ஆடப்பிறந்தவளே ஆடி வா! புகழ் தேடப்பிறந்தவளே பாடிவா!’ 

ஜெயலலிதா உட்பட எவருமே கற்பனையால் கூட எட்ட முடியாத மாபெரும் வெற்றியை அ.தி.மு.. விற்கு தமிழக மக்கள் தமது வாக்குகளை அள்ளிச் சொரிந்திருக்கிரார்கள். இந்த வெற்றியில் ஏராளமான பின் நிலவரங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் இப்போது எழுதுவதைத் தவிர்த்து அதிரடியாக சில விடயங்களை அம்மாவுடன் பகிர்ந்து கொள்ள தணல்அனலாய் காய்ந்து நிற்கிறது

பலவிதமான கூச்சல்களின் மத்தியில் தி.மு.. ஆட்சியமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அரசால் வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளினூடாக உலக நிலவரங்கள் அடங்கலாக அயல் நாடான இலங்கை வன்முறைகளை தமிழக மக்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளூடாகவே பார்த்து ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். குறிப்பாக பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் நிலை எனலாம்

கருணாநிதி அவர்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது மறைமுகமாக எடுத்துக்கொண்ட பிரதான ஆயுதம் தன்னையொரு முழுத்தமிழனாக காட்டுவதும், தன்னோடு பொருதக்கூடிய அரசியல் தலைவர்களை தமிழர்கள் அல்லாதவர்கள்‘ (ஐயங்கார், தெலுங்கு, கர்நாடகம் போன்ற) எனக்காட்டுவதுமாகும். தமிழர் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணியதிலும் தப்பில்லை. ஆனால் அதற்கான செயற்பாடுகளை செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். தமிழக மக்கள் ஜெயலலிதா அம்மாவின் மேல் கொண்ட பாசம் அல்லது பற்று என்பதற்கப்பால் ஈழத்தமிழர்கள் சார்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றொழுங்குகள் ஆகும்

கடந்த காலங்களில் ஜெயலலிதா அம்மா அரியணை ஏறுவதற்கு பல வாசல்கள் திறந்திருந்த போதிலும் அதற்கான வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை. புரட்சித் தலைவர் M.G.R இன் பதாதைகளையும், பாடல்களையும் முன்வைப்பதால் மட்டும் மக்கள் ஏமாற ஆயத்தமில்லை. புரட்சித் தலைவர் M.G.R. இனால் ஈழத்தமிழர்கள் சார்பில் வகுக்கப்பட்ட கொள்கைகள், தமிழக ஏழை மக்களின் நலன்பேண் திட்டங்கள், இலஞ்ச ஒழிப்பு, குழுநிலை வெளிப்படைத்தன்மை அரசியல் போன்ற எதையுமே ஜெயலலிதா அம்மா கைக்கொள்ளவில்லை. இதனால் அரியணையிலிருந்து இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதை மாறாக கலைஞர் அவர்கள் தமிழர் சாராத ஒருவரை மக்கள் அரியணையில் இருந்து இறக்கியதாக நோக்கியிருக்கலாம்

அரசியல் ஏற்ற இறக்கங்களுக்கு பலமாதிரியான கற்பிதங்கள் செய்து கொண்டாலும், ஜெயலலிதா அம்மாவின் இன்றைய ஏற்றம் முக்கியமாக இரண்டு தளத்தில் அமைகிறது

* கலைஞர் கருணாநிதியின் குடும்ப ஆட்சி.

* ஈழத்தமிழர்கள் சார்ந்த கலைஞரின் நிலைப்பாடு

தமிழக மக்கள் தங்கள் ஒருமித்த கருத்துக்களை வெளிக்கொண்டு வருவதற்கு இந்தத்தேர்தலை மிகப்பெரிய களமாக பயன்படுத்தியுள்ளார்கள். நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அடுத்தபடியாக ஈழத்தமிழர்களிற்கு கிடைத்த சாதகமெனலாம். இந்த சந்தர்ப்பத்தை மிக நிதானமாகவும் புத்தி சாதுரியமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

ஜெயலலிதா அம்மாவின் வெற்றிக்களிப்பை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை கலைஞரின் தோல்வியை விமர்சிக்காமல் இருக்க வேண்டும். தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பில் மீண்டும் கலைஞர் குழு ஆட்சியேறும் காலம் வருமாயின் அது கலைஞரின் ஈழத்தில் தமிழீழம்மலரவேண்டுமென சூழுரைக்கும் பிரச்சாரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதுவே தமிழகத்தின் எதிர்கால போட்டி அரசியலின் சுவடுகளாக அமையும். ‘சிலுசிலுப்பு அவசியமில்லை பலகாரம் தான் தேவை!’ 

ஜெயலலிதா அம்மா அவர்கள் இந்த வெற்றிக்களிப்பில் திளைத்து நிற்பதை விட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றலும், மறைந்த புரட்சித் தலைவர் M.G.R. அவர்களின் தடங்களில் பயணிப்பதுமாகும்

உயிருக்கு நிகர் இந்த நடல்லவோ! அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ! புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ! மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ?’ 

தணல்