“உதயம்” ஆண்டு விழாவில் பாராட்டுப்பெற்ற கவிதை

என் தமிழே! தமிழ்த்தந்த ஆசான்களே! என் மண்ணே! அன்னை சக்தியே! என் சிந்தையிலும் நாவிலும் படிய வணங்குகின்றேன்.

கவி படைக்க களம் தந்தவர்களே

கவிப்படையல் சுவைஞர்களே

காலமும் பேரலையும் காவுகொண்ட

ரணமும் வடுவும் காயாமல் நிற்க

விண்ணிமிர்ந்து வீற்றிருக்கும்

கவிப்பந்தல் தலைமைக் கப்பே

நண்பனே வாழ்க அனைவரும்.

ஏதோ என்நெஞ்சில்

வெட்டிப்பாயும் மின்னல் கீற்றாய்

புற நானூற்றில் பரணர் வரிகள்!

நீயே, அலங்கு உளைப் பரிஇ இவுளிப்

பொலந் தேர் மிசை பொலிவு தோன்றி

மாக்கடல் நிவந்தெழு தரும்

செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ!

அனையை ஆகன் மாறே

தாயில் தூவாக் குழவி போல

ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே!’

சுருக்கம் கூறின்,

அழகு தேரில் வரும்

உதய ஞாயிறுவே

இயக்கமற்று நீ ஓய்ந்தால்

பசியால் ஓலமிடும் தாயற்ற குழந்தை வாழும்

துயர நாடாய் புலம்பும் என்பதாகும்.

உதயமே நீ ஓயமாட்டாய்

சீரான நின் சேவையால்

தமிழ் செழிக்கும்தவிப்பவர்கள் வாழ்வார்கள்வாழ்த்துக்கள்

இப்போ ஊரோடு உறவாடு

ஊர் + ஓடு

அங்கு உறவாடு

தலைப்பை இப்படிப் பிரித்துள்ளேன்!

நான், நானாக நின்றே கவி படைக்கிறேன்

நீ, நீயாக நின்று கிரகித்தால் போதும்

நானாக நீயோ

நீயாக நானோ

கூர்ப்படைதல் வேண்டா!

படைப்பினுள் கூர்மையாகு

படையல்,

பசி தீர்க்குமா? இல்லை பசி தூண்டுமா?

விளங்காத இரு வினாக்கள்

விளக்கங்கள் பிசகின்றி கிடைத்தால்

வெற்றி எனக்குத்தான்என் படையலுக்குத்தான்

கவியும் கத்தரிக்காயும்

கால நகர்வில் இவையும் காட்டாற்று வெள்ளமே

வேலை மினக்கட்டவனின் பூனை சிரைக்கும் வேலையென எண்ணின்

எனக்கு…… இல்லை……. இல்லை……..!

என் படையலுக்கும் தோல்விதான்.

தேசம்

நாடு

ஊர்

யாது அர்த்தம் இவைக்கு?

சமுத்திரத்திற்கு மூடிபோடும் முனைப்பு! வேண்டாம்வேண்டாம்

ஊர் மட்டும் போதும் போவோம்

என்னூர்

என் அடையாளம்

என் இரத்தமும் சதையும்

என் உயிரும் உணர்வும்

என் இன்பமும் துன்பமும்

என் உறவும் பிரிவும்

தொலைக்க முடியாதவை

தொலைந்தும் தொலைக்கப்பட்டும் விட்டன

உள் ஊர் உணர்வுகள்

உள்ளத்தோடு மட்டும்

உறங்கிக் கிடக்கட்டுமே

அதுவும் நிஜமாக இல்லாது நிழலாக

 

புலம் பெயர்ந்து

புலன் பெயர்ந்து

வாழும் இடங்களுக்கு

ஊரைக் கொண்டுவர

சேர்ந்து நாம் முயல்கிறோம்

விசப்பரீட்சை இரு தோணிக் கால்கள்

சந்ததி தோற்றுவிடும்

கவனமாய் இரு

போதும் போதும் என்கிறாயா போதனை? புரிகிறது

வருமுறை உன்னூர் வருவேன்

இம்முறை என்னூர் போகலாம் வா தோழா

எனக்கொண்ணா என்றுமட்டும் சொல்லிடாதே!

வா வா என் தோழா போவோம்

பக்கத்து ஊர்தான் என்றாய்

முன்னர் உனை நான் பார்த்ததே இல்லை

நாலு காதம் நடந்து

நாலு ஊர் பார்த்ததில்லை

நாலு எட்டு நடந்து நானும் உன்னூர் வந்ததில்லை

உன் மொழியில் சிலது புரியா

என் மொழியில் பலது விளங்கா

உன் கலை நான் கண்டவன் அல்ல

என் கலாசாரம் நீ அறியமாட்டாய்

எப்படியாயினும்

நீயும் நானும்

பறைந்து தான் ஆகவேண்டும்

சேர்ந்து தான் தீரவேண்டும்.

வேறுவழி?

தேசம் கடந்து

நேரமும் வேலையும் சண்டையிட

ஒட்டும் உறவுமின்றி

உரிக்காத மிட்டாய்களை

உறையோடு உண்பதுபோல

பரஸ்பரமற்ற வாழ்வியலுக்குள்

நான்நீநாம்

ஈழத்தமிழர் என்கிறோம்

தன்னாட்சி தா என்கிறோம்

இதனுள் மண்டிக் கிடக்கும் ஒற்றுமையையும் தேடுகிறோம்

கோஷங்கள் யாவும்

வேலையின் விடுமுறையில் தான்

எது எப்படியோ

காலமோ

விதியோ

தேவையோ

அவஸ்தமோ

பல்லாயிரம் கல் கடந்து

உன்னையும் என்னையும் இங்கு சேர்த்தது

தேசத்திற்காய் மடிந்த உயிர்கள் தான்

ஒப்புக்கொள்

போனது போகட்டும்!

