தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக சிங்களம் காலம் காலமாக கட்டவிழ்த்துவரும் அராஜகம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.

 கொழும்பு 2 இலுள்ள மலே வீதியில் பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்களின் குடியிருப்பு பகுதியே ஆகும். மிக நீண்ட காலமாக(100 வருடங்களுக்கு மேல்), குறிப்பாக இஸ்லாமியர்கள் வாழ்ந்துவரும் பூமியாகும். சடுதியாக இந்த குடியிருப்புகளிலிருந்து அம்மக்களை வெளியேற்றுவதன் நோக்கம் புரியாமலில்லை.

கொழும்பு மாநகரத்திலே தமிழ்பேசும் மக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை பல காலமாக உள்ளூர ‘புகைந்து’ கொண்டிருந்த சிங்களத்திற்கு இப்போது தருணம் சரியாக அமைந்துவிட்டது. இன்னும் ஆழமாக சொன்னால் கடந்த வருடம் மே மாதந்துடன் நிறைவுபெற்ற தமிழ் உரிமை மீட்புப் போராட்டமும் சாதகமாக அமைந்துவிட்டது எனலாம். இதற்கு பாடம் படிப்பிப்பதற்கு ‘சண்டியர்கள்’ இல்லாமையும் வருத்தத்திற்குரியது.

 அண்மைய பொதுத் தேர்தல்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை மேலும் சிங்களத்திற்கு ‘புகைச்சலை’ உருவாக்கியிருக்கும். இதன் வெளிப்பாடுதான் கொழும்பு – மலே வீதியில் உள்ள அத்துமீறி அமைந்திருக்கும் குடியிருப்புகளை அரசு அகற்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளாகும்.

‘சட்டம் யாவருக்கும் சமம்’

இதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மலே வீதியிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சட்டம்!

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருக்கோணமலை, மூதூர் – இலங்கைத் துறைமுகத்துவாரம்,

வடக்கு மாகாணத்திலே மாங்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மாதகல் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களுக்கு பிறிதொரு வகையான சட்டம் நடைமுறையில் இருப்பது கண்கூடு.

சட்டம் பொதுவானதென்றால், இனத்துக்கொரு சட்டம் இலங்கையில் தோன்றுவதற்கு காரணம் என்ன? இங்கு தான் இலங்கையின் இன முரண்பாடுகளின் தோற்றம் தெரிகிறது. 1947 களிலே தந்தை செல்வாவால் முன்வைக்கப்பட்ட ‘வடகிழக்கில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்திற்கு’ எதிரான கோஷம் இன்று நிதர்சனமாகியுள்ளது.

கொழும்பு மலே வீதியில் அத்துமீறி வாழும்(குறைந்த வருமானமுடைய) தமிழ்பேசும் மக்களை ஈவு இரக்கமின்றி, பதில்வதிவிடம் வழங்காது வெளியேற்றும் அரசு, திருக்கோணமலை ஈச்சிலம்பற்று பகுதிகளில் அமைந்த தமிழ்மக்களின் இந்துக் கோவில்களை எதுவித அறிவித்தலுமின்றி அகற்றி தெருவிலே வைத்துவிட்டு(மலை நீலியம்மன் ஆலயம், குறிஞ்சிமலை முருகன் ஆலயம்) அவ்விடத்தில் புத்த விகாரைகள் தற்பொழுது அமைக்கப்பட்டு வருவதும், தமிழ் பாரம்பரிய நிலங்களிலே அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதையும் எந்தச் சட்டத்தின்கீழ் என்பதை தமிழ்பேசும் மக்கள் பேதங்களை மறந்து உற்றுநோக்கல் வேண்டும்.

சாதிக்கொரு சட்டம். இனத்துக்கொரு சட்டம். இவை இலங்கை வரலாற்று அத்தியாயத்தில் மறைக்க முடியாதவை.

திருக்கோணமலை – மூதூர் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்(மர்கூம்) அமரர் A.L. அப்துல் மஜீத் அவர்கள் 1970 ம் ஆண்டு தேர்தல் மேடையில் கூறிய வார்த்தைகளை மீள்நினைவுக்கு கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.

‘அன்பான மக்களே!

தமிழ்மக்கள் தங்கள் வாழ்வியல் உரிமைகளுக்காக அரசுக்கெதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

 சிங்களவர்கள் அவற்றை வழங்க மறுக்கிறார்கள்.

 எதிர்காலத்தில் இது பெரும் போராட்டமாக வெடிக்கலாம். அப்போராட்டங்களில் தமிழர் தரப்பினர் தோற்றுவிடக் கூடாது. அவர்களின் நியாயமான வெற்றிக்கு இஸ்லாமியர் நாங்கள் பக்க பலமாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழரின் போராட்ட அரண் சிங்களத்தால் உடைக்கப்படுமாயின், அடுத்ததாக இருக்கின்ற முஸ்லீம் இனத்தவரிலே சிங்களம் கொம்பு பாச்சும். அதற்கு எம்மால் ஈடுகொடுக்க முடியாதென்பதால் இருஇனமும் இணைந்தே இருக்கவேண்டும்’.

அமரர் மஜீத் அவர்களின் கூற்று இப்போ நிதர்சனமாகி வருவதை உணர முடிகிறது.

 ‘சிறுபான்மை இனமென்பது இலங்கையில் இருக்கக்கூடாது’ என்று கூறிய ஜனாதிபதியின் கூற்றை சற்று ஆழமாக சிந்தித்தால் உண்மை புரியும். திட்டமிட்ட சிறுபான்மையினரின் குடியகற்றலையும், சிங்களத்தின் மேலாதிக்கத்தையும் புரிந்துகொண்டு அடுத்த நடவடிக்கை என்ன செய்யவேண்டுமென தமிழ்பேசும் மக்களும், அரசியல் தலைமைகளும் கூட்டாக இணைந்து உடனடியாக சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

சிறுபான்மையினரின் ஒற்றுமையே பலம்.

கனக கடாட்சம்