கால் நூற்றாண்டு காலமாக சுவிஸ் பாசெல் மாநிலத்தில் தொண்டாற்றிவந்த பிறைபிளட்ஸ்   அக்சியோனுக்கு(Freiplatzaktion)   பாசெல் மாநில அரசுப்பேரவையால்  அதன் தலைவர் கலாநிதி Guy Morin  அவர்களால் அந்நிறுவன ஆலோசனைமையத்தின் தலைவி Barbara Frei உட்பட தொண்டுப் பணியாளர்கள் 7 பேர் அடங்கிய(Stephan Herzog , சிவோமியா  சந்திரசேனன், முரளிநடேசன் தியாகராசா, Mariane  Rufer, ஆ. இந்திரன், சுமதி தர்மகுலசிங்கம்) குழுவினருக்கு அரசின் அதியுயர் விருதான “Schappo”(ஷப்போ) விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

‘தணல்’ இணைய ஆசிரியருக்கும் விருது-தணல் இணையதளம் வாழ்த்துகிறது 

விருது பெறும் 7 பேரினுள் முரளிநடேசன் தியாகராசா ‘தணல்’ இணைய தளத்தின் இணை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறைப்பிளட்ஸ் அக்சியோன் நிறுவனத்துடன் இவர் இணைந்து ஆற்றிய பணி ஏறத்தாள 14 வருடங்களிற்கும் மேலாகும். இவருக்கு கிடைத்திருக்கும் இந்த விருதின் மகிழ்ச்சியில் ‘தணல்’ இணைய குழுமமும் இணைந்து கொள்கிறது. 

இந்நிகழ்வு 27.10.2011  அன்று பாசெல்-பார்புஸ்ஸ பிளட்ஸ்(Barfüsserplatz) இல் அமைந்துள்ள தொல்பொருள் கலையக கேட்போர் கூடத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட சுவிஸ், தமிழ்மக்கள் இணைந்து கலந்துகொண்ட இந்த விழாவில்  தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் மிருதங்கம் ஆரம்ப நிகழ்வாக ஒலித்தது. அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது.  பின்னர் பாசெல் மாநில அரசவைத் தலைவரால் விருதுகள் வழங்கப்பட்டது. இறுதியாக தமிழ் மாணவியின் பரத நாட்டியம் நடைபெற்றது. 

இந்த உயர் விருதின் நோக்கமானது, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பன்முகப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு இலாப நோக்கமற்று தொண்டடிப்படையில் வலிந்து உதவிசெய்யும் நிறுவனத்திற்கு மதிப்பளிப்பதாகும்.

சுவிஸ் நாட்டில் சுவிஸ் மக்களால் இயக்கப்படும் குறித்த நிறுவனமான பிரைப்பிளட்ஸ் அக்சியோன்(Freiplatzaktion) தனியவே ஈழத்தமிழர்களின் நலன்களை நோக்காகக் கொண்டு கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தணல் குழுமம்

Schappo Veleihung