கட்டப்பொம்மனின் வீரவரலாறு சொல்லும்போது காட்டிக்கொடுத்த எட்டப்பனும் தொடர்வான். 

இயேசுவின் புனித வாழ்தலை கூறும்போது காட்டிக்கொடுத்த யூதாசும் தொடர்வான்.  

பண்டார வன்னியனின் வீர காவியம் படிக்கும்பொழுது காட்டிக்கொடுத்த காக்கை வன்னியனின் வரலாறும் தொடரும். 

இவற்றை எடுகோள்களாக வைத்துக்கொண்டு எட்டப்பனும், யூதாசும், காக்கைவன்னியனும் வரலாற்றில் வாழ்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளல் ஆகாது. அதுவானது புனிதருக்கும், வீரர்களுக்கும் இவர்கள் ஆற்றிய துரோகத்தனத்தின் இழிகர அடையாளச்சின்னமாகவே வரலாற்றில் பதிகிறார்கள் என்பதே வாஸ்தவமான கூற்றாகும். 

கடந்து சென்ற காலச்சுவடுகளின் தடங்களை பின்தொடர்ந்து பார்த்தால் அப்பாவித் தமிழ்மக்களுக்கு, தமிழினத்தை தலைநிமிர்ந்தது வாழவைப்பதற்காக தம்மை ஆகுதியாக்கிக்கொண்ட வீரர்களுக்கு மஹிந்த அரசு செய்த துரோகத்தனத்துக்கான ‘வெற்றிச்சின்னம்’ தான் பண்டார வன்னியன் தடம் பதித்த புதுமாத்தளன் பகுதியில் நடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தைக் காட்டும் அந்தத் துப்பாக்கிச்சிலை ஆகும். எதிர்காலத்தில் அதைச்சுற்றியே சிங்களப்படையினரின் பெரும் பாசறை அமையப்போகின்றது. 

பயங்கரவாதத்தை ஒழித்ததற்கான நினைவுச்சின்னமென்று அரசு கூறலாம். புலிகளை கொன்றொழித்ததற்கான வெற்றிச்சின்னமென்றும் கூறலாம். எது எப்படியாயினும், ஆயிரமாயிரம் அப்பாவித்தமிழ்மக்களினதும், ஆயிரமாயிரம் வீரர்களினதும் வேட்கை அனல் கொண்ட பச்சை இரத்தங்களை சேறாக்கி, வித்துடல்கள் விதைக்கப்பட்ட புனித பூமியாகும். 

உறங்கு நிலையில் இருக்கின்ற விதைகளை உயிர்பெற வைப்பதற்காக நாட்டிய ‘வெற்றிச்சின்ன’மாகவே பறிகொடுத்த தமிழ்மக்கள் நோக்குகின்றார்கள், என்று மஹிந்த அரசுக்கு புரியாமல் இருக்கின்றதென்பதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

‘அனுமானின் வாலில் கட்டிய தீ’ போன்று எதிர்காலத்தில் அனைத்து தமிழ்மக்களின் நெஞ்சங்களில் அந்தத் தீ பற்றிவைக்கப்போகின்றது என்ற உண்மையை பாவம் சிங்கள இனவாதிகளால் இப்போது உணரமுடியவில்லை என்பது பரிதாபத்துக்குரியது. 

யூதாஸ் தனது துரோகத்தனத்தால்தான் ஜேசுபிரான் சிலுவையில் மரிக்க வேண்டியதாயிற்று என்பதை அவன் மனச்சாட்சி உணர்த்தியபோது, அவனின் துரோகத்தனத்திற்கு சன்மானமாக கிடைத்த அந்த நிலத்திலேயே தன்னை மாய்த்துக்கொண்டதும், இன்றுவரை அந்த நிலம் ‘இரத்த நிலம்’ என்று அழைக்கப்படுவதையும் வரலாற்றில் காணலாம். அதே ‘இரத்த நிலமாக’ துரோகத்தனத்தின் சின்னமாக மகிந்தாவின் ‘வெற்றிச்சின்னம்’ வன்னி மண்ணில் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நிலை கொள்ளப்போகிறது. 

மானமுள்ள ஒவ்வொரு தமிழரின் இதயத்திலும் தொடர் அசைவு நிலையில் இந்த ‘வெற்றிக் கொண்டாட்டம்’ மக்கள் மனதில் சோகமாய்ப் பதிந்திருக்கும் என்பதோடு, எமது தாயக மீட்பை சுட்டிக்காட்டும் குறியீட்டுச் சின்னமாய் வீரத்துடன் விஸ்வரூபம் எடுக்கப்போகின்றதென்பதையும் உறுதியுடன் நம்பலாம். 

தசக்கிரீவன்