சுவிஸ் ஈழத்தமிழர் அவையும், அச்சுறுத்தலுக்குள்ளான மக்களுக்கான அமைப்பும் இணைந்து அகதிகளை தற்பொழுது திருப்பி அனுப்புவதால் அகதிகளுக்கு ஆபத்தாக முடியலாம் என்பதால் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று சுவிஸ் அரசிடம் மனு கையளித்திருக்கிரார்கள்.

அச்சுறுத்தலுக்குள்ளான மக்களுக்கான அமைப்பு மற்றும் சுவிஸ் ஈழத்தமிழர் அவை வியாழனன்று கருத்து தெரிவிக்கையில், 20 இலாப நோக்கற்ற வலிந்துதவும் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் 4800 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும், சுவிஸ் மத்திய அரசின் தமிழர்களை திருப்பியனுப்ப எடுக்கப்பட்ட இந்த முடிவு மிக அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
 
சுவிசில் வாழும் தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் நியாயமற்ற முறையில் கைதுசெய்யப்படலாம் அல்லது அச்சுறுத்தப்படலாம் அல்லது சித்திரவதை செய்யப்படலாமென பயப்படுகிறார்கள் என்று அச்சுறுத்தலுக்குள்ளான மக்களுக்கான அமைப்பைச்சேர்ந்த அங்கேலா மற்றி தெரிவித்தார். இதுவரையில் நடைபெற்ற ஒருசில சம்பவங்கள் இதை மேலும் உறுதி செய்திருக்கின்றன. அதையும் விட இலங்கையில் இன்னும் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டம் ஒருவரை வெறும் சந்தேகம் என்ற பெயரில் உடனடியாக கைதுசெய்து தடுத்து வைப்பதற்கு அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.

நான்கு கோரிக்கைகள்

இலங்கை அரசாங்கம் தாம் முன்வைக்கும் இந்த 4 கோரிக்கைகளையும் நிறைவேற்றும் முன்னர் சுவிஸ் அரசாங்கம் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்றும் இவ்வமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

1 . உடனடியாக இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களுக்காக சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் அனைவரின் மீதான சர்வதேச நீதி விசாரணை ஒன்றுக்கு அனுமதியளிக்க வேண்டும்.

2.போர்க் குற்றம் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும்.

3.உடனடியாக அவசரகாலச் சட்டத்தை நீக்கவேண்டும்.

4.கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் பார்வையிடுவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுமதியளிக்க வேண்டும்.

2010 ம் ஆண்டு கடைசிப்பகுதியில் 1800 பேர் அகதி அந்தஸ்துக் கோரி விண்ணப்பித்திருக்கின்றனர் என்றும் 300 பேர் அகதி அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிப்பிற்கான மேன்முறையீட்டைச் செய்திருக்கின்றார்கள் என்றும் அகதிகளுக்கான சுவிஸ் மத்திய அரசாங்கப் பிரிவு தெரிவித்தது. மேலும் 2200 பேர் தற்காலிக வதிவிட உரிமையைப் பெற்றுள்ளதாகவும் 24 பேர் திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

அகதிகளுக்கான சுவிஸ் மத்திய அரசாங்கப் பிரிவின் குரல்தரவல்ல  அதிகாரியான மிக்கஏல் கிளெசர் அவர்கள் sda செய்தியாளருக்கு தெரிவிக்கையில், கடந்த பங்குனி மாதமளவில் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் இதுவரை எவரும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவில்லை என்றும், ஒவ்வொருவரினதும் அகதி அந்தஸ்துக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.