அண்மையில் யாழ்பாணத்தில் சில திரைப்பட இரசிகர்களின் போதைத்தனமானதும், பேதைத்தனமானதுமான போக்கு இன்றைய ஈழத்தமிழர்களின் நிலையில் பலரையும் அதிரவைத்துள்ளது. நடிகர் விஜயின் ஒளிப்பட விம்பத்திற்கு (கட் அவுட்) செய்யப்பட்ட பாலாபிஷேக நிகழ்வே அதுவாகும்.

 

1959, 60 களில் திரையிடப்பட்ட மக்கள் திலகம் M.G.R அவர்களின் நாடோடி மன்னன்திரைப்படத்திற்கு பெருவாரியான ஆராதனைகள் நடைபெற்றது மனக்கண் முன் விரிகிறது. அதையே காரசாரமாக அன்றைய பத்திரிகைகள் விமர்சித்திருந்ததும், பின்னர் படிப்படியாக குறைவடைந்து வந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவற்றையும் மீறி 40 ஆண்டுகள் கடந்த போதிலும், இக் கலாசாரம் தொடர்வது பெரும் ஆபத்துக்குக் கட்டியம் கூறி நிற்பது தெரிகிறது

ஒட்டுமொத்தமாக யாழ்/இளையோரின் வளர்ச்சியில் ஈழத்தமிழ் மக்கள் யாவரும் உரிமை கொண்டாடவேண்டிய நிலையை இவ்விடத்தில் கூறுவது அவசியம். அந்தப் பெருமை அனைத்து ஈழத்தமிழ் மக்களின் பெருமையை உயர்த்துகின்றதென்பதை மறுக்க முடியாது. ஆகவே, பலவழிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து ஈழத்தமிழர்களின் சமூகத் தேவைகளில் யாழ் இளைஞர்களின் சமூகப்பணி பெருமளவு தங்கியுள்ளதென்பதை அன்பு இளைஞர் உறவுகள் அறிதல் வேண்டும். எனவே, பெருமை எப்படி அனைவருக்கும் உரிமையாகின்றதோ, சிறுமையும் உரிமையாகும் என்பதை நினைவு படுத்தல் பொருத்தமாகும்

இளைஞர்கள் தடம்மாறுவதற்கு உள்ள காரணிகள் என்ன என்பதை யாழ். புத்திஜீவிகள் ஆழமாக ஆய்வுசெய்தல் வேண்டும். உயர் கல்விமான்களை சிருஷ்டிக்கும் பல்கலைக்கழகம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கி, இளைஞர்களை நல்வழிக்கு கொண்டுவரவேண்டிய கடமைப்பாடு நிறையவே உள்ளது. தவறின், எதிர்காலத்தில் இருண்ட சமூகத்திற்கு வழிவகுக்கும் ஒரு வரலாற்றுத்தவறு தங்களையே சுட்டிநிற்கும் என்பது மறுப்பதற்கில்லை

இது தொடர்பாக1926 ம் ஆண்டின் ஓர் சம்பவம் மீள் நினைவுக்கு வருவதை என்னால் தடுக்க முடியாமல் உள்ளது.

யாழ்ப்பாண கிறீஸ்த்தவ இளைஞர் சங்கத்தால் கூட்டம் ஒன்றிற்கு அழைக்கப்பட்ட அமரர் S.W.R.D. பண்டாரநாயக்கா அவர்கள் உரையாற்றும்போது கூறியதாவது,

இலங்கையின் வரைபடத்தை நோக்குகையில் யாழ்ப்பாணம் தலையாக அமைந்துள்ளது. அதனால் தான் என்னவோ, மிக அதிகமான புத்திஜீவிகள் இங்கு வாழ்கிறார்கள். அதிலும் இங்குள்ள இளைஞர்கள் இந்நாட்டை ஒழுக்கமுள்ள அபிவிருத்திப் பாதையில் செவ்வனே இட்டுச்செல்ல தங்களின் மூளைப்பலத்தை எதிர்காலத்தில் உபயோகப்படுத்துவர்கள் என நிச்சயமாக நம்புகின்றேன்‘. 

