இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய சுதந்திர வாழ்வை வழங்குவதற்கு சிங்களத் தலைமைகள் காட்டும் கஞ்சத்தனம்மீது கொண்ட அவநம்பிக்கைதான் காலத்துக்கு காலம் ஒப்பந்தமாக வெளிவந்துள்ளன.

அவையே ஒவ்வொரு தேர்தலின்போதும் பிச்சைக்காரனின் புண்போல தமிழ் பேசும் தலைமைகளும் சிங்களத் தலைமைகளும் பாவித்து பயனடைந்து வருகிறார்கள் என்பது வரலாறு. இதிலே, ஒரு சில வழிகளில் தமிழ் கட்சிகளும் நன்மையடைந்து வருவதையும் மறைக்க முடியாது. இலங்கை வரலாற்றிலே குறித்துரைக்கக்கூடிய ஒப்பந்தங்களில் 1947 ம் ஆண்டு தமிழ் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி, 1958 ல் செய்துகொண்ட பண்டா + செல்வா ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து 1987 ல் செய்துகொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தங்களாகும்

1944 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 29 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அமரர் G.G. பொன்னம்பலமும், உபதலைவராக அமரர் தந்தை S.J.V. செல்வநாயகமும் இருந்தார்கள். 1947 ல் நடைபெற்ற இலங்கைப் பொதுத் தேர்தலில் சோல்பரி ஆணைக்குழுவை நிராகரித்தல்என்பதை மையப் பொருளாக முன்வைத்து தமிழ் காங்கிரஸ் வடகிழக்கு தமிழ் மக்களிடம் கேட்ட ஆணைக்கு 7 பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டு பெரும் வெற்றி கிடைத்தது

அதனைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் அமரர் D.S .சேனநாயக்காவிடம் தமிழ் காங்கிரஸ் கோரிக்கைகளை வைத்தது

* இந்திய வம்சாவழியினருக்கு பிரஜா உரிமை வழங்கல்

* இலங்கையின் தேசியக்கொடியில் தமிழருக்காக இடம் வழங்கல்

* தமிழ் பகுதிகளில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல்

* சிங்களமும், தமிழும் அரச கரும மொழியாக்கல்

இதற்கான முழு ஆதரவையும் அமரர் G.G. பொன்னம்பலம் வழங்க மறுத்தமையால், முரண்பட்டுக் கொண்ட அமரர் தந்தை S.J.V. செல்வநாயகம் அவர்கள், 1949 ம் ஆண்டு புரட்டாதி 18 ம் திகதி தமிழ் அரசுக் கட்சியை ஸ்தாபித்ததையும் இவ்விடத்தில் நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும்

1947 ல் முன்வைத்த கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளதை அவதானிக்கலாம்

1958 ம் ஆண்டு செய்துகொண்ட பண்டா + செல்வா ஒப்பந்தத்தில் முக்கியமான

* இலங்கையின் உரிமைத்துவம் கொண்ட தேசிய சிறுபான்மை இனத்தின் தேசிய மொழி தமிழ்ஆகும்.

* வடகிழக்கில் பிராந்திய சபைகளை அமைத்தல்

* கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், நிலப்பங்கீடு, நீர்ப்பாசனம், கைத்தொழில், மீன்பிடி, வீடமைப்பு போன்றவைகளின் தீர்மானமும், நிர்மாணமும் அவ்வப்பகுதி பிராந்திய சபைகளுக்கு வழங்கல்

* வடகிழக்கில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத்தலைவர்கள், மாநகரசபைத் தலைவர்கள், பிராந்தியசபை உறுப்பினர்கள் (விரும்பினால்) ஒன்றிணைந்து திட்டங்களை வகுக்கவும், நிர்வகிக்கவும்.

இதுவரை இலங்கை அரசால் நடைமுறைப் படுத்தப்படாமல் போய்விட்ட ஒப்பந்தங்களில் இவையும் அடங்கும்

1987 ம் ஆண்டிலே அமரர் J.R. ஜெயவர்த்தனாவின் தலைமையில் செய்துகொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமானது 

* சகல இனங்களும் மொழி, மத, பண்பாடுகளை பேணிப் பாதுகாக்க உரிமையுடையவர்கள்.

* சிங்களம், தமிழ் ஆட்சிமொழியாகும். ஆங்கிலம் தொடர்பு மொழியாகும்.

* தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வதிவிடம் வடகிழக்காகும்.

* வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்

* ஒரு வருட எல்லைக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அங்கீகாரம் பெறல் வேண்டும்.

* இலங்கையில் மாகாண சபை உருவாக்கப்படல் வேண்டும்

வெறுமனே ஒப்பந்தம் செய்யப்படுவதும், அவை மீறப்படுவதும் அல்லது நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் கிடப்பதும் எதிர்வரும் காலங்களில் முற்றுப் புள்ளிகளோடு

நிறுத்தப்படல் வேண்டும். காலத்துக்கு காலம் அரசியல் தேவைகளை கருத்தில் கொண்டு புதிது புதிதாக ஒப்பந்தம் புனைவது அவசியமற்றதாகும்

நடைமுறைப்படுத்தாது தேங்கிநிற்கும் ஒப்பந்தங்களை காலத்திற்கு ஏற்றால் போல் மறுசீரமைத்து உயிர் கொடுக்க வேண்டும். தெரிவு செய்யப்பட்ட தலைமைகளை விட, தெரிவு செய்த பொதுமக்களுக்கே உரிமை அதிகம். எதிர்காலங்களில் அரசியல் தலைமைகளை தெரிவு செய்யும்போது அறிவாற்றல் தனமாக, கடந்த ஒப்பந்தங்கள் சார்பாக இவர்கள் ஆக்கபூர்வமான என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என அவதானித்து அதற்கு முன்னுரிமை வழங்கி தலைமைகளை தெரிவு செய்தல் அவசியம்.

வெறுமனே, ‘உசுப்பேற்றும்வீர வசனங்களை பேசுபவர்களையும் இவர்கள் வெட்டி வேரோடு சாய்ப்பார்கள்என்ற எதிர்வு கூறும் கற்பனா வாதத்தையும் ஏற்றுக்கொண்டு வாக்குப் பண்ணல் ஆகாது. ‘தெரிவானவர்கள் என்ன செய்தார்கள்என்பதில்தான் தெரிவு அமையவேண்டும். ‘ஊரான்‘ ‘சொந்தக்காரன்‘ ‘சாதிக்காரன்போன்றவை தெரிவுகளுக்குள் அடங்கலாகாது. இதுவே ஆரோக்கியமான, சிறந்த தலைமைகளை நிகழ், எதிர் காலங்களுக்கு வழங்குவதாக அமையும்.

கனகசபை  தேவகடாட்சம்