உலகத்தின் சமாதான பூமியாகவும், மனித நேயத்திற்கு சிகரமானதும், சொர்க்க பூமியின் தலைவாசலாகவும் கணிக்கப்படும் சுவிற்சர்லாந்து தேசத்தில் உள்ள பாசெல் மாநிலத்தில் ஈழத்தமிழரின் வருகை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதலாம். ஏறத்தாள இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஈழத்தமிழரின் வருகை அமைந்திருந்தாலும், ஈழத்தில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட சிங்களத்தின் அனர்த்தங்களால் பல காரணங்களுடன் வெளியேறிய ஈழத்தமிழர்களின் இடப்பெயர்வு சுவிற்சர்லாந்து தேசத்தின் பாசெல் மாநிலத்தின் ஒரு புதிய சகாப்த்தத்தின் தொடக்கப் புள்ளியாக கருதலாம்.

1982 ம் ஆண்டு காலப்பகுதிகளில் இருந்து ஒரு சில ஈழத்தமிழர்கள் பாசெலுக்கு வந்திருந்த போதிலும் 1983 ம் ஆண்டு காலப் பகுதியிலே ஈழத்தமிழர்களிற்கு நேர்ந்த இன்னல் காரணமாக ஜெர்மனி நாட்டிற்கூடாக 1984 ம் ஆண்டு காலப்பகுதியில் பெருமளவாக பாசெலில் குடியேறி இருந்ததை குறித்து உரைக்கலாம். குடியேறிய காலம் தொடக்கமாக இன்றுவரை தொடர்ச்சியாக தமிழர்களின் கலாசார விழுமியங்களையும் அடையாளங்களையும், மொழிவளங்களையும் பேணிப் பாதுகாத்து வருவதை காணலாம். ஏனைய புலம்பெயர் தேசங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகளவு தமிழ்மொழியில் வளர்ச்சிகண்ட இடங்களில் சுவிற்சர்லாந்து தேசத்தையும் உள்ளடக்கலாம். அதோடு அரசியல், கலை, இலக்கிய மேம்பாடுகளில் பாசெலில் வாழுகின்ற தமிழ்மக்களின் பங்கு அளப்பரியது எனலாம்.

வாழும் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இப்பணிகளின் பொருட்டு நினைவுகூருதல் பொருத்தமாகப்படினும் பெயர் விபரங்கள் சம்பந்தமாக நேர்த்தியான தகவல்கள் கிடைக்கப்பெறாதது வருந்தத்தக்கது. இயன்றளவு கிடைத்த தகவல்களைக் கொண்டு கன்னிப்படைப்பாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்பது எமது அவா. இதுவொரு தொடக்கப்புள்ளியாக அமையவேண்டுமென்பதில் முனைப்புக் கொண்டபடியால் தவறுகள் நேர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தவறுகள் திருத்தப்படவேண்டும். சரியான தரவுகள் கொடுக்கப்படவேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

ஈழத்தமிழர்களின் செயற்பாடுகள் –  கலையும், அரசியலும்

ஈழத்திலிருந்து அகதியந்தஸ்த்துக் கோரிய தமிழ்மக்களை நிராகரித்து திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்களை உறுதிப்படுத்த பல பிரயத்தனங்கள் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவை பல பல கோணங்களாகவும், பல பல பரிணாமங்களாகவும் விஸ்தீரணமடைந்தது. ஆரம்பத்தில் கலை நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டது. அதில் நாடகங்களும் தெருக்கூத்துக்களும் முன்னெடுக்கப்பட்டது.

1985 ம் ஆண்டு அகதிகள் தினம் வெகு விமர்சையாக அனுஷ்டிக்கப்பட்டது. அதில் ஈழத்தமிழர்களின் பங்கு வெகுவாக இருந்தது. ஆரம்பத்தில் குறைந்தளவு தமிழ்மக்களே இருந்த போதிலும் ஒற்றுமைக்கு குறைவே இருக்கவில்லை. ஈழத்திலே தமிழ்மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மிக துல்லியமாக உலகறியச் செய்த பெருமை அக்காலத் தமிழ்மக்களையே சாரும். இருப்பினும் ஈழத்தமிழ்மக்களின் அகதியந்தஸ்த்துக்   கோரிக்கையை சுவிஸ் அரசு மறுத்திருந்த போதிலும் அதை உடைக்கவேண்டிய பாரிய பொறுப்பு மையப்பட்டிருந்தது. தமிழ்மக்களால் நடாத்தப்படுகின்ற நிகழ்வுகள் போதாது என்ற நிலையை உணர்ந்திருந்தபோது மேலதிகமாக அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ஈழத்தின் இன்னல்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுவரவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களுக்கு 1985 ம் ஆண்டு கரும்பு கிடைத்தது போல் ஆனது. அதாவது சுவிற்சர்லாந்து தேசத்திலே ஈழத்தமிழ்மக்களுக்கான அகதியந்தஸ்த்தை நிலைப்படுத்த அரசியல் மயப்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஆவணம் தேவைப்பட்டது. புத்திஜீவிகளாக இருந்த பாசெல் தமிழ்மக்கள் ஒன்றுகூடி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை சுவிற்சர்லாந்து தேசத்திற்கு அழைத்து நிலைமையை சுவிஸ் அரசுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று எண்ணினார்கள்.

