தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் பிரசாரங்களின் போதும், கொள்கைப் பிரகடனங்களின் போதும் இலங்கை தமிழ்மக்களின் நலன்களிற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பின்னராக அவற்றில் எத்தனை நடைமுறைப் படுத்தப்பட்டது? எத்தனை செயல்வடிவின் நிகழ்தகவில் உள்ளது? எத்தனை முயன்றும் முடியாமல் போனது? எத்தனை தேர்தல் பிரசாரத்தோடு  கிடப்பில் கிடக்கிறது? இவற்றிற்கான பின்னூட்டல்(Feedback) அறிக்கையை ஒரு தமிழ்த்தேசிய நலன்கருதிய ஒரு ஜனநாயக அமைப்பு வெளியிடல் வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் ‘கொள்கைப் பிரகடனத்திற்கு'(Manifesto) பின்னரான எந்த ஒரு பின்னூட்டல் அறிக்கையோ, குறிக்கோள்களின் அடைவோ(Achievement) இதுவரை பொதுமக்களின் பார்வைக்கு அறிக்கையாக வெளியிடப்படவில்லை.

வெளிப்படைத் தன்மையோடு செயலாற்றுகின்ற நிறுவனமயப்படுத்தப்பட்ட அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்புக்கு இது மிக அவசியமானது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ‘கொள்கைப் பிரகடனத்திற்கு’ இலங்கைத் தமிழ்மக்கள் உட்பட அனைத்துலக தமிழ்மக்களும், ஈழத்தமிழ் மக்களின் நலன் விரும்பிகளும் ஆணையும், ஆதரவும் தேர்தல் வெற்றியின் மூலம்(Mandate) வழங்கியிருந்தார்கள். ஆனால் இதற்கான ‘முடிவு சொல்லல்’ என்பதிலிருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தவறியுள்ளது. இத்தவறு திருத்தப்படலின் போதுதான் தமிழ்மக்களின் நலன் சார்ந்த அமைப்பாக மாறும். இல்லையெனில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை கிடைத்த வெற்றிகள் யாவும் நிரந்தரமற்றவையும் ஆகும்.

ஒழுங்கமைக்கப்பட்ட, கொள்கையில் உறுதிமிக்க, வெளிப்படைத்தன்மை கொண்ட ஈழத்தமிழ்மக்களின் தேசிய நலன் கொண்ட ஒரு கட்சி இதுவரைக்கும் தோன்றவில்லை என்ற கருத்தில் தமிழ்மக்கள் காத்திருப்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உணர்தல் அவசியம். குறிப்பாக அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற தமிழர்களின் அவலம் சார்ந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடாத்தியதென்பது ஒரு வரலாற்று நகர்வாகும். இந்த இடத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் அதில் கலந்து கொள்ளாமை தமிழ்மக்கள் சார்பில் சீற்றத்தை தாங்கி நிற்பதையும் மறுக்க முடியாது. இது பலபல ஐயங்களைக் கொண்டுவந்தாலும் வெளிப்படைத்தன்மையுடன் அதற்கான காரணங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கலாம்.

இந்த நிலையில் தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வெற்றிகள் யாவும் ‘தற்காலிகமானவை’ என்ற எடுகோளுக்கு வரவேண்டியுள்ளது. வெகு விரைவில் அந்நிலை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுவதையும் அவதானிக்ககூடியதாக உள்ளது.

வெளிவிடக்கூடியவை – வெளிவிடக்கூடாதவை என்று உள்ளதும் உண்மை. ஒரு அமைப்பின் சகல காரியங்களையும் வெளிவிடக்கூடாது என்ற வாதமும் உள்ளது. ஆனால், இதனை ஒரு ஆயுதமாகவோ, சாட்டாகவோ கொண்டு ‘கிடப்பில் கிடக்கின்ற கொள்கை’ களுக்கும், அசண்டையீனமாக விடப்பட்ட பணிகளுக்கும் காரணம் கற்பிக்கக்கூடாது.

