ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக அரசியல் சதுரங்க விளையாட்டின் இறுதிப் போட்டியின் முடிவு இம்மாத(23.03.2012) முடிவுக்குள் தெரிந்துவிடும். மும்முனைப் போட்டியாக நடைபெறும் இவ்விளையாட்டில் அமெரிக்கா, இந்தியா, இலங்கை ஆகியன போட்டியில் கலந்து கொள்கின்றன. அமெரிக்காவின் பக்கம் வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆதரவு செலுத்தும் அனைத்து வாழ் தமிழ்மக்கள் ஒருபுறமும், இலங்கையும் இந்தியாவும் கூட்டு வெற்றி பெறவேண்டுமென பேரினவாத சிங்கள மக்களும் அடிவருடும் ஏனைய  சமூகத்தினரும் ஒரு பக்கமாக இரு கூறாக பிரிந்து நிற்பதை காணலாம். 

இறுதி நிலைய அடையப்போகும் இந்த அரசியல் சித்து விளையாட்டில் நாடுகளின் உள் அந்தரங்கங்களை சரிவர புரிந்து கொள்ளாது தங்களுக்கு இசைவான கற்பனையை உருவகித்துக் கொண்டு கூச்சலிடும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருவதையும் காணலாம். “அமெரிக்காவின் இலங்கைத் தலையீடு, அதன் சுயநலமே” என்ற தலைப்பின் கீழ் எல்லோருக்கும் தெரிந்த வாய்ப்பாட்டை சொல்லிக் கத்திக்கொண்டிருப்பது இந்த கூட்டத்தின் தாரக மந்திரமாக உள்ளது. 

இது எல்லோருக்கும் தெரிந்த, அமெரிக்கா சார்பான உண்மை நிலைப்பாடு என்பதை மறுக்க முடியாது. தமிழ்மக்களைப் பொறுத்த வரையில் இவற்றைப் புடம்போடுவதோ கிண்டிப் பார்ப்பதோ தேவையற்றது. அமெரிக்க எடுத்திருக்கும் இந்த நிலைப்பாட்டினுள் தேசியம் சார்ந்த அனைத்துலக தமிழ்மக்கள் எப்படி சாதகாமாக கனியவைப்பது என்பதுதான் புத்திசாலித்தனமாக சிந்திக்கப்பட வேண்டியது. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த சதுரங்க விளையாட்டினுள் எடுத்திருந்த முடிவு சாணக்கியமானதா? இல்லையா? என்பது இம்மாத ஜெனீவா மாநாட்டில் புரிந்துவிடும். 

அமெரிக்கா தமிழ்மக்கள் சார்பாக நிற்பதாக உருவகித்துக் கொள்ளும் தமிழ் அமைப்புகள் எதோ ஒரு இடத்தில் தோற்கப் போகிறார்கள் என்பது விரைவில் புரிந்துவிடும். மீண்டும் மீண்டும் தோல்வியைத் தழுவாமல் இருப்பதற்கு “நாம் நாமாகவே” என்ற முடிவை இருக்கவேண்டும். இதை ஆழமாகப் புரிந்து கொண்டு “நமக்கு நாமே” என்ற முடிவை ஆழமாகக் கொண்டு எந்த நாடுகளின் தயவிலும் தங்கி நிற்காது யுத்தத்தை முன்னெடுத்த தலைமையை இக்கணம் நினைத்ததாக வேண்டும். இந்த நிலைப்பாட்டிலிருந்து தமிழ்மக்கள் என்றுமே வழுவிவிடக்கூடாது அத்தோடு பகைத்துக் கொள்ளவும் கூடாது. 

தேசியத்தின்பால் தமிழ்மக்கள் இதுவரை காட்டிவந்த அக்கறையை திசை மாறாது தொடர்ந்தும் காட்டல் வேண்டும். அதாவது, தாயகம், சுயநிர்ணயம், தன்னாட்சி. இம்மூன்றையும் தாரக மந்திரமாகக் வைத்துக்கொள்ளல் வேண்டும். ஏனெனில், தற்செயலாக அமெரிக்காவின் முயற்சியால் கிடைக்கப்பெறுகின்ற  தீர்வு நிட்சயமாக இம்மூன்று வரை உயர மாட்டாது. இலங்கை அரசினால் தமிழ்மக்களுக்கு வழங்குவது என சொல்லப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அப்பால் அமெரிக்கா ஒருபோதும் முன்னுரிமை கொடுக்காது. ஈழத்தமிழ் மக்கள் சார்பில் புதிதாக சேர்க்கப்பட வேண்டியவை யுத்த அனர்த்தத்துக்கான நீதியே. இந்த நிலையில் இந்தியாவின் நிலை “ஆப்பிழுத்த குரங்கு” தான். 

அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு சார்பாக இந்தியா இருக்கவில்லை என்று எடுத்துக்கொண்டால், இதனால் ஏற்படப்போகும் முறுகல் நிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம். ஆசியக் கண்டத்திலிருந்து வல்லரசு நிலைக்கு உயர விடக்கூடாதென்பது அமெரிக்காவின் திட்டமாக இருக்கலாம். அதற்கான ஓட்டையை இலங்கையினூடாக தமிழர் பிரச்னையை முற்படுத்தி நுழைய முயல்கிறதா? என ஐயப்படத் தோன்றுகிறது. மேலும், ஒருவேளை அமெரிக்காவின் முன்னெடுப்பினால் ஈழத்தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப் பெறுமாயின் அது இந்தியாவிற்கு ஒரு சவாலாக அமையலாம். தற்பொழுது இந்தியாவின் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் உரிமையை விட ஈழத்தமிழ் மக்களுக்கு கிடைக்குமாயின் தமிழ்நாட்டு மக்களும் டெல்லி அரசிற்கு எதிராக மேலதிக உரிமைகளைக் கோரி கோசமிட முற்படலாம். இதனால் இந்தியாவின் உள்நாட்டிலும் இனக்கலவரங்கள் தாமாகவே தூண்டிவிடப்படலாம். டெல்லி, தமிழ்நாடு, இலங்கை என்ற இன்னுமொரு அரசியல் சுற்றுப்போட்டியை எதிர்பார்க்கலாம். இருப்பினும், அமெரிக்கா ஈழத்தமிழர்கள் பிரச்னையை முன்வைத்து எதோ ஒரு வழியில் இந்தியாவோடு பகைத்துக் கொள்வதே சாதகமாக அமையலாம். அதற்கான வழிவகைகளை தேடுவதே அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கையாகலாம். 

தத்தமது தேசிய சுயநலத்தின் சார்பாக ஆடுகின்ற சதுரங்க விளையாட்டில் பகடைக் காய்களாக தமிழர்கள் ஆகிவிடக் கூடாது. தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் விலகாத கொள்கையில் உரபிடியாக இருத்தல் வேண்டும். இம்மாதம் 23 ம் திகதி தமிழரின் விடிவிற்கான முதற் படிக்கல்லாக அமையுமென்பது திண்ணம். அழிந்தவர்களினதும், மறைந்தவர்களினதும் கனவு நிஜமாகும் காலம். ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வில் அக்கறை கொண்ட அனைத்து மக்களும் மிக நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். “எடுத்தோம் கவுத்தோம்” என்றில்லாமல் அறிவுபூர்வமாக செயலாற்றல் அவசியம். 

மலையூர் பண்ணாகத்தான்
malaiyoor.pannakaththan@yahoo.com