முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் இன்றுவரை ஈழத்தமிழர்களின் துயரங்களை உலக அரங்கிற்குக் கொண்டுவந்து அதிர்வை ஏற்படுத்தியவற்றில் பிரதானமாக இரண்டைக் குறிப்பிடலாம்.

 

1. பி.பி.சியின் சனல் 4 தொலைக்காட்சி சேவை.

2. சுவிஸ் SF1 தொலைக்காட்சி சேவை

ஈழத்தில் துயரப்பட்ட மக்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டும், ஏனைய வேறு எந்த தமிழ் அரசியல்வாதிகளையோ அல்லது வேறு எந்த தமிழ் பிரமுகர்களையோ ஆதாரப் படுத்துவதற்கு சாட்சிகள் தேடாமலே இந்த ஐரோப்பிய நாட்டு 2 தொலைக்காட்சிகளும் சுயமாக இயங்கியிருப்பது ஒரு விசேட அம்சமாகும். இதனால் தமிழர் பிரச்சனை உலக மட்டத்திற்கு காட்டிக்கொடுப்புகள் இன்றியும், விதண்டாவாதங்கள் இன்றியும் மிக உச்சமாக உயர்ந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாகும். அப்படியிருந்தும், தற்பொழுது பரப்பாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சுவிஸ் SF1 தொலைக்காட்சி சேவையில் சுவிஸ் ஜெர்மனி துணைத்தூதுவர் ஜகத் டயஸ் அவர்களுக்கு எதிராக நிரூபிக்கப்பட முயலும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு தடைக்கல்லாக சுவிசில் வாழும் அரச சார்பான சில தமிழ் மக்கள் ஜகத் டயசை கெளரவப்படுத்தி வெளிப்படும் காட்சியானது எண்ணை திரளுகையில் சாடி உடையும்கேவல நிலைக்கு தள்ளப்படுவதை மறைக்க முடியாது

புலம்பெயர் தமிழ்மக்களின் நன்மைக்கான தலையீடுகள், சிலவேளை கூழ்ப்பானைக்குள் விழுந்த கதையாகப் போய்விடலாம். ஒப்பிடும் போது மவுனமாக இருப்பதே சிறப்பென்று தெரிகிறது. இருப்பினும் தடைகள் யாவற்றையும் தாண்டி புலம்பெயர் தமிழ்மக்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எம்முன் விரிவதை தவிர்க்கவும் முடியவில்லை

இந்தத் தொலைக்காட்சிச் சேவைகளால் ஒளிபரப்பட்டு வரும் தமிழ்மக்களின் அனர்த்தங்களின் காட்சிப்படுத்தலுக்கான முடிவு தமிழ்மக்களுக்கான சுயநிர்ணயம், சுதந்திரம், வாழ்தலுக்கான உறுதி சரிவர வழங்கப்படாவிடின் இலங்கையிலே சிங்கள தமிழ் ஆகிய இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்று சொல்கிறது

இதற்கு வலுச்சேர்ப்பதற்கான முன்னெடுப்புக்களை புலம்பெயர் தமிழ்மக்கள் ஆற்றவேண்டியது கடமையாகும்

* 1948 இலிருந்து 18 மே 2009 வரைக்கும் இனரீதியாக தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆதாரத்துடன் இந்த ஊடகங்களுக்கு வழங்கல்.

* வடகிழக்கு தமிழர் தாயக பூமியை சிங்களம் கபளீகரம் செய்வதை ஆதாரத்துடன் வழங்கல்.

* இலங்கையில் தொழில் இனரீதியாக சிங்களம் காட்டும் பாரபட்சங்களை ஆதாரத்துடன் வழங்கல்.

* ஈழத்தமிழ் மக்களின் பொருளாதார வழர்ச்சியை மழுங்கடிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்களம் மேற்கொண்டிருப்பதை ஆதாரத்துடன் வழங்கல்.

* வடகிழக்கு இந்து ஆலயங்களை பெளத்த ஆலயங்களாக மாற்றி தமிழன அழிப்பை சிங்களம் மேற்கொள்ளுவதை ஆதாரத்துடன் வழங்கல்

இதுபோன்று மறைந்து கிடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களால் மாத்திரம் தான் முடியும். இவையே சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்கு கொண்டுவந்து தனி ஈழம் வகுப்பதற்கான வழியை தோற்றுவிக்கும்.

அதை விடுத்து,

இது போன்ற ஐரோப்பிய நாடுகளின் தமிழ்மக்களுக்கான முன்நகர்வுகளை வேறுவழிகளில் எமக்கு சாதகமாக்க முனையலாகாது. முள்ளிவாய்க்கால் அனர்த்தம் இன்னமும் ஆறாத வடுவாக இருக்கின்றது. அந்த காயப்பட்ட மக்களுக்கு ஒத்தடம் எப்படி வழங்கப்பட வேண்டுமென்பதை புலம்பெயர் தமிழ்மக்கள் ஆராய வேண்டும். வெறுமனே ஐரோப்பிய ஊடகங்களின் காட்சிகளை புலம்பெயர் மக்களின் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்கலாகாது, இந்த சந்தர்ப்பங்களை முழு முனைப்பாக தமிழீழம் மலரவேண்டும் என்பதை மட்டும் அடிப்படையாக நிறுத்தி புலம்பெயர் மக்கள் நகர்வார்களேயாயின் இலக்கையடைவது திண்ணம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

வாழ்க தமிழீழம்.