இலங்கை அரசினால் பல தடவைகள் ‘குட்டு’ வாங்கி குனிந்து கிடக்கும் ஆசிய ‘போலிஸ் காரனாகிய’    இந்தியா, வெகு அண்மையில் புரிந்துகொண்ட சம்பவங்களில் பிரதானமானது, வடகிழக்கை இலங்கை அரசு துண்டாடியது ஆகும்.
 
இதற்கு முன்னதாக(1987) இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்காக வருகை தந்திருந்த இந்திய பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியை, அணிவகுப்பின் போது ஒரு சாதாரண இலங்கைச் சிப்பாய் தாக்கியதும் அதுபற்றிய உணர்வலைகளை இந்தியா பெரிது படுத்தி கொள்ளாமல் இருந்ததும், அதே சிப்பாய் இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிட்டதும் ஒருகணம் இந்தியாவின் நிலையை மீட்டிப்பார்க்க வேண்டிய சம்பவங்களாகும்.
 
அது ஒருபுறம்  கிடக்க,
இந்தியாவானது இலங்கையின் வடகிழக்கு இணைப்பை அழுத்தம் திருத்தமாக கூறியிருந்த போதிலும் இலங்கை அரசின் பிரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த முடியாமல் போயிற்று.
 
கடந்தகாலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பாய்ச்சலோ இலங்கை i அரசின் அதிகார ‘பிரிப்பை’ யும் மீறி செயற்பட்டுக் கொண்டிருந்ததையும், அதனை வடகிழக்கு சார்ந்த இருபகுதி  தமிழ்மக்களும் ஏகோபித்து ஏற்றுக்கொண்டதையும் மறக்க முடியாது.
 
நிர்வாக ரீதியாக வடகிழக்கு பிரிக்கப்பட்டதன் பின் கிழக்கிற்கான மாகாணசபைத்  தேர்தலில் ‘பிள்ளையான்’ முதலமைச்சராகி தனிமாகான நிர்வாக அலகாக கிழக்கு இயங்க ஆரம்பித்தது. இந்த நிர்வாக அமைப்பினூடாக கிழக்கு மாகாண மக்களுக்கான தனியலகுக்கான தேவைகள் யாவும் பூரணப்படுத்தப்படும் என அரசு கூறிய வார்த்தைகளை நம்பி பிள்ளையான் குழு ‘பாபாசியில்’ ஏறி வழுக்கி வீழ்ந்த நிலையில் ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையோடு மாகாண சபையை இன்றுவரை ஓட்டிக்கொண்டு இருப்பது அறிந்த விடயமாகும்.
 
அரசின் ஏமாற்று வித்தைகளை உள்ளிருந்தே புரிந்துகொண்ட ‘பிள்ளையான்’ இப்பொழுது சற்று விலகி ஜனாதிபதி மகிந்தாவை ஆதரித்தும் – ஆதரிக்காமலும் ‘ஓடும் புளியம் பழமுமான’ ஒரு நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருப்பது நன்கு புலப்படுகிறது. இதுவானது, எதிர்காலத்தில் கருணா போன்று ‘நடு ஆற்றில்’ நிற்கக்கூடாத நிலைக்கான ஆரம்பப் படிக்கட்டாக கொள்ளலாம்.
 
வடகிழக்கின் நிலப்பரப்பை வெறும் பெயரளவில் தான் துண்டாடிப்பிரிக்க இலங்கை அரசாலும், நீதிமன்றத்தாலும் முடிந்ததே தவிர  இன்றுவரை வடகிழக்கு தமிழ்மக்கள் இதனை மனதார ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கும், எதோ ஒரு விதத்தில் தமிழ்மக்களின் அரசியல் தலைமைகளைக் கொண்ட கட்சிகள் தமக்கிடையே மோதிக் கொண்டாலும் தமிழ்மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முனைப்பில்  இருந்து இம்மியளவும் வழுகவில்லை என்பதற்கு சான்றாக, தமிழ்மக்களின் விருப்பை நாடிபிடித்து அறிந்த வகையில், அண்மையில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வை மீட்டுவது பொருத்தம்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இரா. சம்பந்தன் அவர்களால்(திருக்கோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) வெளியிட்டு வைத்ததும், அடுத்த கட்சியான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருக்கோணமலையில் கஜேந்த்ந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால்(யாழ்ப்பாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) வெளியிட்டு வைத்ததும் ஒரு சாதகமான நிலையைக் காட்டுகிறது.
 
இந்த நிலையானது, வடகிழக்கு மக்களின் ஒற்றுமை நிலை சார்பாக இலங்கை அரசுக்கு விழுந்த  பேரிடிச் செய்தியாகும்.
 
கட்சிகளில் பேதமிருந்தாலும், கொள்கைகளில் பேதமில்லை.
 
இந்த பேரிடியின் இரைச்சலை இந்தியாவும் தன கவனத்தில் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
 
தசக்கிரீவன்