நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்  கருத்தொன்றைக் கூறியிருந்தார். விடுதலைப் புலிகளின் கருத்தொருமைமிக்கவர்களாகவும் கனவில் சஞ்சரித்துக் கொண்டு தனி நாட்டை அமைக்கும் நோக்கில் செயற்படுகின்ற இனவாத சக்திகள், இன்னும் இருந்து கொண்டுதானிருக்கின்றன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் இனவாதம் களையப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார். இனக்குரோதங்களும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறைகளும், யாரால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன எனும் உண்மை, தமிழ் இலக்கியத்தின் மீது பற்றுகொண்ட ஹக்கீமிற்கு புரியவில்லை என்பது கவலைக்குரியது.

மகாவலி அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக தமிழ், முஸ்லிம் மக்களின் சிறப்பு மிக்க நீர், நிலவளங்கள், சிங்கள மயமாக்கலிற்காக பறிக்கப்பட்ட வரலாற்று உண்மையை மூடி மறைக்க முயல்வது சோகமானது.

சிங்களப் பேரினவாத அரசுகள், தமிழ் மிதவாத அரசியல் தலைமைகளோடு செய்து கொண்ட பல உடன்படிக்கைகளை இரவோடிரவாக கிழித்தெறிந்த வரலாற்றுச் சோகங்களை மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

சம்பூரில் வாழ்ந்த பூர்வீக தமிழ்க்குடிகளை வேரோடு பிடுங்கி எறிந்து அகதி முகாம்களுக்குள் முடக்கிய அரசின் நடவடிக்கை, தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாமா?

யாழ். கடற்கரை வீதி, குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலை அமைக்கும் பணியில் படையினர் ஈடுபடுவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ் சுமத்தும் போதும், உருத்திபுரம் சிவன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் புத்தர் சிலையை இராணுவம் தேடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விசனம் தெரிவிக்கும்போதும், யாருடைய இனவாத முகத்தை அங்கு கண்டு கொள்கிறார் நீதியமைச்சர் ஹக்கீம் அவர்கள்.

இறைமையுள்ள பூர்வீக தேசிய இனமொன்று, தமது அரசியல் பிறப்புரிமையைக் கேட்கும்போது, அதனை இனவாதமாகச் சித்தரித்து நிராகரிக்கும்போக்கு, பேரினவாத வன்மம் கொண்ட ஆட்சியதிகாரவாசிகளிடம் காணப்படலாம். அதில் ஆச்சரியமடைய ஒன்றுமில்லை.

ஆனால், ஒடுக்கப்படும் முஸ்லிம் இனத்தின் அரசியல் தலைவர் ஒருவர், இன்னொரு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிறப்புரிமைக் கோரிக்கையை, சிங்களம் போன்று, இனவாதமென்கிற குறுகிய பார்வைக்குள் கரைத்துக் கொள்வது அபத்தமானதாகத் தென்படுகிறது.

காஷ்மீர் மற்றும் பலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டங்களை இவ்வாறான கோணத்தில் அணுகினால், எவ்வாறு இருக்குமென்பதை தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்களென்று நம்பலாம். விடுதலைப் புலிகளை அரசு போரில் வென்றதால், அரசு கொடுப்பதை பெற்றுக் கொண்டு இரண்டாம்தரப் பிரஜையாக வாழக் கற்றுக் கொள்ளுங்களென்று சொல்ல வருகிறாரா அமைச்சர் ரவூப் ஹக்கீம்?

உரிமையோடு வாழும் கனவின் இருப்போடு வாழ்வதால்தான் , யசீர் அரபாத்தை இழந்த பின்னரும் பலஸ்தீன மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஹக்கீம் போன்று இன்னும் பல அரச அதிகாரவாசிகள், தமிழர் தரப்பு கடும் போக்கினை கை விட்டு இறங்கி வந்து தருவதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

மூன்று வருடமாகியும் சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்ட, சிலுவை சுமந்த மக்களின் இயல்பு வாழ்வு இதுவரை மீட்கப்படவில்லை!
காணாமற்போன தமது உறவுகளைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறது பெருங் கூட்டமொன்று!
வெள்ளை வான்களின் மின்னல் வேக ஓட்டங்கள் இன்னமும் குறைந்தபாடில்லை.

