உங்களின் அரசியல் நலன்களுக்காக
புலிகளை விலை  பேசுவது நியாயமா?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

குறிப்பாக தமிழர் தாயகப் பகுதியில் உள்ள 31 ஆசனங்களுக்காக நடக்கப் போகும் தேர்தலின் முடிவு குறித்த எதிர்பார்ப்பு வலுவடைந்துள்ளது. தமிழரின் பலத்தைச் சிதைக்க நினைக்கும் சக்திகளுக்குத் துணைபோகும் வகையிலான தேர்தலாகவே இது அமைந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றுபட்ட சக்தியாக தமிழரின் பலத்தை வெளிப்படுத்துவர் என்ற எதிர்பார்ப்புக்கு ஏற்கனவே மண் அள்ளிப் போடப்பட்டு விட்டது.

இதற்குக் காரணம் யார் என்று இப்போது பிரேத பரிசோதனை செய்து கொண்டிருப்பதில் பலன் இல்லை. ஏனென்றால் யாருமே தமது தவறுகளை ஒப்புக்கொள்ளும் நிலையிலோ அல்லது திருத்திக் கொள்ளும் நிலையிலோ இல்லை.

தமிழ்த் தேசியத்துக்கான அரசியல் என்பதை விடுத்து சுயநல அரசியல்போக்குடன் சிந்திக்கத் தலைப்பட்டதன் விளைவு இந்தத் தேர்தலின் அறுவடையாகக் கிடைக்கப் போகிறது.
அது ஒருபுறத்தில் இருக்க, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் தமிழ்த் தேசிய சக்திகள் தமது அரசியல் இலாபத்துக்காக எதையும் பேசலாம்-எதையும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்து விட்டன என்பதை அவதானிக்க முடிகிறது.

அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வகையில் அண்மைக்காலமாக இணையத்தளங்கள் ஏதாவதொரு சார்பு நிலைக்குள் சிக்கிக் கொண்டு பிரசாரம் என்ற ரீதியில் சேற்றை வாரும் காரியங்களில் இறங்கியுள்ளன.

தாம் சார்ந்த அமைப்புக்கு ஆதரவு கொடுப்பது என்பது ஒரு புறத்திலும்- தாம் சாராத அமைப்பைக் கேவலப்படுத்துவது என்பது மற்றொரு புறத்திலுமாக இந்தப் பிரச்சார சுழலுக்கு ஊடகங்கள் பலவும் சிக்கியிருக்கின்றன.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழரின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள், புனர்வாழ்வு என்று எத்தனையோ பிரச்சார வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவை எவற்றிலும் கவனமோ கருத்தோ கொள்ளாமல்- எதிர்த்தரப்பைக் கேவலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக உயிர் கொடுத்த மாவீரர்களையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
யாரையும் பெயர் குறித்து விமர்சிப்பது எமது நோக்கம் அல்ல. ஆனால் இத்தகைய முயற்சிகளை நிறுத்த வைப்பதற்காக சில சம்பவங்களை வெளிப்படுத்துவது அவசியமானது.

ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளரை கேவலப்படுத்துவதற்காகவும் தனது வித்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவும் புலிகள் இயக்கம் பல குழுக்களாகப் பிளவுபட்டிருந்தது என்று கூறியிருக்கிறார்.

ஒரு குழு அவரது கோரிக்கையை நிராகரிக்க இன்னொரு குழுவின் மூலம் தான் சாதித்துக் கொண்டதாக பிரசாரம் செய்து- தானே வெற்றி பெற்றதாக பிரகடனம் செய்கிறார்.

அவரே வன்னியில் தான் மூன்று தசாப்தங்களாகப் போருக்குள் வாழ்ந்ததை சாதனை என்று கூறிக் கொள்வதையும் காணமுடிகிறது.

30 வருடங்கள் தாயகத்தில் வழ்ந்தது சாதனை என்றால் தேர்தலில் போட்டியிடுவதற்கு வன்னியில் வாழ்ந்த 3 இலட்சம் பேரும் அதற்குத் தகுதியானவர்கள் தான்.

தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு ஆளும்கட்சியோடு சேர்ந்து போட்டியிடும் கனகரட்ணம் எம்.பி கூட அப்படித்தான் இருந்தவர். அப்படிப் பார்த்தால் பல மாதங்கள் சிறையில் இருந்த கனகரட்ணம் இவரை விடவும் ஒரு படி மேல் அல்லவா இருக்க வேண்டும்.
இன்னொரு வேட்பாளர் மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜன் குடும்பத்தினருக்காக யாழ்ப்பாண மக்கள் வழங்கிய உதவிகளைக் கையளித்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்த முயன்றுள்ளார்.

அரசியல் நலனுக்காக நிமலராஜனின் மனைவியும், அவரது குழந்தைகளும், தாயாரும் தானா அந்த வேட்பாளருக்குக் கிடைத்தனர்? இதுவா அரசியல் பிரச்சாரம்?

இப்படியான புகைப்படங்களை வெளியிட்டுப் பிரச்சாரம் செய்வதென்றால் டக்ளஸ் தேவானந்தா போன்றாருக்கு எத்தனை ஆயிரம் புகைப்படங்கள் கிடைக்கும்?

அவர்களே அதைச் செய்யாத போது தமிழ்த் தேசியத்தின் பெயரில் அரசியல் நடத்த முனையும் இவர்கள் இதைச் செய்ய நினைப்பது தவறான அரசியல் முன்னுதாரணமாகி விடப் போகிறது.

சில முக்கிய தலைவர்களின் தோல்வியைத் தவிர்ப்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையில் புலிகளைக் கேவலப்படுத்தவும்- அவர்களின் கடந்தகால செயற்பாடுகளை விமர்சிக்கவும் பலரும் துணிந்து விட்டனர்.

புலிகள் இயக்கம் தோல்வி காண்பதற்கு முன்னரோ அல்லது அவர்கள் தோல்வி கண்ட போதோ வாயை மூடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது புலிகள் செய்வதெல்லாம் தவறு. தாங்கள் செய்தது- செய்யப் போவதெல்லாம் சரியென்று பிரச்சாரம் செய்கின்றனர்.

புலிகள் செய்ததெல்லாம் சரி என்பது எம் வாதமல்ல. ஆனால் புலிகளின் தவறுகளை அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தத் துணிந்து விட்டதே இவர்களின் தவறு என்பதைத் தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தி இப்போது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் கைகளில் வந்திருப்பது உண்மை. ஆனால் இதற்கு முன்னர் தமிழரின் பாதுகாப்பு- மற்றும் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது புலிகளே. அவர்களின் ஆயுதங்கள் தான் தமிழினத்தை இதுவரை அழியாமல் பாதுகாத்தது என்பது உண்மை.

தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் இப்போதுள்ள அளவாயினும் எஞ்சியிருப்பதற்கு அவர்களின் ஆயுதபலமே காரணமாக இருந்தது. இதையெல்லாம் மறந்து விட்டு புலிகளின் அழிவின் மீதும்  சமாதிகளின் மீதும் தமது அரசியல் கதிரைகளுக்கு அடித்தளம் போட முனைவது சுத்த அயோக்கியத்தனம்.

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தமிழ்மக்களின் முன்பாக தமது கொள்கை நிலைப்பாட்டை விளக்கி அவர்களின் ஆதரவைத்  திரட்டுவதற்கு முனைய வேண்டும்.
அதுவே ஆரோக்கியமான அரசியல் வழியாகவும் இருக்கும். சேற்றை வாரி இறைப்பதன் மூலமோ அல்லது வரலாற்றுப் புரட்டுகளின் மூலமோ- குறுக்குவழிகளின் மூலமோ நாடாளுமன்றக் கதிரைகளை அடைய முனையாதீர்கள்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்த முடிவெடுத்து விட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

• நாம் மோதப் போவது- மோத வேண்டியது எமக்குள் அல்ல. அதற்கான தருணமும் இதுவல்ல.

• கர்ணன் கவச குண்டலங்களை இழந்து நின்றது போன்ற நிலையில்  எமது பலமான புலிகளின் ஆயுதபலத்தை இழந்து நிற்கிறேம்.

இந்தத் தருணத்தில் எமது கண்களுக்கு முன்னே தெரிய வேண்டியது பொது எதிரியே.

• இது போர்க்களம் அல்ல- அரசியல் களம்.

எமக்கு நாமே சேற்றை வாரும் போது அடையப் போவது தோல்வியே. அந்தத் தோல்வி எதிரியைத் தலைநிமிரச் செய்யும். எம்மைத் தலைகுனிய வைத்து விடும்.
-தொல்காப்பியன்-