பகைவனே என்னை எம்மண்ணில் புதைத்தாய். எம் மண்ணை எங்கே புதைப்பாய்? போராட்டக் கவிஞன் காசிஆனந்தனின் ஆழமான இக் கவிவரிகள், விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்கள், கல்லறைகளிலிருந்து பாடுவதுபோலுள்ளது. எம் மைந்தர்கள் விதைக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட வேண்டும். ஏனெனில் ஒடுக்கு முறைகளிலிருந்து விடுதலை பெறவே மக்கள் போராடுகின்றார்கள். அடிமையாக வாழத் தெரிந்தவர்களுக்கும், அவ்வாறு வாழ்வதே சரியென அடம்பிடிப்பவர்களுக்கும் கவிபாடத் தேவையில்லை.

பொற்கிழி பெற்று, கவியாற்றும் தரகுக்கவிகளே அவர்களுக்குப் போதும்.

இப் போராட்டக் கவிஞர்களுக்கு மாவீரர் எதைக் கொடுத்தார்கள்?

அவர்கள் கையளித்தது போராடும் உணர்வை மட்டுமே.

அந்த விடுதலை என்கிற இலட்சிய தீபத்தினை அணைக்காமல் பாதுகாப்பதே, இன்னமும் ஒடுக்கப்படும் மக்களின் கடமை.

கடமை என்பதைவிட அதனை நியதி என்றே கூறலாம்.

அந்த மாமனிதர்களின் கல்லறைகளைச் சுவடு தெரியாமல் பேரினவாதம் அழித்தாலும், மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள மாவீரர்கள் குறித்தான அழியாத நினைவுகளை என்ன செய்ய முடியும்?

மக்களை பிளவுபடுத்தி எண்ணங்களை அழிக்கலாமென தப்புக் கணக்குப் போடுகிறது சிங்களம். சர்வதேசம் முன்வைக்கும் இன அழிப்பு குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிச் செல்ல, சனல்-4 தொலைக்காட்சி பொய் கூறுகிறதென வாதம் செய்வதோடு, புலம்பெயர்ந்த நாடுகளில் இதற்கான பரப்புரைகளை முன்னெடுக்கும் மக்கள் அமைப்புக்களிடையே, தனிநபர் முரண்பாடுகளை ஊக்குவிக்கும் நாச வேலைகளிலும் ஈடுபடுகிறது.

சிறிய முரண்பாடுகளை, கொம்புசீவிப் பூதாகரமாக்கும் பணிகளில் பலர் இணைவதோடு, பொது எதிரி யார் என்பதை மக்கள் மறந்து போகக் கூடிய அளவிற்கு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உணர்வுபூர்வமாக நினைவு கூரப்படும் மாவீரர்தின நிகழ்வுகள், இதற்கான களமாக மாற்றப்பட்டு விட்டதோ என்கிற கேள்வி எழுகிறது.

மக்களுக்கு நிதர்சனமான வெளிச்சத்தைக் காட்டப் போகிறோமென புறப்பட்டுள்ள காணொளி ஊடகங்களும், முரண்பாடுகளை ஊக்குவிக்கும் தளமாக மாறிவிட்டதோ என்கிற சந்தேகம் நியாயமானதாக இருக்கிறது.

நீண்ட போராட்ட வரலாற்றில், ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்கள், வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் தமது இன்னுயிரை இழந்துள்ளார்கள்.

அவர்கள் உயிர் துறந்த மண்ணில், மாவீரரை நினைவு கூர முடியாததொரு துர்ப்பாக்கியமான சூழல் நிலவுகிறது.

விதையாகிப்போன மாவீரர்களின், பொதுமக்களின் உறவினர்கள், மனதிற்குள் அழுதவாறு பெரும் வலியோடு வாழ்வதைப் புரிந்து கொள்ள வேண்டும். நினைவு தினத்தை உரிமை கொண்டாடும் உரித்துடையவர்கள் மக்கள்தான்.

ஒரு இடத்தில்தான் இந்த நிகழ்வினை நிகழ்த்த வேண்டுமென்கிற எந்த நியதியும் கிடையாது.

மக்களின் வசதிகருதி பல இடங்களில் நடாத்தினாலும், ஒன்றுபட்டு ஓரணியாக நின்று அந்நிகழ்வினைச் செய்வதையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

லண்டனில் மட்டுமல்லாது, ஏனைய பல புலம்பெயர்ந்த நாடுகளிலும் இந்தப் பிளவுகளும், பிரிவுகளும் ஏற்பட்டுள்ளன. தனி நபர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், மின்னஞ்சல் ஊடாக வசைபாடல் போன்றவை, நடைபெறுவது மாவீரர் தினமா அல்லது தேர்தல் ஒன்றிற்கான போட்டியா என்று பிரித்தறிய முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

எங்கு செல்வது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்களின் சிந்தனையை பொது எதிரிக்கு எதிராக ஒன்று குவிப்பதே, உண்மையான  ஊடகம் என்று சொல்லப்படும் ஊடக நிறுவனங்களின் கடமை.

இங்கு எல்லாவற்றையும் சுதந்திரமாக பேசுகிறீர்கள். ஜனநாயக நாடுகளில் வாழும் நாம், அதன் பண்புகள் கெட்டுப் போகாதவாறு வன்முறை தவிர்த்து கருத்துக் களமொன்றினைத் திறக்கலாமே?
மாவீரர் தினத்தை யார் நடத்துவது என்கிற மோதலில் ஈடுபடுகிறீர்கள்.

ஆனால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தாயகத்தில் தற்போது வாழும் ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு இது போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லை.

யார் நடாத்துவது என்கிற சச்சரவுகளும் இல்லை.

துணிந்து சென்று நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சி அளித்தவர்களை சிங்களப் புலனாய்வுப் பிரிவு மீண்டும் துரத்துகிறது.

அவ்வாறான அசாதரண சூழலில் அச்சத்தோடு மக்கள் வாழ்கிறார்கள்.

எந்த மண்ணில் அம் மாவீரர்களும், மக்களும் வீழ்த்தப்பட்டார்களோ, அந்த மண்ணில் அவர்களை நினைவுகூர முடியவில்லை.

மாவீரர் குடும்பங்களுக்கு மதிப்பளிக்க அங்கு எவருமில்லை என்பதைவிட, அது நடக்கக்கூடிய சூழலும் அங்கு இல்லை .

உறுதிக் காணிகளைச் சுவீகரிப்பதிலிருந்து, அரச காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பது வரை, எல்லாவற்றையும் மிக வெளிப்படையாகவே செய்கிறது சிங்களம்.

புதை குழிகள் மட்டுமல்ல, நீ குடியிருக்கும் நிலமும் உனக்குச் சொந்தமில்லையென தமிழினத்தைப் பார்த்துச் சொல்கிறது பௌத்த சிங்களப் பேரினவாதம்.

ஆகவே எம்மிடையே முரண்நிலைகளை தோற்றுவிக்கும் சக்திகளை அந்நியப்படுத்தி தாயக மக்களின் விடிவிற்காகப் போராடுவதே சரியானது.

ஒரு இடத்திலல்ல…

ஆயிரம் இடங்களில் நடத்துங்கள்… ஒற்றுமையாக.

 – இதயச்சந்திரன்
ithayachandran@hotmail.co.uk