குழுக்களின் இராஜ்ஜியமாக மாறியுள்ளது இலங்கை. எந்த விடயத்தைத் தொட்டாலும் விசாரணைக் குழு, ஆலோசனைக் குழு, கண்காணிப்பு குழு என்று காளான்கள் போன்று முளைக்கின்றன. ஆனால் மனிதப் படுகொலை குறித்த உலக நாடுகளின் மையம், நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவினை அமைத்தவுடன், இறைமைக்கும் சவால் என்று கோபமடைகிறது அரசு.இறைமை என்கிற கவசத்தை அணிந்து, அதற்குப் பின்னால் மறைந்திருந்தவாறு இனப்படுகொலை புரிந்த 250 பேருக்கு மேற்பட்டோர் தண்டிக்கப்பட்ட வரலாற்றினை உலகம் பதிவு செய்திருக்கின்றது.

ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து ஆராயவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின் சந்து பொந்துகளிற்குள் நுழைந்து, அறிக்கைக்கு அடுத்ததாக நடைபெறப் போகும் நகர்வுகளை எவ்வாறு முகம் கொடுப்பது என்பது குறித்தே இக்குழு அலசி ஆராயும் போல் தெரிகிறது.

இவை தவிர, சூடான் அதிபர் ஓமர் அல் பசீரின் கற்றுக் கொண்ட பாடப் புத்தகத்திலிருந்து, சில பக்கங்களைப் புரட்டும் இலங்கை அரசு, அணிசேரா நாடுகள் மற்றும் சீனா, ரஷ்யாவின் உதவிகளை நாடிச் செல்ல ஆரம்பித்துள்ளது. இலங்கையின் இராஜதந்திர ஓட்டத்தில் புதிய வரவாக இந்தியாவும் இணைக்கப்படுகின்றது. குறிப்பாக ஆசிய நாடுகளை நோக்கி வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் விரைவுப் பயணங்களை மேற்கொள்ளும்போது, மேற்குலகை அணுகுவதற்கு, முன்னால் அமைச்சர் மிலிந்த மொரகொட களமிறக்கப்படுகின்றார்.

வெளியுறவுக் கொள்கை வகுப்பு விவகாரங்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட அறிவுரையாளராக, மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளாரென ஜனாதிபதி மேலதிக செயலாளர் டி.எஸ். குணரட்ன அண்மையில் தெரிவித்திருந்தார். ஆயினும் மேற்குலகம் தொடர்பான வெளியுறவுக் கொள்கைப் பிரிவில் மிலிந்தா செயற்படுவாரென்பதை ஊகிப்பது கடினமான விடயமல்ல. காய்களைச் சரியான வகையில் நகர்த்தி, போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு வியூகங்களை அரசு அமைத்தாலும், வெள்ளைக் கொடி விவகாரத்தில் குறி வைக்கப்படுபவர்களை, வெளிநாட்டின் தூதுவர்களாக நியமிப்பது மோசமான எதிர்விளைவுகளை உருவாக்கலாம்.

முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் தற்போதைய இலங்கைக்கான ஐ.நா. சபையின் வதிவிடப் பிரதிநிதியுமான கலாநிதி பாலித கோஹன்ன பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படலாமென்று செய்திகள் கசிகின்றன. முன்பு வெளியுறவுப் பிரிவில் அதிகாரியாகவிருந்த பி.எம். ஹம்சா, தற்காலிகத் தூதுவராக லண்டனில் செயற்படுகின்றார்.
இருப்பினும் வெள்ளைக் கொடி விவகாரத்தில் பாலித ஹோகன்னவின் நாமம், பரவலாகப் பேசப்படுவதால் தூதுவர் நியமனம் தள்ளிப் போடப்படக் கூடிய வாய்ப்புண்டு.

இறுதிப் போர் இடம்பெற்ற சரணடைவு விவகாரத்தில் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் பாலித கோஹன்ன பங்களிப்பு செய்திருப்பதனால் இது குறித்தான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஐ.நா. பாதுகாப்புச் சபை மேற்கொள்ளும் தீர்மானமொன்றின் அடிப்படையிலோ அல்லது “ரோம் சாசனத்தின் (Rome Statute) படி உருவாக்கப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாடொன்றின் வேண்டுதலின் பேரிலோ, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்ற வழக்குகள், விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமென்பது மரபு.