1985 ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவிஸ்வாழ் ஈழத்தமிழர்களால் அமரர் அமிர்தலிங்கம் சுவிஸ் நாட்டிற்கு அழைக்கப்பட்டார். ஒரு கல்லில் இரு மாங்காய் அவருக்கு. சர்வதேச மட்டத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை வெளி வருவது, மற்றையது அகதியந்தஸ்த்துக் கோரும் தமிழ்மக்களுக்கு விமோசனம். சுவிஸ் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை அகதியந்தஸ்த்துக் கோரிய ஈழத்தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தியது. அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள் இருந்து சிந்திக்கவில்லை. அதாவது ஒரு யாழ்ப்பாணத்து வாசியாகவோ அல்லது பண்ணாகத்து வாசியாகவோ சுவிற்சர்லாந்து தேசத்திற்கு வருகை தந்து ஈழத்தமிழ்மக்களின் அனர்த்தத்தை உரைக்கவில்லை.  ஒட்டுமொத்த ஈழத்தமிழ்மக்களுக்காகவே அவர் குரல் ஓங்கியது. அமரர் அமிர்தலிங்கத்தின் வருகை தமிழ்மக்களைப் பொறுத்தவரை அசையா மைல்கல்.

ஈழத்தமிழ்மக்கள் சுவிற்சர்லாந்து தேசத்திலே அகதியந்தஸ்த்துக் கோரி தமது இருப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதற்கு வழிகாட்டியாகவும் வடிகாலாகவும் இருந்தவர்களை மறப்பது தர்மமன்று. ஆரம்பத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் இன்றுவரை அகதியந்தஸ்த்துக்கோருவது இலகுவாக இருக்கலாம். ஆரம்பகாலத்தில் இது வெற்றியடைவதற்குக் காரணம் ஒற்றுமையாக ஒரு குடையின்கீழ் அமர்ந்து சிந்தித்ததேயாகும். இருப்பினும் ஒரு உண்மை புலனாகுவதை தவிர்க்கமுடியாது. மேலும்,

அகதியந்தஸ்த்துக் கோருவதற்கான தகமைகள் யாவும் தனிப்பட்ட ஒருவருக்கு நடந்ததென்று கொள்ளாது, ஈழத்தமிழ்மக்களுக்கு நடந்த ஒவ்வொரு தனிப்பட்ட அனர்த்தத்தையும் ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழ்மக்களின் அனர்த்தமாக மாற்றியிருந்ததை உறுதிபடக் கூறலாம்.

சுவிஸ் பாசெல் சமூக அமைப்பினரால் மார்கழி 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய இலங்கைப் பாராழுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகமும் ஆகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களை பாசெல் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அன்னாரை வரவேற்கும் காட்சி. குறிப்பாக விநாசித்தம்பி, ராஜா கிருஷ்ணன், கனகா மாஸ்டர், விவே செல்லத்துரை போன்ற முக்கிய சிலர் படத்தில் நிற்பதைக் காணலாம்.

1985 ம் ஆண்டு காலப்பகுதியில் பேராசிரியர் Uwe Beissert அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட முதல் பாசெல் இந்து ஆலயத்தின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. படத்தில் கண்ணதாசன், புஷ்பாகரன், விவே செல்லத்துரை ஆகியோர் நிற்பதைக் காணலாம்.

பாசெல் மாநகரில் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தமிழர்களின் இன்னல்களைக் கருத்தில்கொண்டு சுவிஸ் பிரஜைகளால் நடாத்தப்பட்ட முதல் அமைதி ஊர்வலம்.

 

1885 ம் ஆண்டு காலப்பகுதியில் நடாத்தப்பட்ட அகதிகள் தினத்தில் முதன் முதலாக ஈழத்தமிழர்கள் பங்குகொண்ட நிகழ்வு.

ஈழத்தமிழர்களின் பிரச்னையை நாடறிய வைக்கும் திட்டத்தில் பங்குகொண்ட நிகழ்வு. படத்தில் விவே செல்லத்துரை, மூர்த்தி மாஸ்டர், Uwe Beissert.

 

1990 ம் ஆண்டு காலப்பகுதியில் ஓம்திட்டத்தை அறிமுகப் படுத்தும் போது நடாத்தப்பட்ட நிகழ்வின் போது நடந்த இசை நிகழ்ச்சி.

1990 ம் ஆண்டு காலப்பகுதியில் ஓம்திட்ட அமைப்பால் தென்னிந்தியப் பின்னணிப்பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களை வரவழைத்து ஸ்டுக்கில் பேர்கர் அவர்களால் கௌரவிக்கப்பட்டு பட்டமளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டது.

ஓம்திட்ட ஸ்தாபகரான Uwe Beissert, விவே செல்லத்துரை ஆகியோர் சுவிஸ் மக்களுக்கும், சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்குமிடையிலான நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலில் எடுக்கப்பட்டது.

கனகசபை தேவகடாட்சம்
trincokadatcham@yahoo.com
தியாகராசா முரளிநடேசன்
tmnadesan@gmx.ch