சிறிலங்காவினது விடயத்தில் அனைத்துலக நீதி முறைக்குத் தோல்வி ஏற்படுகிறதெனில் அது ஏனைய நாடுகளின் முரண்பாடுகளிலும் இதே நிலைமையினைத் தோற்றுவிப்பதற்கே வழிசெய்யும். இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட The Guardian  நாளேடு தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

 உண்மை மற்றும் பொறுப்புச்சொல்லும் செயல்முறை என்ற இரண்டையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துவிடமுடியாது என்றும் அனைத்துலக நீதியினது ஒரு தோல்விக்குக்கூட அனைவரும்தான் பொறுப்பு எனவும் காசாவிற்கான ஐ.நாவின் தகவல் திரட்டும் குழுவிற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட நீதியாளர் வென் றிச்சட் கோல்ட்ஸ்ரோன் [When Richard Goldstone] குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தக் கருத்தினை குறிப்பிட்ட இந்த ஐ.நா அணியில் இருந்தவர்கள் நிராகரித்திருந்தார்கள். ஐ.நாவிற்கு எதிரான வாதமாக மேற்குறித்த இந்தக் கதை பயன்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பானது இஸ்ரேலுக்கு எதிராக இயல்பாகவே நீதியற்றமுறையில் நடந்துகொள்வதாகவும் பிராந்தியத்தில் இடம்பெற்றது எதுவோ அதனை விசாரிக்கும் தார்மீக அதிகாரம் எதுவும் இதனிடம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. சிறிலங்கா தொடர்பாக கோல்ட் ஸ்ரோனினது அறிக்கை எங்கே எனச் சிலர் கோருகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளின் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சிறிலங்கா அரச படையினர் இராணுவ ரீதியில் தோற்கடித்த போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஐ.நாவினது வல்லுநர்கள் குழு தனது அறிக்கையினைத் தயாரித்திருக்கிறது.

காசா தொடர்பாக கோஸ்ட்ஸ்ரோனின் தலைமையான குழு தயாரித்த அறிக்கையினைப் போலவே வல்லுநர்கள் குழுவின் இந்த அறிக்கையும் கடுமையானது.

ஆதலினால் காசா தொடர்பாக அறிக்கையினைப் போலவே எந்தவிதமான நடவடிக்கையுமின்றி இந்த அறிக்கையும் அவ்வாறே கிடப்பிலிருக்கும் என்ற எண்ணமே தோன்றுகிறது.

உண்மை, பொறுப்புச்சொல்லும் செயன்முறை மற்றும் அனைத்துலக நீதி ஆகியவற்றை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துவிடமுடியாது என்ற செய்தியினையே இது தருகிறது.

போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நாட்டினது திறன் ஏனைய நாடுகளின் மோதல்களின்போது பொதுமக்கள் எவ்வாறு மோசமாக நடாத்தப்பட்டிருப்பார்கள் என்பதையே காட்டுகிறது.

சிறிலங்காவினது விடயத்தில் அனைத்துலக நீதி முறைக்குத் தோல்வி ஏற்படுகிறதெனில் அது ஏனைய நாடுகளின் முரண்பாடுகளிலும் இதே நிலைமையினைத் தோற்றுவிப்பதற்கே வழிசெய்யும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதி மாதங்களில் சிறிலங்கா அரச படையினர் பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல்களை நடாத்தியிருக்கிறார்கள், மருத்துவமனைகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடாத்தியிருக்கிறார்கள் மற்றும் தொண்டு நிறுவனப் பணியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

அதே போலவே விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய அதேநேரம் மோதல் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து தப்பிச்செல்லமுற்பட்ட பொதுமக்களை இலக்குவைத்து குறுகிய தூரத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இந்த இரட்டைக் கொடூரங்களின் விளைவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொண்டனர். போரின் இறுதி மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திய பாதுகாப்பு வலயங்கள் தினமும் கொடுமையும் காட்டுமிராண்டித்தனமும் கட்டவிழ்ந்துவிடப்பட்ட பிரதேசங்களாகின.

பொதுமக்களுக்கு எதிரான தாங்கள் ஒரு துப்பாக்கி ரவையினைக்கூட பயன்படுத்தவில்லை என அதிபர் மகிந்த ராஜபக்சவினது பணியகம் வாய்கிழியக் கத்திக்கொண்டிருக்க, உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களின் தலைகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன.

தொண்டு நிறுவனப்பணியாளர்கள் எவருமில்லை, ஒரு ஊடகவியலாளர் கூட அங்கில்லை, இருப்பினும் அது போரற்ற பாதுகாப்பு வலயமாம்.

இந்தக் கொடூரம் அரங்கேறி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இடம்பெற்ற சம்பவங்களை விசாரிக்கும் வகையிலான சுதந்திரமான விசாரணைக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தவேண்டியதுதான் இன்றைய இலக்கு.

இதுவிடயம் தொடர்பாக ஐ.நாவின் முனைப்புக்களை சிறிலங்கா தொடர்ந்தும் எதிர்த்து வருகிறது. ஒருகட்டத்தில் கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தின் முன்னால் பெருமெடுப்பிலமைந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினைக்கூட அது ஒழுங்குசெய்திருந்தது.

இந்த நிலையில் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக தானே இரண்டு விசாரணை அலகுகளை அமைத்திருந்தது சிறிலங்கா. ஆனால் இடம்பெற்ற குற்றங்களுக்கு இவர் தான் பொறுப்பு என இன்னமும் இந்த அலகுகள் எவரையும் இனங்காணவில்லை.

இதுபோல இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் முனைப்புக்கள் போரின் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்டிருக்கும் அமைதியினைச் சீர்குலைத்துவிடுமாம் என சிறிலங்காவினது ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கானதே இந்த வாதங்கள் என்பது தெளிவு.

சிறிலங்கா அரசாங்கத்தினது அனுமதியின்றி இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கான விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் தனக்கில்லை என செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறுகிறார். இல்லையேல் இதுபோன்றதொரு விசாரணைக்கு பாதுகாப்புசபை அனுமதியளிக்கவேண்டும் என்கிறார் அவர். சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் அது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஒரு தரப்பாக இல்லை.

ஆனால் செயலாளர் நாயகத்தினது இந்த வாதத்தினை மனித உரிமைக் கண்காணிப்பகம் நிராகரிக்கிறது. எவ்வாறு கடுமையாகப் போராடி வல்லுநர்கள் குழுவினை அமைத்தாரோ அதே வேகத்துடன் செயலாளர் நாயகம் தான் ஆரம்பித்து வைத்ததை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என மனித உரிமைக் காண்காணிப்பகம் கூறுகிறது.

‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.