திருக்கோணமலை மாவட்டத்தில் கொட்டியாபுரம் என்றழைக்கப்படும் மூதூர் கிழக்கு சம்பூர்ப் பகுதியின்(2006) இடப்பெயர்வானது இலங்கை தமிழ் மக்களின் இடப்பெயர்வின் வரலாற்று அத்தியாயமென குறிப்பிடலாம்.
தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு (2009 இல்) ஏற்பட்ட பின்னடைவின் ஒரு திருப்புமுனையாக இந்த மாவிலாறின் தண்ணீர்ப் பிரச்சனையானது மூதூர்கிழக்கின் இடப்பெயர்விற்கு கட்டியம் கூறி நிற்கிறது.

அரசானது மூதூர்-சம்பூர் பகுதியில் பெருவாரியாக நிலை கொண்டிருந்த விடுதலைப்புலிகளை அங்கிருந்து அகற்றுவதும் மீண்டும் நிலைகொள்ளாமல் தடுப்பதற்காகவும் இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிற திட்டம்தான் இந்த அனல்மின்நிலைய ஸ்தாபிப்பாகும்.

மக்களின் சுபீட்சத்தை கருத்திற்கொண்டு அனல்மின்நிலையம் அமைக்கப்படுமாயின் மக்களை இடம்பெயர வைப்பது அர்த்தமற்றதாகும். இடம்பெயரும் மக்களுக்கு பதிலீடாக பிறிதொரு இடத்தில் குடியிருப்பு காணிகளை வழங்க இருக்கும் அரசு அவற்றை விடுத்து சம்பூர்ப்பகுதியை சூழவுள்ள காடுகள் கொண்ட தரிசு நிலங்களில் அனல்மின்நிலையத்தை அமைத்தல் சிறந்தது. அதனால் அந்த இடமும் அபிவிருத்தி அடைய இடமுண்டு. இதனால் சர்ச்சைகள் வரவும் இடமில்லை.

மக்களும் தமது பாரம்பரிய நிலத்தை விட்டு அகலவேண்டிய தேவையும் இருக்காது. அனல் மின்நிலையத்துக்காக ஒதுக்கப்படவிருக்கும் காணியானது, பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாகும். ஏனெனில் சம்பூர்ப்பகுதியின் கேந்திரநிலையமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுதி இந்த வலயத்துக்குள் அடங்குகிறது.

சம்பூர்ப்பகுதியின் மேற்குப்புறம் தொடங்கி வடக்குப்புறம் வரை கடற்கரையை எல்லையாகவும், கிழக்குப்புறம் நையந்தைக்குள வீதிவரை எல்லையாகவும், தெற்குப்புறம் நாவலடிச்சந்தி வரை எல்லையாகவும் கொண்ட மக்கள் குடியிருப்புப் பிரதேசத்தை (ஏறத்தாள 500௦௦ ஏக்கருக்கும் அதிகமாக) பாதுகாப்பு வலயமாக உள்வாங்கப்படின் மக்களின் குடியிருப்பு நிலை பற்றி அரசு சிந்திக்காமலிருப்பது தமிழ் மக்கள் மேல் சுமத்தப்படும் ஒரு தருமமற்ற நடவடிக்கையாக கருதப்பட இடமுண்டு. சம்பூர்ப்பிரதேச மக்களின் அன்றாட தொழில் வளம் இதனால் அடிபட்டுப்போக வாய்ப்புகள் அதிகம்.

அதோடு தமிழ் மக்களின் புரான இருப்புக்களை கூறும் காளிகோயில், மற்றும் கூனித்தீவு கிராமம், தோணிக்கல் பகுதி, சந்தணக்கல் பகுதி, கெவுளிமுனை போன்ற பல இடங்கள் தமிழ் மக்களின் வரலாற்றுப்பதிவுகளை கொண்டிருப்பது மறைக்க முடியாத உண்மை. ஆகவே தமிழ் மக்களை இந்த நாட்டில் சம பிரஜைகளாக இந்த அரசு ஏற்றுக்கொள்கிறதா என்பதற்கு இந்த சம்பூர் அனல்மின்நிலைய சர்ச்சை ஒரு உரைகல்லாக அமையலாம். சொந்த பூமியிலேயே சொந்த நாட்டு மக்கள் சொந்த நில அபகரிப்பின் மத்தியில் குடியிருக்க நிலம் கேட்டு கையேந்தி நிற்கும் அவலம் உலகின் வேறெந்த நாட்டிலும் இருப்பதாக அறிய முடியவில்லை. இதனையொட்டி

ஒரு இதிகாச சம்பவமொன்று நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியதுள்ளது. மகாபாரதத்திலே பஞ்சபாண்டவர்கள் தமக்கான வீடுகளை இரந்துகேட்ட சம்பவத்திற்கும் தற்போதையகாலத்தில் சம்பூர் மக்கள் தமது குடியிருத்தலுக்கான கோரிக்கைக்கும் தொடர்புண்டு. இதுவே நவீன பாண்டவர்களாக சம்பூர் மக்களின் வரலாற்று இலங்கைத்தேசத்தின் வரலாற்று அத்தியாயத்தில் உப தலைப்பாக அமையுமென்பதில் ஐயமில்லை.

குடியேற்றல், குடியகற்றல் சம்பந்தமாக அரசால் வெளியிடப்பட்ட ‘சுயவிருப்பமற்ற மீள் குடியேற்றல்’ என்ற சுற்று நிருபத்தினடிப்படையில் இலங்கை அரசு பிற தலையீடின்றி அமுல்ப்படுத்தியாக வேண்டும். அந்த அளவிற்கு அரசு தமிழ் மக்களை பொறுத்தவரையில் தர்மமாக நடந்து கொள்ளுமா?

தென்னிலங்கையிலே விமான நிலையமொன்று அமைப்பதற்காக ஜனாதிபதியால் எடுத்துக்கொண்ட முயற்சி மக்களின் எதிர்ப்பால் கை விடப்பட்டதென்பதை மீள் நினைவுக்குட்படுத்தல் அவசியம். இன்னமும் காலம் போகவில்லை. சம்பூர்த் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம் தொலைதல் பற்றி பேதங்களுக்கும் பிரிவினைகளுக்கும் அப்பால் புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் அடங்கலாக அனைவரும் பொங்கி எழுதல் காலத்தின் கட்டாய தேவையாகிறது.

சுவிசிலிருந்து
தசக்கிரீவன்