1926 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2010 ம் ஆண்டுவரை யாழ்ப்பாண புத்திஜீவிகளின் வளர்ச்சி எவ்வாறு பரிணாமம் அடைந்திருக்க வேண்டும் என நோக்கவேண்டிய தேவையும் உயர்ந்துள்ளது. ஒரு கவளம் சோற்றுக்கும், கஞ்சிக்கும் அல்லல் பட்டு அகதியாய் அலையும் தமிழ்மக்கள் வாழும் ஈழ நாட்டில், நடிகர் விஜயின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்வது மிக வேதனையைத் தருகிறதுஅதிலும் நாட்டு அனர்த்தங்களின் அசைவிற்கு மிக வேகமாக பாதிப்படைவது குழந்தைகளே. ஒருவேளை பாலுக்கு வழியற்று தவித்து வாழும் குழந்தைகளை ஒருகணம் எம் மனக்கண் முன் நிறுத்திப் பார்ப்போம்.

ஒருசில இளைஞர்களை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்தமான முடிவிற்கு வரமுடியாதென்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், ‘ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுதான் பதம்என்பதும் மறுபுறம் ஈட்டியாய் குத்துகிறது

இருண்ட வீட்டிற்கு விளக்காய்இருக்க வேண்டிய இளையோரின் சிந்தனைகளை மாற்றும் காரணிகளை இனம் கண்டறிய வேண்டும். அதிலும் குறிப்பாக, சுதந்திர வேட்கையையும், சுயநிர்ணயத்தையும், தாயக கோட்பாட்டையும் தடம்மாற வைப்பதற்காக எங்கிருந்தோ ஒரு பெரிய சக்தி எம்முள் விளையாடி நிற்கின்றது என்பது நிதர்சனமான உண்மையாகும். ஈழத்தமிழரின் அனர்த்தங்கள் ஏதோ வழிகளில் மறக்கடிக்கப்பட வேண்டுமென சிங்களம் கங்கணம் கட்டி நிற்கிறது. யாழ் நகர் முழுமையாக இலங்கைப் படையினரின் வசம் வந்த நாள் தொடக்கம் இன்றுவரை மானிடவர்க்கத்திற்கும், தமிழ்மக்களுக்கும் ஒவ்வாத எதிர்மறை வாழ்வு இளையோர் மத்தியில் தெரிந்தோ தெரியாமலோ விஷ விதைகளாக விதைக்கப்படுகின்றதென்பதை மறுக்க முடியாது

இதற்கெல்லாம் விலை போகாமல் வாழ்வதற்கான வாழ்வியலை வழிகாட்டி சென்ற (கடந்த வருடம் வைகாசி மாதத்திற்கு முன்னர்வரை) எமது இளையோர் அமைப்பு கற்றுத் தந்துள்ளதென்பதை நினைவில் கொள்ளல் அவசியம்

விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் இளைஞர்களின் தலையில் தான், ஈழத்தமிழரின் எதிர்கால சுதந்திர வாழ்வு சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு மாசு கற்பிக்கும் போக்கை அனைத்து ஈழத்தமிழ் இளைஞர்களும் உடனடியாக கைவிடல் வேண்டும்

சுருக்கமாக, ஈழத்தமிழ் இளைஞர்களின் ஒவ்வொரு அங்க அசைவும், வலிதாங்க முடியாது தத்தளிக்கும் ஈழத்தமிழ் மக்களின் இதயங்களுக்கு பாலாபிஷேகம் செய்வதாக அமைய வேண்டுமென ஒவ்வொரு மகனும் மகளும் எதிர்பார்க்கிறார்கள்

கனக கடாட்சம்