இது ‘வெளிவிடக்கூடியவை’ என்று கருதிக்கொள்ளும் எதுவுமே பொதுமக்களுக்கு இதுவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால், செய்திருந்தால் கூட ‘செய்யப்படவில்லை’ என்ற பட்டியலில் அடங்குவதையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக அண்மையில் தமிழ்நாட்டுத் தேர்தலை எடுத்துக்கொண்டால் அ.தி.மு.க. பெற்ற வெற்றி ஜெயலலிதா அம்மையாருக்கு கிடைத்த வெற்றியல்ல. ஈழத்தமிழர் அனர்த்தத்தில் தி.மு.க.வும் கலைஞரும் காட்டிய அக்கறையும், அக்கட்சி சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சி காட்டிய ஆதரவும் தான் தி.மு.க. விற்கான தோல்வியாகும்.

கலைஞர் தமிழை போற்றிய அளவிற்கு தமிழ்மக்களை காக்க முயலவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களின் ஆதங்கம். ‘தமிழ் மக்கள்’ என்ற தமிழ்நாட்டு மக்களின் கருதுகோள் ‘அனைத்துலக தமிழ் மக்கள்’ என்ற குடையாக விசாலித்திருந்தது. அதில் ஈழத்தமிழர்களும் அடக்கம்.

ஜெயலலிதா அம்மையார் தமிழ்ப்பெண்மணி அல்ல என்பதும் கலைஞர் தமிழர் என்பதும் தமிழ்நாட்டு மக்கள் அறியாததல்ல. இருப்பினும், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம். ‘தமிழர்’ இருந்தால் தான் ‘தமிழ்மொழி’ வளரும் என்பதற்கமைய தமிழ்நாட்டு மக்கள் ‘தமிழர்’ காப்பாற்றப்பட வேண்டும் என்பதை மனதில் பதித்துக் கொண்டமையாலும், மீண்டும் நடவாமைக்கான உத்தரவாதமும் அதை நிலைப்படுத்த ‘நீதி’ யும் தேவை என்ற எடுகோளை தமிழ்நாட்டு மக்கள் எடுத்துக்கொண்டமையாலும் ஜெயலலிதா அம்மையார் சார்ந்த அ.தி.மு.க. வின் வெற்றி பெற வாய்ப்பமைந்தது.

அ.தி.மு.க. வின் வெற்றியின் பின்னரான நிலைப்பாடு இதுவரையில் பெரிய அளவில் ‘தமிழ்மக்கள்’ சார்ந்ததாகவே உள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் இயங்கும் தமிழக அரசியல் எந்த அளவு மட்டும் பாயும் என்பதை அறிந்த பின்னரே முடிவெடுத்தல் அவசியம். எதிர்க்கட்சிகளின்குறைகூறல்களிலிருந்து முடிவெடுக்கலாகாது.(எதிர்க்கட்சி ஆட்சியிலிருந்தபோது செய்யாமல் இருந்ததையும் ஒப்புநோக்கல் வேண்டும்)

புரிதலுக்குரிய விடயம் என்னவென்றால், ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களுக்கு இளைக்கப்படும் அநியாயங்களுக்கு ஆக்கபூர்வமாக, செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் தமிழ்நாட்டு மக்கள் ஆளும்கட்சியை தூக்கி ஏறிய தயங்கமாட்டார்கள் என்பதே. இது ஜெயலலிதா அம்மையாருக்கும், கலைஞருக்கும் நன்கு புரிந்திருக்கும்.

தற்போதைய அ.தி.மு.க. வின் நிலைப்பாடு ‘தமிழ் மக்களுக்காக’ என்ற நிலையிலிருந்து மாறமுடியாது வியூகமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதிலிருந்து பெரும் பாடத்தை கற்கவேண்டியுள்ளது. அதாவது, தேர்தலுக்கு முன்னராக கொடுத்த வாக்குறுதிகளையும், திட்டங்களையும் அடுத்த தேர்தலுக்குள் நடைமுறைப்படுத்தாவிடின் அல்லது நடைமுறைப்படுத்தாததற்குரிய நியாயமான காரணங்களை வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு தெரியப்படுத்தாவிடின் எதிர்காலத்தில் கருணாநிதியின் தற்போதைய நிலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்படப்போவதை தவிர்க்கவும் முடியாது.

மலையூர்  பண்ணாகத்தான்