தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிராந்திய வல்லரசினதும் மேற்கு சார்ந்த நாடுகளின் ஆதரவுத் தளத்தை தமக்கான பேரம்பேசுவதற்கான வலுவாகக் கொண்டும் பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றை எட்டலாம் என்ற முனைப்புடன் தனது அரசியல் நகர்வுகளைச் செய்துகொண்டிருக்கின்றது. பின்புலமாக இருக்கும் சர்வதேச சக்திகளும் அதற்கான அங்கீகாரத்தை வெளிப்படையாகவும் சிறிலங்கா அரசிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் வெளிக்காட்டுகின்றன. கூட்டமைப்பும் சில விடயங்களில் மென்போக்கை கடைப்பிடித்துக் கொண்டு செல்லும் அதேவேளை, இத்தகைய தனது அரசியல் நகர்வை தற்காலத்திற்கான சாணக்கிய அரசியல் நகர்வு என்று சொல்லி செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

மறுபுறம், தமிழ்மக்களின் உரிமைகள் தொடர்பாக அக்கறை உள்ளது போல காட்டிக் கொள்ளும் சிறிலங்கா அரசானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தும் அதேவேளை தமிழர் தாயகத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் நடவடிக்கைகளையும் இணைத்தே செய்துவருகின்றது. இப்படியாகத்தான் சிறிலங்கா அரசு காலங்காலமாக தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது.. ஆனால் பேச்சுவார்த்தை மூலம் எதுவித தீர்வையும் அடையாமல் போவதற்கு நாட்டின் அமைவிட முக்கியத்துவத்தை துரும்புச்சீட்டாக்கி, தீர்விற்கு அழுத்தம் கொடுக்கும் நாடுகளை சாதுரியமாகக் கையாண்டு, தனது இலக்கை நோக்கி செல்கின்றது.

இலங்கை தொடர்பான விடயத்தில் இந்தியாவின் இராசதந்திரம் பின்னடைவை சந்தித்த நிலையில், அது தனது அண்மைய கூட்டாளியான அமெரிக்காவுடன் இணைந்து சர்வதேச அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஒரு நகர்வாக கூட்டமைப்பை அமெரிக்காவிற்கு அழைத்து பேச்சில் ஈடுபடுத்துகின்றது. வல்லாதிக்கப்போட்டியின் ஒரு கருவிப்பொருளாக  ஈழத்தமிழ்களின் பிரச்சனை வல்லரசுகளின் கரங்களிலே சிக்கிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் தீர்மானிப்பதுதான் தமிழ்மக்களின் அரசியல் தீர்வின் எல்லை என வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் கருதலாம். எனவே தற்போதைய அரசியல் நகர்வு விடயத்தில் கூட்டமைப்பு சிங்கள அரசாங்கத்துடன் பேசலாம் அல்லது புறக்கணிக்கலாம், சிலவேளை தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை முழுமையாக கொண்டிராத தீர்வுத் திட்டத்தைக்கூட ஏற்றுக்கொள்ளலாம் அல்லது தீர்வு கிட்டாமல் போகலாம். இதில் எதுவும் எதிர்பார்க்க கூடியது.

மறுபக்கம் இராணுவ வெற்றிக்களிப்பில் எல்லாத் தேர்தல்களிலும் சிங்களத்தின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ச, தனதும் தனது குடும்பத்தினதும் நீண்டகால சிறிலங்காவின் தலைமைத்துவக்கனவை இலக்கு வைத்தே எல்லா நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றார். சிறிலங்கா அரசின் தலைவராகத் தொடர்வதற்கு, அவருக்கு சிங்களப்பேரினவாத வாக்குகளே போதுமானவை. இதை கருத்திற் கொண்டுதான் அதிகளவான பொருளாதார மேம்பாட்டை சிங்கள மக்களிற்குச் செய்வதுடன் ஜ.தே.கட்சியின் வாக்குகளை உடைத்துவிட்டால் தமிழர்களின் வாக்குகள் அவசியமற்றவை என்ற மேம்போக்கோடு செயற்பட்டு வருகின்றார்.

