நீண்ட காலங்களுக்கு பிறகு மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது வேதாளம். கடுப்பைத்தரும் 3 செய்திகளோடு முருங்கை மரத்தை விட்டு மக்கள் மத்தியில் இறங்கிவிட்டது!

1. தமிழீழத்தின் தேசியத்தலைவர் பிரபாகரன் எங்கே?

2. போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் சேகரிக்கபட்ட பணம் எங்கே?

3. போராட்டம் தோற்றுப்போனதற்கு புலிகள் தரப்பு கூறும் காரணம் என்ன?

முதலில் தமிழீழத்தின் இராணுவரீதியான விடுதலைப்போராட்டம் படு தோல்வியில் முடிந்ததை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். பின்னர் மேற்கூறிய வினாக்களுக்கு ஒழுங்கான பதில் தரப்படும் பட்சத்தில் எமது போராட்டம் மீண்டும் ஏதோ ஒரு வடிவில் ஆரம்பமாவதற்கு சாத்தியக் கூறுகள் எவையென ஆராயலாம். காயத்துக்குள் அழுக்கை வைத்துக்கொண்டு காயத்துக்கு மருந்து கட்டப்படுமானால் காயமும் மாறாது, வேறு வழிகளில் காயத்தால் சேதங்களும் ஏற்படலாம்

அனைத்துத் தமிழ் மக்களும் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தெளிவுறக்காண்பது அவசியம். அதுவே உணர்வுள்ள தமிழரின் தலையாய கடமை. அதை விடுத்து நடப்பது நடக்கட்டுமென்றுபார்த்திருந்தால் இறுதியில் ஒரு சிறந்த நகைச்சுவை படமாக தமிழர் போராட்டம் இருக்கும்

1. தேசியத்தலைவர் எங்கே? 

தோல்விக்குப் பின் மூன்றாவது மாவீரர் தினமும் நெருங்கிவிட்டது!

பிரபாகரனை வைத்து கடை நடாத்திக்கொண்டிருக்கும் புலிப் பச்சோந்திகள் தொடர்ந்து தமிழ்மக்களை ஏமாற்றலாமென நினைப்பது மடமை. பொய்மையுடன் கூடிய வியாபாரம் நிறுத்தப்படல் வேண்டும். இனியும் உண்மை சொல்ல பயப்படுவதில் அர்த்தமில்லை. போராட்டம் தோற்றது எவ்வளவு தூரம் உண்மையோ அதுபோல, பிரபாகரன் மரணமடைந்ததும் உண்மை. உண்மையை வெளியில் சொல்லி ஒரு குப்பி விளக்கையாவது இந்த மாவீரர் தினத்தில் ஏற்றுவதற்கு புலிகள் என்று தம்மை பீற்றிக்கொள்ளும் ஏவல் நாய்கள்தமிழ்மக்களுக்கு இடம் தர வேண்டும்

சுபாஸ் சந்திரபோஸ் இன்னமும் உயிருடன்தான் இருக்கின்றார் என்று உலகத்தை இந்திய தேசீய வாதிகள் ஏமாற்றிய காலம் வேறு. தற்போது புலிகளின் போராட்டம் தோல்வியடைந்த காலம் வேறு. பிரபாகரனின் உடலத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியதும், அவரின் மூளைப்பகுதியும், குருதியும் எடுத்துச் செல்லப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயம். இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு மௌனித்திருப்பது அரசியல் தந்திரம்

21 ம் நூற்றாண்டின் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மரபணுச் சோதனைகள் மூலம் என்றோ ஒரு நாள் இலங்கை அரசினால் பிரபாகரனின் இறப்பு நிரூபிக்கப்படும்போது அனைத்து தமிழ்ச்சமூகமும் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்படும். உலகம் எம்மேல் காறி உமிழும்

பிரபாகர வியாபாரிகள்பல உண்மைகளை வெளியில் சொல்ல மறுக்கும் மர்மத்தை தமிழ்மக்கள் சந்திசிரிக்க வெளிக்கொண்டு வருவார்கள். இதனால் அடிபட்டுப் போகப்போவது தமிழீழம் தான். அகதி அந்தஸ்த்தை மையமாகக் கொள்ளாத புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் உண்மையான உணர்வோடு தான் பங்களிப்புகளை நல்கிறார்கள். புலிகள் எனக்கூறி ஏமாற்றுவித்தை காட்டும் புலிப்பயங்கரவாதிகளை விட உணர்வுள்ள தமிழர்கள் எத்தனையோ மடங்கு உயர்வு. இலங்கையரசு கூறும் புலிப்பயங்கரவாதிகள்இவர்களே

எது எப்படியோ தமிழீழத் தீர்வுக்கு முதற்படியாக தேசியத்தலைவர் பிரபாகரன் மரணித்தார் என்ற செய்தியை இந்த 2011 மாவீரர் தினத்தில், அனைத்துலக செயலகம் என்று கூறிக்கொள்பவர்களோ அல்லது தலைமைச்செயலகம் என்று போட்டி போடுபவர்களோ அல்லது இருவரும் இணைந்தோ பிரகடனம் செய்யவேண்டும். இதுவே நீங்கள் தமிழுலகத்துக்கு செய்யும் முதல் காணிக்கை. 

