1947 ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதல் தேர்தல் காலங்கள் தொடங்கி தேசியத்தின் தடம்மாறாது, நோக்கங்கள் பிசகின்றி தமது வாழ்வியல் நிலைகளை விட சுதந்திர உரிமைகளேயே வேட்கையாகக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள் திருக்கோணமலை வாழ் மக்கள் என்றால் மறுப்பதற்கு முடியாததாகும்.

திருக்கோணமலையின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட (1947) அமரர் சிவபாலன் தொடங்கி இன்று வரையிலான இரா. சம்பந்தன், க. துரைரெட்னசிங்கம் வரையிலான தெரிவுகளை பின்னோக்கிப் பார்த்தால் இதன் உண்மை புலனாகும். தந்தை செல்வநாயகம் அவர்களின் வழிகாட்டலில் தொடங்கிய இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்ப காலம் முதல் இன்று வரை தமிழ் தேசியத்தை நோக்காகக்கொண்ட சுதந்திர தாகத்தை திருக்கோணமலை மக்கள் பல தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். இதே சாயலாகக் கொண்டு திருக்கோணமலை நகராட்சிமன்ற மற்றும் நகரமும் சூழவும் பிரதேச சபை ஆகியவற்றின் தலைமைத்துவங்களை மக்கள் தேசியம் என்ற நிலை மாறாமல் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். இருப்பினும் அண்மையில் நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் சிங்களத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கியதேசியக்கட்சியில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இரு தமிழர்கள் (சு. பரசுராமன், ந. வரதன்) வெற்றிபெற்றிருந்தனர். இதற்காக மக்கள் சிங்கள கட்சி ஒன்றிற்கு தடம் மாறிவிட்டார்கள் என்று அர்த்தம் கொள்ளலாகாது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்காமையும் தற்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கமான பொதுஜன ஐக்கிய முன்னணியை தோற்கடித்து தமிழ் மக்கள் தமது தேசியத்தின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவதேயாகும். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்துவரும் பெரும் கட்சிகள் (U.N.P, S.L.F.P) எப்படியாவது தமது காலடிகளை திருக்கோணமலையில் பதித்துக்கொள்வதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்தாலும் அவர்களால் தமிழ் வேட்பாளர்களையே களமிறக்க முடிந்ததே தவிர ஒரு தமிழ் பிரதிநிதிகளையும் சிங்களகட்சிகளால் பெற முடியவில்லை என்பது வரலாறு. திருக்கோணமலையை தமதாக்கிக் கொள்வதற்கு சிங்களத்துக்கு பல தேசியத்தேவைகள் இருந்தன. இதற்கான சூழ்ச்சிகளை சிங்களக்கட்சிகள் பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்திருந்தன. அதற்காக முன்னெடுக்கப்பட்டவைகளில் குடியேற்றமும், பௌத்த ஆலயங்கள் ஸ்தாபிப்பும் முக்கியமானவையாகும். ( இது பற்றி விரிவாக ஆராயப்படவேண்டியது). இதனால் தமிழ் மக்கள் இன்றுவரை படும் நெருக்குவாரங்களோ அதிகம். தமது ஆதங்கங்களை அடக்கிக்கொண்டு வாழ்ந்து வருவது கவனிக்கத்தக்கதாகும். இவற்றையெல்லாம் வெளிப்படுத்துவதற்கு ஒரு வடிகாலாக வரும் தேர்தல்களை பயன்படுத்தி அதன் மூலம் தமது வெளிப்பாடுகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் ஓங்கிக்கூறி வருவார்கள். இலங்கைக்கு தலையாகவும், தமிழ்மக்களின் முக்கிய குறியீடுகளின் ஒன்றான யாழ்ப்பாணம் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், திருக்கோணமலை நகராட்சிமன்ற மற்றும் உறுப்பினர்களை கைப்பற்றுவதற்கு இது இலகுவான நேரம் என சிங்கள அரசு எண்ணியிருக்கலாம். அதற்காக என்னவிலை கொடுத்தாலும் நட்டமில்லை என அரசு திட்டமிட்டு கொண்டது. அதற்காக உறுப்பினர்களின் தனிப்பட்ட பல தேவைகள் விலையாக பேசப்பட்டிருக்கலாம். நிட்சயமாக அரசுக்கு தாவிய உறுப்பினர்கள் கூறுவது போன்று மக்களுக்கான அபிவிருத்தியாக இருக்கமுடியாது. (தனிப்பட்ட உறுப்பினர்களுக்கான அபிவிருத்தியாக இருக்கக்கூடும்) அல்லது ‘மக்களுக்காக’ என இவர்கள் கூறும் எந்தக் காரணங்களும் பொருத்தமுடையதாகாது. அதாவது கச்சையை விற்று மானத்தை காக்கவேண்டிய தேவை மக்களுக்கு இல்லை. எது எப்பிடியாயினும் அரசு ஒரு விடயத்தை புரிந்து கொள்ளல் அவசியமாகிறது. அதாவது தேசியத்தை நோக்கிய மக்களின் தெரிவு நேர்த்தியானது. அது என்றுமே மாறாது. இவற்றிற்கான ‘மக்கள் பதிலடியை’ நடந்து முடிந்த தேர்தல் மூலம் அரசு பெற்றிருக்கின்றதென்பது நிதர்சனமான உண்மை. நடந்து முடிந்த தேர்தல்களில் ஒரு கோணமாக பார்வையை விட்டால், இலங்கையிலே விடுதலைப்புலிகளை பின்னடைய வைத்ததற்கான சிங்கள மக்களின் நன்றியின் வெளிப்பாடே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வெற்றி. சுயநிர்ணயம், தாயகம், தன்னாட்சிக்காக இறுதிவரை போராடிய விடுதலைப் புலிகளின் அங்கீகாரம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த நன்றியின் வெளிப்பாடே இந்த வெற்றி. இதற்காக எதிர் நீச்சல் போட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபுறம், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் ஒருபுறம். இந்த களத்திலே பல வித்தியாசமான பிரச்சார உத்திகள் கையாளப் பட்டாலும் விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்திற்கு தமிழ்மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்பதே உண்மை. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இனிமேல் தான் யுத்தகாலம் ஆரம்பிக்க போகிறது. பிரிந்தவர்களை கூட்டி எடுப்பதும், சர்வதேசத்திற்கு தமிழ்மக்களின் போராட்டம் ஒரு ‘விடுதலைப் போராட்டமென’ தெளிவு படுத்த வேண்டியதான இரு கடமைகள் உள்ளது. இந்த நிலையை எட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது இரா. சம்பந்தனிடமோ உள்ளதென எண்ணலாகாது. இவர்கள் உட்பட புலம்பெயர்ந்த சமூகம் அடங்கலாக அனைத்து தமிழர்கள் தலையிலும் இந்த சுமை சுமத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை அறிதல் வேண்டும். இந்த சுமையை நேர்த்தியாக, தடம்மறாது, விலைபோகாது உரிய இடங்களுக்கு(சர்வதேசம்) இழுத்துக்கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் உள்ளது.

கனக கடாட்சம்