இதற்காகவே வடக்கு கிழக்கு புனரமைப்பு கிடைக்கும் நிதிகளைக் கொண்டு சிங்களக்குடியேற்றங்கள் நிறுவப்படுகின்றன. அதே நேரத்தில் அப்பிரதேச்த்தில் சிங்கள விகிதாசாரத்தை உயர்த்துவதற்காக சிங்களப் பிரதேச செயலர் பிரிவுகளின் எல்லைகளும் மாற்றப்படுகின்றது. இது வறள் வலைய அபிவிருத்தி என்ற பெயரில் ஜம்பதுகளில் தொடங்கியது. தற்போது யுத்தத்தின் பின்னரான புனர்நிர்மாணம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகின்றது. இது ராஜபக்சாவின் அணுகுமுறையல்ல சிங்கள அரசியத்தலைமைகளின் பொதுவான அணுகுமுறையே இதுதான்.

எனவே சிங்களப் பேரினவாத அடித்தளத்தில் நின்று அரசியல் நடாத்தும் மகிந்த ராஜபக்ச தமிழ்மக்களுக்குக் குறைந்தது மாநில சுயாட்சியையோ அன்றி சமஸ்டி ஆட்சி உரிமையையோ தருவார் என்றுகூட எவ்வாறு எதிர்பாக்கமுடியும். ஆனால் கூட்டமைப்பு  தமிழ்மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் விட்டுக்கொடுப்பைச் செய்து, சிங்களத்துடன் ஒரு மென்போக்கை கொண்ட (வெளிப்படையாக சிங்களத்தை எதிர்த்துக் கொண்டு), ஒத்துப் போகும் அணுகுமுறையை கையாண்டு தீர்வு ஒன்றை அடைய முற்படுகின்றது.(ராஜபக்சவை மனித உரிமை விடயத்தில் கண்டுகொள்ளாமல் விட்டாலும் மின்சாரக்கதிரை எற்றுவதற்கான முயற்சிகளை செய்யாமல் விட்டாலும் அவை அதிசயமல்ல). தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரை, ராஜபக்ச அவர்கள் தான் ஆட்சிபீடத்தில் தொடர்ந்து இருப்பார் எனவே அவரை எதிர்ப்பதைவிட சுமூகமாக செயற்பட்டு தீர்வை அடையலாம் என கருதுகின்றதோ! என்ற சந்தேகம் எழும்புகின்றது. அப்படி என்னதான் ராஜபக்ச தந்துவிடுவார்? அது தமிழ்மக்களின் அரசியல் விடுதலையாக இருக்குமா? என்றால் நிச்சயம் இருக்காது. சர்வதேசத்தின் அழுத்தத்தினால் கூட்டமைப்புடன் நடாத்தப்படும் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் அடங்கலான தீர்வு கிடைக்கும் என கருதமுடியாது. அப்படி நினைத்தால் அது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கியது போலாகும்.

