தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தமிழ்த்தேசியத்தின் இலக்கை விட்டு நகர்ந்து செல்கின்றார்கள் என்றும், திட்டமிட்டுப் படுகுழியில் தமிழர்கள் உணர்வை அழிக்கப் போகின்றார்கள் என்றும், இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை இதற்கு முந்திய கட்டுரையில் காட்டமாகவே வெளியிட்டிருந்தேன்.

இதை சரிவரப் புரிந்துகொள்ளாத, தம்மைப் புத்திசாலிகள் என்று எண்ணிக்கொண்ட பல அமைப்பின் பிரதிநிதிகள் சேற்றை அள்ளி வீசியிருந்தனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் செய்கின்ற அதி மேதாவித்தனமான பச்சோந்திப் பணிகளுக்கு பக்கப் பாட்டுப் பாடும் பலர், இப்போது இதற்கு முன்னர் எழுதிய எனது கட்டுரையை மீளவும் படித்தால் எதிர்வு கூறல் புரிந்திருக்கும்.

 
விடயத்திற்கு வருவோம்,
இலங்கை அரசு தமிழ்மக்களுக்கு செய்த, செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்கு தமது வெறுப்பைக் காட்டும் முகமாக ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழ்மக்கள் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தனர். இதைப்புரிந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை அரசிற்கு எதிர்ப்பான முகத்தைக் காட்டி வெற்றிபெற்ற பின்னர் மீண்டும் தமது சுயமுகத்தைக் காட்ட முற்படுகின்றனர். அதன் வெளிப்பாடுதான் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது நடவடிக்கையாகும்.
 
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் இலங்கைப் பாராளுமன்ற கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்டது வெறுமனே எதேச்சையான முடிவல்ல. குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களுக்கு தெரியப்படுத்தாமலோ அன்றி அனுமதியின்றியோ பங்குபற்றியிருக்க முடியாது. “அடிப்பதுபோல் அடிப்பேன் நீ அழுவதுபோல் அழு” என்ற இந்த நாடகத்தை புரிந்து கொள்வதற்கு பெரிய புத்திசாலித்தனம் தேவைப்படாது.

 
கடந்த கால அரசியல் வரலாற்றின் சில பக்கங்களை மட்டும் புரட்டினால் சம்பந்தரின் சாணக்கியம் என்ற பெயரில் செய்த சில சுயநலங்கள் வெளிப்படும். ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் பலமாக இருந்த போது சம்பந்தன் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தார். அந்தக் காலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது தான் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்காக புலிகளைச் சரணடைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதோடு கூட புலிகளின் பகுதிகளில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வருவதால் புலிகளின் செல்வாக்கு உயருமென்ற போதைமருந்தை ஏற்றி அதை தனக்கும் சாதகமாக ஆக்கிக்கொண்டார். அதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஓர் ஓய்வுநிலை ஆசிரியரை தன்னோடு பாராளுமன்ற பட்டியலில் இணைத்துக் கொண்டதோடு புலிகளையும் மகிழ்வித்திருந்தார்.

 
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடுப் பகுதியிலிருந்து போட்டியிட்டவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட முடியாத பட்சத்தில் அவரைத் தேசியப்பட்டியலூடாக உள்வாங்கி புலிகளுக்கு உத்தமனாகக் காட்டிக்கொண்டார். ஆனால் தனக்கு விசுவாசமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எப்போதும் தன்னோடு இருக்கவேண்டும் என்பதற்காக தேசியப்பட்டியல் தெரிவின் பலத்தில் பெரும்பகுதியை தன்வசம் வைத்துள்ளார்.
 
