தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடாஇந்த வாசகம் காலப்போக்கில் செயலிழந்து போய்விடுமோ என்ற பயம் இயல்பாகவே எழுகிறது. ‘தமிழன் என்று சொல்லடா பிரிந்துதான் நில்லடாஎன்பது காலம் காலமாக தமிழரை தொடருமோ?. இதுதான் இன்றைய கேள்வியாக எம் முன் எழுகிறது. புலிகளின் பின்னடைவிற்குப் பின்னர், புலிகளோடு முக்கிய தொடர்புடைய ஒரு சிலருக்கு கதிரையும், பிரபல்யமும் தான் அவசியமாய் படுகிறது.

பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தாயக, சுதந்திர வேட்கை குன்றி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ‘ஒற்றுமைபற்றி கூக்குரலிடும் அனைவரும் ஒன்றைமட்டும் உணர்தல் வேண்டும். அதாவது ஒற்றுமைப் படுவதற்கான பொறிமுறையை தேடாது ஒற்றுமைப் படக்கோருவது பயனளிக்காது. கட்டுரையாளரின் கருத்துப்படி தாயக சுதந்தந்திர வேட்கைபற்றிய தெளிவுபடுத்தல் போதாமையும், கருத்தியலில் கொண்ட பற்றுறுதியை விட கருத்து கூறியவரிடமே மிக அதிகமாக பற்று கொள்வதுமே பிரதான காரணமாகும்.

புலம்பெயர் நாடுகளில் பிரிவினையின் காரணமாக தமிழர் கோட்பாடுகள் சிதையுண்டு போகின்றன. இதை நிறுத்துவதற்கான வழியென்ன என எல்லோரும் சிந்திக்கவேண்டும். இதற்கான நீதிபதிகளும், செயற்பாட்டாளர்களும் தமிழ்மக்களேயன்றி வேறுயாருமிலர்

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்என்ற வாசகத்தை தமிழ்மக்கள் எப்படி மனதில் ஆழமாக பதித்துக் கொண்டார்களோ, அதுபோல தாயக விடுதலையை நோக்கி முன்னெடுப்புகளைச் செய்கின்ற எந்த அமைப்புகளும் பிரிந்து நின்று செய்தல் ஆகாதுஎன்ற முடிவை இன்னுமொரு தாரக மந்திரமாக கொள்ளல் வேண்டும். பிரிந்து நின்று தாயக மீட்சியை முன்நிறுத்தும் செயற்பாடுகளை மக்கள் ஊக்குவிக்கலாகாது. மாறாக இவர்களை கட்டுமான நிர்ப்பந்தத்திற்குள் கொண்டுவந்து அவர்களின் போராட்ட அறைகூவலுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும். இதற்காக வெகுஜன போராட்டமொன்றை தமிழ்மக்கள் உடன் மேற்கொள்ளவேண்டும்.

ஒற்றுமையான செயற்பாடு தொடர்ந்தும் இல்லாதுவிடின், சுயநிர்ணய அரசியல் நீரோட்டத்திற்கு ஆதரவாகவும், அடக்குமுறைக்கு எதிரானதுமான ஒரு புரட்சிக்குழு தமிழ்மக்களிடமிருந்து புதிதாக எழல் வேண்டும். இந்தக் கொள்கையில் தமிழ்மக்கள் உறுதியாக இருப்பின் கதிரைச் சண்டை பிடிப்பவர்களின் வயிற்றில் புளிக்கரைக்கும்‘.

கனக கடாட்சம்

trincokadatcham@yahoo.com

முரளிநடேசன்

tmnadesan@gmx.ch