இவ்வாறாக கூட்டமைப்பு மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குவதை விடுத்து தற்போது செய்யவேண்டியவை; தமிழ்மக்களின் தேசியம்-தாயகம்-சுயநிர்ணய உரிமையை விட்டுக் கொடுக்காத கொள்கையைக் கடைப்பிடிப்பதுடன் தமிழ்த்தேசியம் என்ற தளத்தில் தமிழ்மக்களை ஒன்றிணைத்து வைத்திருத்தல்; தாயகக் கோட்பாட்டை சிதைக்கும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தல்; வெகுஜனப் போராட்டங்களை நடாத்துதல்; மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உரிமைகள், உடமைகளின் சாட்சியங்களாய் அதை சர்வதேச அளவில் பன்முகப்படுத்தல்; சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தல்; தமக்குக் கிடைக்கும் அரசியல் செயற்பாட்டு எல்லைக்குள் அல்லது உருவாக்கக்கூடிய இடைவெளிக்குள் நின்று தமிழ் பேசும் சமூகங்களிற்குத் தம்மால் இயன்றவற்றை நடைமுறைப்படுத்தல்; ஆகியவையே அவர்களுக்கான அரசியல் நகர்வாக இருக்க முடியும். தமிழ் பேசும் மக்களிடையே இணக்கத்தை உருவாக்கி,  தமிழ்மக்களின் அரசியல் பொருளாதார தாயகக் கோட்பாட்டை தக்கவைத்துப் பாதுகாக்கும் செயற்பாட்டை கூட்டமைப்பு செயற்படுத்துவதே அவர்களின் இன்றைய பணியாக இருக்கமுடியும்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வெளிப்படையான பேச்சுக்களில் மட்டும் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றைக் கூறிக்கொண்டு சிறிலங்காவினது பேச்சுவார்த்தையில் அவற்றைக் கைவிடுமாயின் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை மட்டுமல்ல தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் குழிதோண்டிப்புதைப்பதற்கான நடவடிக்கையாகவே அமையும். கூட்டமைப்பின் அரசியல் நகர்வை மக்களும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் ஏனேனில் கூட்டமைப்பை பிரதிநிதிகளாக்கிய தமிழ்மக்களின் தார்மீகக் கடமையது. அதேவேளை கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல்த்தீர்வு விடயத்தில் மக்களுடன் வெளிப்படைத்தன்மையை பேணவேண்டும். தமிழ்மக்களின் உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு அதற்கு வேறுகாரணங்களைத் தேடி  தலையில் கட்டிவிடும் முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்னொரு புறத்தில், வல்லாதிக்க சக்திகளின் போட்டி அரசியல் நகர்விற்கு ஈழத்தமிழர்களின் விவகாரம் தேவையென்பதால் செங்கம்பள வரவேற்புக் கொடுக்கின்றார்கள். தேவையில்லாவிட்டால் தூக்கியெறிந்துவிடுவார்கள். இப்படியான அரசியல் பின்புலப் பலத்தில் நடைபெறும் நகர்வுகள் வெறும் மாயை. நாம் எமது பலத்தில் நின்று எமக்கான அரசியத் தளத்தை உருவாக்க வேண்டும். அதுதான் ஈழத்தமிழ்மக்களிற்கான அரசியல் அச்சாணியாக இருக்கமுடியும்.

ஒருவேளை, ’தமிழ்மக்கள் இதுவரைபட்ட கஷ்டங்கள் போதும். அவர்களிற்கு உலகம் தருகின்ற தீர்வையாவது பெற்றுக் கொடுப்போம்’ என்ற ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முடிவெடுப்பதாக இருந்தாலும், இவ்வாறு பெற்றுக் கொடுக்கப்படும் ’சலுகைகள்’ தமிழ்மக்களின் கடந்தகால இழப்புக்களை ஈடுசெய்யாது என்பதுமட்டுமல்ல எதிர்கால இருப்பையும் உறுதிசெய்யாது.

எனவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அரசியலை நகர்வுகளை ஒரேயொரு நம்பிக்கை தளமாகப்பார்க்காமல், ஈழத்தமிழ்மக்களின் அரசியல் போராட்டத்தின்  இலக்கை நோக்கிய நகர்வை, அதற்கான வேலைத்திட்டங்களை திடமான நம்பிக்கையுடன் பலதரப்பட்ட வழிகளினூடாக முன்னெடுக்க வேண்டும். அதற்குப் பொருத்தமான வழியினை ஈழத்தமிழினம் கண்டறிந்து, மாவீராகளின் கனவுகளையும் மனதில் நிறுத்தி இலக்கு நோக்கி நகரவேண்டும். பலமுனைகளாக ஒரு இலக்கை நோக்கிச் செல்லும் அம்புகளாக, கொள்கைவழுவாது செயற்படுவது தான் தற்போதைக்கு மிகவும் அவசியமானதும் எதிர்பார்ப்பிற்குமுரிய பிரதான விடயமாகும்.

அபிஷேகா (abishaka@gmail.com)