 விடுதலைப்புலிகளின் பின்னடைவு அரசைப் பலமாக்கி விட்டது. அரசின் பக்கம் சாயக்கூடிய அதேநேரத்தில் தனக்கு விசுவாசமான பாராளுமன்ற உறுப்பினரின் தேவை தற்போதைய நிலையில் அவசியமெனப் பட்டதனால் சுமந்திரன் அவர்கள் தேசியப்பட்டியலூடாக உள்வாங்கப்பட்டார். அதாவது அன்றைய நிலையில் புலிகள் பலமாக இருந்தபோது தொடர்பாளராக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேசியப்பட்டியலினூடாக தேவைப்பட்டதோ அதேபோன்று இன்றைய நிலையில் இலங்கையரசின் தொடர்பாளராக சுமந்திரன் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சம்பந்தனின் பெரும்பகுதி ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்டார். இது முழுக்க முழுக்க பச்சைச் சுயநலமே. கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு எப்பொழுதுமே தமிழ்மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை.

 
இந்த நாடகங்கள் எப்பொழுதுமே அரங்கேறிக்கொண்டிருப்பதற்கு திருவாளர் பொதுஜனங்கள் மந்தையாக இருக்க முடியாது. மெளனமாக இருக்கின்றார்கள் என்றால் எதுவுமே அறியாமல் இருக்கின்றார்கள் என்று பொருள் அல்ல. உடனடியாக மக்கள் சிந்தித்து ஒரு தீர்வுக்கு வந்தாக வேண்டும். அந்தத் தீர்வு தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் நோக்கியதாக அமையவேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற உரிமையும், கடமையும் உண்டு.
 
தெரிந்தளவிலான தீர்வு
 
மீண்டும் சொல்கிறேன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மாற்றுவதல்ல தீர்வு. பாராளுமன்ற உறுப்பினர்களை மாற்றுவது. அதாவது தேசியத்தை நோக்கி விலைபோகாது நகருகின்றவர்களே தேவை. தற்பொழுது கூட்டமைப்பு எதிர்நோக்கியிருக்கின்ற பஞ்சம் இதுதான். இதற்கான வழியைக் காண்பதே ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
 
அண்மையில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களுடன் 76 புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்ட வேண்டுகோள் கூட்டமைப்பை அசைத்திருந்ததோடு எம் போன்ற பலரை விழிக்கவும் செய்திருக்கின்றது.
 
இந்த அறிக்கையில் கையொப்பமிட்ட 76 பேரும் இணைந்து ஏகோபித்த முடிவோடு ஒருவரை பொருத்தமென இனங்கண்டு தெரிந்து அவரை சுமந்திரனுக்குப் பதிலாக (அதாவது அவரை நீக்கிவிட்டு) தேசியப்பட்டியலில் இணைத்தல் வேண்டும். இதுவே சிறந்த முடிவாகத் தெரிகிறது. இது ஒன்றும் நடாத்த முடியாதவை அல்ல. காரணம் சுமந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல. அனர்த்தங்களின் வலிகள் அவருக்கு தெரிந்திருக்க சாத்தியமில்லை. ஏறக்குறைய கொழும்பு வாசியான தமிழர். இதனால் தேசியப்பட்டியலில் இருந்து அவரை விலக்குவது ஒன்றும் அடாத்தல்ல. சம்பந்தன் அவர்களால் தனக்குத் தேவையானவரை எப்படி உள்வாங்க முடிந்ததோ அதேபோல தமிழ்மக்களுக்குத் தேவையானவரை உள்வாங்குவதற்கான தேவை தமிழ்மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்களுக்கு உண்டு. இந்த மாற்றம் நடைபெறுமாயின் தான்தோன்றித்தனமானவர்களுக்கு நல்ல பாடமாகவும் அமையும்.
 
இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தீர்விற்கான அழுத்தத்தை மிகப் பலமாக வழங்கவேண்டும். குறிப்பாக நாடுகடந்து வாழும் தமிழ்மக்களுக்கு இதில் பெரும் பங்குண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

நாகலிங்கம் மதியழகன்
mathiyalakan1@hotmail.com

நன்றி பாசெல் தமிழ்