2. சேகரிக்கப்பட்ட பணம் எங்கே? 

புலிகளின் ஆயுதப்போராட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த காலப்பகுதியில் காஸ்ட்ரோ அனுப்பிய ஒலிநாடாவை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒலிபரப்பி, ‘புலம்பெயர் தமிழர்கள் பண உதவி செய்யாவிட்டால் தமிழீழ மண்ணை காப்பாற்றமுடியாமலே போய்விடும்என்று கூறி புலிகளின் நாடுதழுவிய, மாநில செயற்பாட்டாளர்கள் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெரும்தொகைப் பணத்தை வசூலித்தார்கள்

பணத்தை வசூலித்து முடிக்கமுன்னரே போராட்டமும் முடிந்து விட்டது. போராட்டம் தோற்றது எவ்வளவு தூரம் உண்மையோ அதுபோல இறுதியாக சேர்க்கப்பட்ட பணம் முள்ளி வாய்க்காலில் கொண்டு போய் சேர்க்கப்படவில்லை என்பதும் உண்மை. இந்தப்பணத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை அனைத்துலக செயலகம் என்று கூறிக்கொள்பவர்களோ அல்லது தலைமைச்செயலகம் என்று போட்டி போடுபவர்களோ அல்லது இருவரும் இணைந்தோ இந்த மாவீரர் தினத்தில் தமிழ்மக்களுக்கு கூறவேண்டும். 

3. தோல்விக்கு என்ன பதில் 

இராணுவப் போராட்டம் என்பது வெல்லவேண்டும் என்பது நியதியல்ல. தோற்றும் போகலாம். தோல்வி என்பது பிரச்சனை இல்லை. விட்ட இடத்தில் இருந்து போராட்டம் தொடர்வதா இல்லையா என்பதைத்தான் சிந்திக்க வேண்டும். தொடர்வதில்லையானால் ஒரு சிக்கலுமில்லை. ‘படலையை இழுத்து மூடிவிட்டு படுத்து விடலாம்‘. போராட்டம் தொடரவேண்டுமானால் அதில் தான் சிக்கலிருக்கிறது. எந்த வடிவத்தில், எப்போது, என்ன பரிமாணத்தில் தொடரப்படவேண்டும். இவை தீர்மானிக்கப்படாத பட்சத்தில், வேறு வடிவத்தில் மக்களின் ஜனநாயகப் போராட்டமாக மாற வேண்டுமெனவும் நாடுகடந்த தமிழீழ அமைப்புகள் அடங்கலாக புலிகளின் செயலகங்கள் கூறிக்கொள்வது நகைப்புக்குரியது. இரண்டு தோணியில் கால்வைக்கலாகாது

போராட்டம் வேறு வடிவத்தில் தொடரவேண்டுமென அறைகூவல் விடுப்பவர்கள் புலிகளின் தோல்விக்கான காரணங்களையும் நியாயங்களையும் வெளிப்படுத்தியாக வேண்டும். இது வெளிச்சத்திற்கு வராத பட்சத்தில் போராட்டம் கடுகளவேனும் நகராது. வெறும் புஸ்வாணமாகவே இருக்கும்

இந்த செய்தியை 2011 மாவீரர் தினத்தில், அனைத்துலக செயலகம் என்று கூறிக்கொள்பவர்களோ அல்லது தலைமைச்செயலகம் என்று போட்டி போடுபவர்களோ அல்லது இருவரும் இணைந்தோ பிரகடனம் செய்யவேண்டும். 

இந்த முடிச்சுக்கள் அவிழ்க்கப்படாத பட்சத்தில், ஈழத்திலே மாவீரர்களின் நலன்களோ, முன்னாள் போராளிகளின் நலன்களோ, கைவிடப்பட்டிருக்கும் செஞ்சோலைச் சிறார்களின் நலன்களோ, இராணுவ வல்லுறவுகள் மூலம் பாதிக்கப்பட்ட யுவதிகளின் நலன்களோ மேம்படுத்தப்பட முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், கைவிடப்பட்டவர்களுக்காகவும் உதவி கோரி செல்லும்போது மூன்று முடிச்சுகளும்தடையாக நிற்கிறது

மாவீரர்களின் நினைவாக வெடியோடு திறக்கும் கல்லறைகளோடுஇந்த மூன்று முடிச்சுகளும் வெடியோடு திறக்கவேண்டும்! அந்த வெடி மாவீரர்களின் கல்லறை வெடியைவிட அதிர்வு கூடிய வெடியாக இருக்கும். அந்த வெடி மக்களின் மனங்களை திறக்கச் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் உதவிசெய்ய உதவவேண்டும். 

நா. மதியழகன்

mathiyalakan1@hotmail.com