இறுதிப் போரில் சரணடைந்து இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்ட போராளிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட அரசு மறுக்கின்றது.
நீண்ட காலமாக விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வட கிழக்கு மற்றும் மலையக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நீதியமைச்சர்    சிரத்தை கொள்வதில்லை.

ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனங்களுக்கு, நீதி கிடைக்க வேண்டுமென்கிற சர்வதேச நீதி நியமங்களை கற்றுணர்ந்த சட்டவாளரான ரவூப் ஹக்கீம், அவலப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லையா என்கிற கேள்வி பலமாக எழுகிறது.

83 இல் கொண்டு வரப்பட்ட 6ஆவது திருத்தச் சட்டம், தனி நாட்டுக் கோரிக்கை குறித்து பேசமுடியாதவாறு தடுத்துள்ளது.
இந்நிலையில் தமிழர் தரப்பு, தனி நாட்டுக் கனவில் கடும் போக்கான அரசியல் கோரிக்கையை முன் வைக்கிறதென குற்றஞ்சாட்ட முனைவது பொருத்தமாகப்படவில்லை.

சிங்கள கடும் போக்காளர்களின் மகாவம்ச மனங்களைக் குளிர்விக்கலாம் என்று நினைத்தால் இவ்வாறு பேசலாம்.
 ஆயினும், மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானமே இவ்வாறு பேச வைக்கிறது என்பதையும் புரிந்து கொள்வது இலகுவானது.

அதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் மக்கள் மத்தியில் போராட்டங்கள் உருவாகக் கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுவதை அவதானிக்கலாம்.

இதனை திசை திருப்புவதற்கு அமெரிக்க – இந்திய எதிர்ப்பு, கடும் போக்கினை மேற்கொள்ளும் கூட்டமைப்பினர் என்கிற குற்றச்சாட்டு, போன்றவற்றை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளது இலங்கை அரசு! அத்தோடு மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியிலும் அரச தரப்பினர் ஈடுபடுவதைக் காணலாம்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியினர் அணி திரள வேண்டுமென அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறிய அறிவுரை இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இவை தவிர, ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், முன்பு  மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஜே.வி.பி. யினர் தற்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு வாதத்தை முன்னிலைப்படுத்துவதையும் கவனிக்க வேண்டும்.

ஆகவே, வரிச்சுமைகளுக்கெதிரான மக்கள் போராட்டமா? அல்லது அமெரிக்க – இந்திய ஏகாதிபத்தியங்களுக்கெதிரான நாட்டு மக்களின் ஒன்றிணைந்த போராட்டமா? என்கிற இரு தெரிவுகளில், அரசின் இருப்பைக் காப்பதற்கு ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டமே கை கொடுக்குமென்பதை ஊகிப்பது கடினமானதல்ல.

ஆதலால், எதிரணிகளை தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த இரண்டு தெரிவுகளுக்குள் அடங்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புலிச்சாயம் பூசி அச்சுறுத்தி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து வந்தால், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான  பொறிமுறைகள் குறித்து, இக்குழுவில் பேசுகிறோமென்று சர்வதேசத்தை ஏமாற்றலாமென அரசு திட்டமிடுவது போல் தெரிகிறது.
ஹக்கீம் முதல் தேவானந்தா வரை கூட்டமைப்பை விமர்சிக்கும் போக்கில், இத்தகைய உள்வாங்கும் சூத்திரங்கள் இருப்பதை உணரலாம்.

ஆயினும், நாடாளுமன்றில் உரையாற்றிய இரா. சம்பந்தன் அவர்கள், தமிழர் பகுதிகளில் ஜனநாயக ரீதியான ஆட்சி நடக்கக்கூடாதென்பதில் அரசு உறுதியாக இருப்பதைச் சுட்டிக் காட்டியதோடு, கூட்டமைப்பிற்கு அதிகாரம் தேவையில்லை, அதனை மக்களின் கரங்களில் கொடுங்கள் என்று தமிழர் இறைமை குறித்து சுட்டிக் காட்டினார்.

ஆனாலும் இறைமையைத் தியாகம் செய்யாத வகையில் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்வதாகக் கூறும் சம்பந்தன், இதில் சிங்களத்தின் இறைமையைக் குறிப்பிடுகிறாராவென்று புரியவில்லை.
 
-நன்றி-வீரகேசரி