சுவிஸ்-பாசெல் மாநிலத்தில் 9 இலங்கைத் தமிழர் அமைப்புகளினால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல் நிகழ்வொன்று நேற்று மாலை 7 மணியளவில் பாசெல் தமிழர் அமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

சுவிஸ் மத்திய  அரசின் தேசிய சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பச்சைக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சிபெல் ஆர்சலான் அவர்களும், சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் முஸ்தபா அதிச்சி அவர்களும் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

இச் சந்திப்பின்போது  சுவிசில் இலங்கைத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு மற்றும் சுவிசில் இலங்கைத்தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக, சட்ட, வேலைவாய்ப்பு மற்றும் கல்விப் பிரச்சனைகள் உட்பட தற்போது இலங்கையில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளின் தாக்கம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கலந்துரையாடலின் இறுதியில் வேட்பாளர் சிபெல் ஆர்சலான் தொகுத்துக் கூறுகையில்

“தமிழர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள், பிரிவுகள் நிறுவனமயப்படுத்தப்பட்டு செயற்பட்டாலும் இலங்கைத்தமிழர்களின் முக்கிய பொதுப்பிரச்சனையாக ‘இனப்பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வு’ விடயமாக மட்டுமே தற்பொழுது சிந்திக்க வேண்டிய நிலையில் அனைத்துலக தமிழர்களும் இருக்கவேண்டும். நிரந்தரத் தீர்வின் பின்னராக அமைப்புகளுக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது சாத்தியமாகும். ஆனால் தற்போதைய நிலையில் தமிழர் மத்தியில் தீர்வுக்கு முன்னராகவே முரண்பாடுகள் தோன்றுவது பெரும் பின்னடைவைத் தோற்றுவிக்கும்” என்றார்.

வேட்பாளர் முஸ்தபா தனது தொகுப்புரையில்

“சுவிசில் ஐயாயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட இனக்குழுமங்களுக்கு சுவிசின் மத்திய அரச மட்டத்தில் பலமான குழுக்களையும் அரசியல் அந்தஸ்த்தையும் ஏற்படுத்தி இருக்கையில், சுவிசில் இலங்கைத்தமிழர்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக வாழுகையில்,  சுவிஸ் அரசாங்க மட்டத்தில் ஏதேனும் ஒரு பலமான குழுவை இதுவரையில் ஏற்படுத்தவில்லை என்பதை இன்றுவரை தமிழ்மக்கள் உணராமல் இருப்பது வருத்தத்துக்குரியது. மேலும் காலத்தை தாமதிக்காது இதற்கான செயற்பாட்டில் இறங்கி  தமிழ்மக்களின் பிரச்சனைகளை தமிழ் பிரதிநிதிகளுக்கூடாகவே சுவிஸ் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க வைக்கவேண்டும். இதன் மூலம் தான் அப்பிரச்சனைகள் உயிரோட்டமாக, யதார்த்தமாக அமையும்” என்றார்.

இறுதியாக சுவிஸ் தேசிய அவைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது.

சுவிஸ் தேசிய அவைக்கான தேர்தல் – பாசெல் மாநிலம் 

தேர்தல் நடைபெறும் திகதி – 23.10.2011

வாக்களிக்கும் நிலையங்கள் – பாசெல் பாராளுமன்றம்(Rathhaus), பாசெல் தொடரூந்து நிலையம்(Bahnhof), கிளாரா பொலிஸ் நிலையம்(Polizeiwache Clara)

வாக்குச்சாவடி திறந்திருக்கும் நேரம் – சனிக்கிழமை(22.10.2011)  பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணிவரை. ஞாயிற்றுக்கிழமை – காலை 9 மணியிலிருந்து 12  மணிவரை.

தேர்வுசெய்யப்படும் அங்கத்தவர்கள் – 5

போட்டியிடும் கட்சிகள், சுயேட்சைகள் – 27

போட்டியிடும் வேட்பாளர்கள் – 114

வாக்குரிமை பெற்ற மொத்த வாக்காளர் – அண்ணளவாக 115,362

வாக்களிக்கும் முறை

பாசெல் மாநிலத்தில் இருந்து சுவிஸ் தேசிய சபைக்கு 5 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதால், ஒரு வாக்காளர் 5 வாக்குகளை வழங்குவதற்கு உரித்துடையவர் ஆவார்கள். வாக்காளர் ஒருவர் வேட்பாளர் ஒருவருக்கு அதிகூடிய அளவு 2 வாக்குகளை வழங்க முடியும். உதாரணமாக, கீழே காட்டப்பட்டுள்ளது போன்று இலகுவாக வாக்களிக்க முடியும்.

உதாரணத்திற்கு இங்கே சொடுக்கவும்

Nationalrat Wahl