம்மாறி எதிரியுடன் கைகோர்ப்பதை பாருங்கள்!!

‘எதிரி’ இணையதளம் வெளிப்படுத்திய செய்தியையும் காணுங்கள்

http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=33&t=8032&start=0