இங்கு வெட்டு வாக்கினை (Veto) கொண்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளையும் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை சுழற்சி முறையில் தெரிவாகும் நிரந்தரமற்ற 10 நாடுகளை உள்ளடக்கிய ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிபுணர் குழுவின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டால் தனது இராமபாணத்தை (Veto) நிச்சயம் பிரயோகிக்கப்போவதாக ரஷ்யா எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. எந்தப் பக்கத்தில் அதிக ஆதரவு இருக்கிறது என்பதைப் பொறுத்து, நவீன பொருண்மிய வல்லரசாளர் சீனாவும், இவ்வாறான தடை எதிர்ப்பு அஸ்திரத்தை பயன்படுத்தப் போவதாகக் கூறலாம்.

இருப்பினும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில், ஈரானின் அணு ஆயுத பரவலாக்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நான்கு பிரேரணைகளை எதிர்க்காமல் சீனா மௌனம் சாதித்ததை நினைவிற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது, இதே பாதுகாப்புச் சபையில், அரபு லீக்கின் ஆதரவோடு முன் வைக்கப்பட்ட தீர்மானம் 1973 இனை முறியடிக்க, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், லிபியா அதிபர் கடாபியை கைவிட்டது சீனா. இறைமை என்கிற கேடயத்தின் பின்னால் மறைந்திருந்து, தேசிய இனங்களின் உரிமைக் குரல் வளையை நசுக்கும் சில நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பதிலளிக்கும் கடமைப்பாடு உடையவர்கள் அல்லர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பாலஸ்தீனர்களை நசுக்கும் இஸ்ரேல், செச்னியர்களின் சுய நிர்ணய உரிமையை மறுக்கும் ரஷ்யா, காஷ்மீர் பிரச்சினையில் உலகம் தலையிடக் கூடாதெனக் கோரும் இந்தியா, திபேத், தைவான் என்பன தனது இறைமைக்கு உட்பட்ட பிரதேசங்களென பிடிவாதம் பிடிக்கும் சீனா, தேசிய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத முலாமிடும் இலங்கை போன்ற நாடுகள் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடவில்லை. ஆகவே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் குறித்து இவர்களுக்கு கவலையில்லை.

ஆனால் இலங்கைக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை ஒன்றினை குற்றவியல் நீதிமன்றம் முன்னெடுக்க வேண்டுமாயின் சாசனத்தை ஏற்றுக் கொண்டு கைச்சாத்திட்ட நாடுகளின் பிரஜைகள் எவராவது இதில் சம்பந்தப்பட்டிருந்தால் புதிய பிரச்சினையொன்று அங்குதான் ஆரம்பமாகும். அவுஸ்திரேலியா சார்பில் அன்றைய வெளிவிவகார அமைச்சராகவிருந்த அலெக்ஸாண்டர் டௌனரும் (Alexander Downer), சட்டமா அதிபர் டாரில் வில்லியம்சும் (Daryl Williams) 1 ஜூலை 2002 அன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற ரோம் சாசனத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 1 செப்டம்பர் 2002 இலேயே அது அமுலிற்கு வந்தது.

இரட்டைக் குடியுரிமை பெற்ற அவுஸ்திரேலிய பிரஜையான கலாநிதி, பாலித ஹோகன்ன மீது முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்திருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு பதிலளித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைமை வழக்குத் தொடுநர் லூயிஸ் மொறினோ ஒகம்போ (Luis Moreno Ocampo) குறிப்பிட்ட விவகாரம், வீட்டோ விளையாட்டிற்கு அப்பாலும் சில காத்திரமான தளங்கள் இருப்பதை உணர்த்துகிறது. ஒகம்போ, 21 ஏப்ரல் 2003 அன்று குற்றவியல் நீதிமன்றின் முதன்மை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டு 16 ஜூலை 2003 இல் பதவியேற்றார்.

நிபுணர் குழு அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே 1980 இல் கன்பரா வெளிவிவகார அமைச்சில் பணியாற்றிய வேளையில் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித கோஹன்னவின் விடயத்தை ஓகம்போ குறிப்பிட்ட விவகாரம், சிக்கலடையும் இலங்கை நிலைவரத்திற்கு புதிய பரிமாணமொன்றினை உருவாக்குவது போல் தெரிகிறது.
சர்வதேச நியாய ஆதிக்கம், நீதிக் கோட்பாடு என்பன வீட்டோ அதிகாரம் கொண்ட வல்லரசாளர்களால் பந்தாடப்படுவதனைப் பாதுகாப்புச் சபையில் காணக் கூடியதாகவிருந்தாலும் இறைமைக் கவசத்துள் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களை, தமது நலன் சார்ந்து கையாளும் நிலைமைகளும் தென்படுகின்றன.

ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, வத்திக்கான் போன்ற நாடுகளுக்கான இலங்கைத் தூதுவரும் முன்னாள் 52 ஆவது படைப் பிரிவின் தளபதியுமாகிய ஜகத் டயஸின் இராஜதந்திர அந்தஸ்தினை மீளப் பெறுமாறு அரசியல் சாசன மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மையம் (European Centre for Constitutional & Human Rights) கோரிக்கை விடுத்தாலும், டப்ளின் தீர்ப்பாயம் இனப்படுகொலையென்று தீர்ப்பளித்ததாகவும், சந்தேகத்திற்கு அப்பால் இறுதிப் போரில் மானிடத்திற்கெதிரான பெரும் குற்றம் நிகழ்ந்துள்ளதென ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டாலும், இதனை சர்வதேச நீதிக் கோட்பாட்டினை நிலை நிறுத்தும் எந்தக் களத்தில் முன் வைக்க முடியுமென்கிற கேள்வி எழுகிறது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற நடைமுறையில், புரோபிறியூ மொட்டூ (Propriu Motu) என்கிற சட்ட வழி முறையொன்று இருப்பதாக கூறப்படுகின்றது. கென்யாவில் நடைபெற்ற தேர்தல் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டோர் சார்பாக, இச்சட்ட வழிமுறையூடாக, முன் விசாரணைகளுக்கான நீதியாளர் மன்றத்தில் (Pre- Trial Chamber)விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர் ஊடாக முன்னெடுக்கப்படும் இந்த “புரோபிறியூ மொட்டூ’ விசாரணை குறித்த விடயத்தில் உள்ள அடிப்படையான நிபந்தனைகள் தொடர்பாக முதலில் பார்க்க வேண்டும். தனிப்பட்ட வகையில் விசாரணைகளையும் வழக்குகளையும் ஆரம்பிக்கக் கூடிய சுயாதீனத் தகைமை சட்டவாளருக்கு இருக்கிறதா என்கிற சூடான விவாதம், குற்றவியல் நீதிமன்றின் ரோம் சாசன பேச்சுவார்த்தையின் போது நடாத்தப்பட்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில் சரத்துக்கள் 13 (C), 15 மற்றும் 53 (1) என்பன சாசனத்தில் இணைக்கப்பட்டன.

அதன் நடைமுறைக் கோட்பாடுகளாக முன்வைக்கப்படும் குற்றச் செயல் தொடர்பான தகவல்களை ஆரம்பக் கட்ட பகுப்பாய்விற்கு சட்டவாளர் உட்படுத்த வேண்டும் என்பதோடு சரத்து 15 (2) இன் பிரகாரம், ஐ.நா. அமைப்புக்கள், அரசுகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நம்பிக்கையான மூலங்களிலிருந்து இத் தகவல்களைப் பெறலாமென்றும் கூறப்பட்டுள்ளது. பெறப்படும் தகவல்களின் காத்திரமான தன்மை குறித்து ஆய்வு செய்யும் குற்றவியல் நீதிமன்ற சட்டவாளர், விசாரணையை ஆரம்பிக்கக்கூடிய வலுவான அடிப்படையை அத் தகவல்கள் கொண்டிருந்தால் அதனை முன் விசாரணைக்கான நீதியாளர் மன்றத்திடம் கையளிக்கலாம்.

அத்தோடு தன்னிடமுள்ள சகல தகவல்களையும் அம்மன்றத்திடம் சட்டவாளர் சமர்ப்பிக்க வேண்டும். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் மன்றமும் சில நியமங்களைக் கருத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. அதாவது சரத்து 15 (4) இன் பிரகாரம், பொருத்தமான வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அவை முழுமையானதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நியாய ஆதிக்கத்திற்கு உட்பட்டவையாகவும் அத்தகவல்கள் இருக்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு குற்றவியல் நீதிமன்ற சட்டக் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளான போர்க் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் இன அழிப்பு என்பவற்றுள் இது அடங்குமாவென்பதனை முன் விசாரணைக்கான நீதியாளர் மன்றம் தீர்மானிக்க வேண்டும்.
ஆகவே பாதுகாப்புச் சபையின் தீர்மானம் இல்லாமல் மேற்குறிப்பிடப்பட்ட குற்றவியல் நீதிமன்றின் நடைமுறை சார்ந்த விவகாரங்கள், இலங்கை தொடர்பான விடயத்தில் எவ்வாறு கையாளப்படப் போகிறதென்பதனை சட்டவாளர் ஒகம்போ அவர்களின் செய்தி உணர்த்துகிறது.

இதயச்சந்திரன்