நீயும் நானும் தொடக்கப் புள்ளியிடுவோம்!

மதிப்போடு காலடிகளை

கவனமாய் எடுத்துவை தோளா

ஊருக்குள் வந்துவிட்டோம்

தலைஎன கொடிகட்டி பிரகடனம் செய்த பூமியல்லவா?

பார் தோழா

பாருக்கு முகவரி சொல்லும்

புரான பூமியை

அனல்கொண்டு விரிந்திருக்கும் சம்பூரைப் பார்த்தாயா

ஆழிசூழ் துறைநகர்இப்போ,

உலக விளையாட்டின் தாயக்கட்டையாக

குண்டு விளையாட்டின் கையானாக!

சற்று நகர்!

இது தான் கொட்டியாறு

வட ஆரியன் இட்ட பெயர் மகாவலி

இது அகத்திய முனியின் நீச்சல் தடாகம்

வெருகல் முருகனின் ஸ்நான தலம்

பின் புறம் பார்

இராவணன் மனைவியின் பொய்கை

என்ன எதையுமே காணவில்லையா?

இவை தொலைந்து மூன்று தசாப்தங்களுக்கு மேல்

சோத்துக் கைப்பக்கம் பார்!

அதியமான் கேணி

திருமங்கை ராணி திருமுழுக்காடிய இடம்

பீச்சாங்கைப் பக்கம் பார்!

தேனிட்டமடு

ஆடகசெளந்தரி அரசியார்

ஆறிநின்று தேனுண்ட இடம்

என்ன தேடுகிறாய்

இவை புதையுண்டு மூன்று தசாப்தங்களுக்கு மேல்

இது, இப்போ

சூரியவெவ என்றும்

ஆரியபுர என்றும்

சோமபுர என்றும் உயிர் வாழ்கிறது.

ஆச்சரியமாய் உள்ளதா இன்னும் வா தோழனே

குளங்கள் பல சேர்ந்த இடம் சேருவில்

எம் புராணம் கூறும்

காட்டுப் பிள்ளையார்

ஆலயத்தின் தலைவாசல்

இவை தொலைந்து பல காலம்

காலடிகளை வேகமாக்கிக் கொள்!

மகாவம்ச ஆலயமான

சேருவில இப்போ!

கணதெய்யோ‘ – அதோ ஒரு மூலையில் ஓரமாக!

எதுவுமே பேசாதே நாம் தமிழரல்லவா

! நினைவுக்கு வருகிறது

இருவருமே துணிச்சலாகப் பேசலாம்

புரியாது அவர்களுக்கு

உன் மொழியும் என் மொழியும் புலம்பெயர் நாட்டின் மொழியல்லவா?

என்ன விந்தை?

தாய் மொழியுமில்லை திணிப்பு மொழியுமில்லை

பாதியிலே வந்த வேற்று மொழியினுள் புதையுண்டுள்ளோம்

ஏன்?

சந்ததியினர் கூட அதனுள்ளே!

நாம் தான் வழிகாட்டி

எம்மிடம் தான் ஒப்படைப்பு

புரியாத புதிர்!

இன்னும் பல வேண்டாம் வேண்டாம்

இறுதியாக ஓரிடம் மட்டும் வா

இணைப்பின் நிஜத்தைப் பார்க்கலாம்

வடக்கும் கிழக்கும் இணைதல் வேண்டும் என

வாய் சவடால் காட்டி கூத்தாடுவோம் அல்லவா!

பார்த்தாயா?

இதுதான் தென்னை மரவாடி

கிழக்கு இணைப்பின் ஒரு முனை

வடக்கு தொடர்பின் மறுமுனை

இப்போ அழிந்துபோன அத்திப்பட்டிக் கிராமம்

தேடிப்பார்!

மையிலும் வெளிக்காது

திட்டமிட்ட துண்டாடலுக்கு

அகவை முப்பத்தியிரண்டு

இப்போதைக்கு போதும்

நீ பார்த்தவை!

இப்போது சொல்லு இதற்கெல்லாம் விடை யாது?

நீயா? நானா? அல்லது நாமா?

நீங்கள், நீங்கள் தான்

நாங்கள், நாங்கள் தான்!

இந்த வாழ்வியல் காரணமா?

தானாடா விட்டாலும்

தன் சதை ஆடாது விட்டதே அன்று!

வரலாற்றை அழிக்கும் வரலாற்றுத் தவறுகள்

இனியும் தொடரவேண்டா

வரலாற்றை நீயும் நானும் படிப்போம்

ஆதாரங்களைக் கைக்குள் அடக்குவோம்

பின்னர் ஒப்படைப்புபற்றி மார்பு தட்டுவோம்

எதிரி வீழ்ந்து கிடப்பான்!

தெளிவில்லா நீரோடையில்

தெரியாது மாணிக்கம்

மாணிக்கம் பெறல் வேண்டும்

அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம்

இப்போது இந்த ஊரும் போதும்

உறவாடலும் போதும்

நான் தவழ்ந்த மண்ணைச் சொல்கிறேன்!

வா திரும்பலாம் தோழா எமது நாட்டிற்கு

எந்த நாடு? ஏன் விழி பிதுங்குகிறது?

பயம் கொள்ளாதே!

இது எம்மண் என்றும்

தாயக பூமி என்றும்

உசுப்பேத்தத்தான் இயலும்

எனக்கும் உனக்கும் எந்த ஊர்?

நாம் வந்தேறிய நாடு!

சொந்த நாடு!

அந்த நாடு தான் எந்த நாட்டிலும் அகதிதான்

ஊரும் அங்குதான்!

உறவும் அங்குதான்!