ஜெனீவாவின் ஐ.நா முன்றலில் கூடி நின்று தமிழர்கள் நடாத்தும் சாத்வீகப் போராட்டமும், .நாவின் உள் அறைகளில் இருந்து கொண்டு நடந்து முடிந்த வரலாற்றுப் பின்னடைவுகளிற்கு உயிர்கொடுத்தும் சாயம் பூசியும் தப்பித்துக்கொள்ள முயலும் கூட்டத்திற்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் தர்ம யுத்தம் உலகளாவிய ரீதியாக தமிழரின் வாழ்வியல் இருத்தல்களை அசைவு காண வைத்திருக்கப் போகின்றது என்பது பலரின் எதிர்பார்ப்புக்கள். இதனிடையே சண்டைக்குள் சாக்குவிரிக்கும்நிலையைப் போன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நானொருபக்கம் நீயொருபக்கம்மாக நின்று கைறிழுக்கும் போட்டியை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இலங்கை அரசின் கழுகுப் போக்கு மிகப் பெரிய அதிர்வலையையும், மாற்றத்தையும் உண்டு பண்ணலாம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மிட்டாய் வாங்கப் போகும் குழந்தை அடம்பிடிப்பதுபோன்று ஐ.நா கூட்டத்தொடருக்கு வரமாட்டேன் என்றொரு பக்கம், போகவேண்டும் என்பவர் இன்னொருபக்கமாகவும் வெட்டவெளிச்சமாய் சமர் புரிட்ந்துவிட்டு, ‘இன்னமும் நாங்கள் ஒற்றுமையாய்த்தான் முடிவெடுக்கின்றோம்என ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் மேதாவித் தன்மையை எண்ணும்போது தமிழர் காதுகளில் இன்னமும் பூ சுற்றலாம் என இவர்கள் நினைப்பது இன்றைய நகைச்சுவையின் உச்சம்

தமிழ்த்தேசியக் கூட்டமமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் தன்னிச்சையான முடிவு என ஏனையோர் தப்பித்துக் கொள்ள முயல்வது சுயநலமாகும். இலங்கை ஜனாதிபதியை இரா சம்பந்தன் தனியே சந்தித்ததற்கும், ஜெனீவா பயணம் இரத்தானதற்கும் தொடர்புகள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இது ஒரு பெரிய விடயமல்ல. கூட்டமைப்பு பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஏகோபித்த முடிவு எதுவாயினும் அதுவே அமுல்படுத்தப் பட்டிருக்க வேண்டும்

கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் தனிப்பட்ட ஒவ்வாத முடிவை மாற்றுவதற்கு அல்லது நடைமுறைப் படுத்துவதற்கு ஏனைய உறுப்பினர்களுக்கு திராணி இல்லாமல் போய்விட்டதென்றால் இவர்களின் முதுகெலும்பின் பலத்தையும், அடுத்ததாகத் தலைமை தாங்கக் கூடிய இயல்பையும் கூடவே இவர்களது சுயநலத்தையும் பகுத்தாய்ந்து முடிவெடுப்பதற்கு தமிழ்மக்களினால் முடியாததொரு காரியமல்ல. தமிழ்த்தேசியத்தில் பற்றுறுதி இருப்பின் செயற்பாட்டிலும் ஓர்மம் இருக்கும். தனியவே பாராளுமன்ற கதிரைகளை நம்புபவர்களுக்கு ஓர்மத்தை விட சுயநலமே மிகுதியாக இருக்கும்

கடந்தகால சில நிகழ்வுகளை புரட்டும் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கிஷோர், தங்கேஸ்வரி, கஜேந்திரன், ஸ்ரீகாந்தா போன்றவர்களின் நிலைகள் நினைவுக்கு வருகிறது. இரா. சம்பந்தன் அவர்களோடு பகைத்துக்கொண்டால் அல்லது முரண்பட்டுக்கொண்டால் எதிர்கால பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடுமோ என்ற பயம் தற்போதைய உறுப்பினர்களுக்கு மிதமிஞ்சி நிற்பதைக் காணலாம். தமிழ்த்தேசியம் பெரிதா? அல்லது நிலையற்ற சிங்கள அரசுக்குள் போலி மேட்டுமை நிலையோடு வாழும் பாராளுமன்ற கதிரை அவசியமா? இதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தமிழ்மக்களின் பகுப்பாய்வுத் தன்மை எனலாம்.

இது ஒருபுறமிருக்க, தமிழ்மக்களின் வாக்குகள் கதிரைக்காக விழுந்தவைகள் அல்லஅவை தேசியத்தைப் பெறுவதற்காகவே கிடைத்தவை என உணர்த்துதலுமாகும்அடுத்த தேர்தலுக்கு போட்டியிடும் வாய்ப்பை இழந்தாலும் அல்லது இரா சம்பந்தன் அதற்கான வாய்ப்பை வழங்காமல் இருந்தாலும் இவை எவற்றையும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசிய நலன் கருதி ஜெனீவா மாநாட்டில் தற்போதைய MP க்கள் கலந்துகொண்டிருக்க வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஜெனீவா பயணம் பற்றி நோக்கின் இரா. சம்பந்தனின் முடிவை மீறி, தமிழ்த்தேசியத்தின் அடைவை இலக்காகக் கொண்டு இப்போதைய உறுப்பினர்கள் இயங்கி இருப்பார்கள் எனின் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்திருக்கவும் மாட்டாது சிங்கள ஊடகங்கள் கூட்டமைப்புக்குள் குத்து வெட்டுஎன்று பாடித்திரிந்திருக்கவும் மாட்டார்கள்

உண்மையான தமிழ்த்தேசியத்தை எவர் நெஞ்சில் பதித்துள்ளார்களோ அதுவே அவர்களின் கொள்கையாக இருக்கும். சுயநலம் என்பதற்கு இடமிருக்காது. எதில் பிறழ்வு ஏற்படுகிறதோ அதில் தெளிவு இருக்காது. ஆக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் தேசியம் சார்ந்த உறுதி குன்றியதே இந்நிலைக்கு காரணமென கருத இடமுண்டு.

இன்னமும் பிந்தவில்லை. ஜெனீவா மாநாட்டுடன் தமிழ்த்தேசிய வரலாறு முற்றுப்பெறப் போவதில்லை. தொடரப் போகும் சாத்வீகப் போராட்டங்களில் தமிழருக்கான நிலை எடுப்புக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தேசியம் சார்ந்ததாக எடுத்தாக வேண்டும். தேசியத்தின்பால் எதையும் தூக்கி வீசலாம். சம்பந்தர் போன்ற எத்தனையோ தலைவர்களின் வரலாறுகளை கடந்தகாலம் கற்பித்துச் சென்றுவிட்டது. தேசியக் கடமைப்பாட்டிலிருந்து இதுவரை தமிழ்மக்கள் விலகவில்லை. உறுப்பினர்களும், அமைப்புக்களும் தடம் மாறிவிட்டன. எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியொரு சம்பந்தன் போன்ற தலைவர்களை வைத்தோ, கட்சியை வைத்தோ முடிவெடுக்காமல் தமிழ்த்தேசியத்தை வைத்து முடிவெடுக்க வேண்டும் என்பதே உணர்வுகளுடன் கொப்பளித்துக் கொண்டிருக்கும் தமிழ்மக்களின் உள்ளக் குமுறல்கள் ஆகும்

மலையூர் பண்ணாகத்தான்

malaiyoor.pannakaththan@yahoo.com